வழக்கு

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான சொல் இலக்கணம் இலக்கண அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.சொற்களின் இலக்கண வகை:1.பெயர்ச்சொல், 2. வினைச்சொல், 3. இடைச்சொல், 4. உரிச்சொல் என நான்கு.சொற்களின் இலக்கிய வகைகள்:1.இயற்சொல், 2.திரிசொல், 3.திசைச்சொல், 4.வடசொல் என நான்கு.

நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

வழக்கு பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

வழக்கு

நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். 

  • எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்.

"இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉ என்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்" - நன்னூல் 267

இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என்று இயல்பு வழக்கு மூன்றும், இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்று தகுதி வழக்கு மூன்றும் ஆகிய ஆறும் வழக்கு ஆகும்.

வழக்கு எத்தனை வகைப்படும்?

வழக்கு வகைகள்

  1. இயல்பு வழக்கு,
    • இலக்கணம் உடையது,
    • இலக்கணப் போலி,
    • மரூஉ என்பன ஆகும்.
  2. தகுதி வழக்கு
    • இடக்கரடக்கல்
    • மங்கலம்,
    • குழூஉக்குறி என்பன ஆகும்.

என வழக்கு இருவகைப்படும்.


வழக்கு

இயல்பு வழக்கு

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

இயல்புவழக்கு எத்தனை வகைப்படும்?

இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.

1. இலக்கணமுடையது
2. இலக்கணப்போலி
3. மரூஉ

இயல்பு வழக்கு

இலக்கணமுடையது

இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

இலக்கணமுடையது எடுத்துக்காட்டு

  • நிலம்,
  • மரம்,
  • வான்,
  • எழுது,
  • நீர்

இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன.இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் வழங்கி வரும் சொல்.

இலக்கணப்போலி

இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

  • இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
  • கிளையின் நுனியைக் கிளைநுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம்.
  • இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னார் முன்றில் என மாற்றி வழங்கினர்.

இலக்கணப்போலி எடுத்துக்காட்டு

  • புறநகர்,
  • கால்வாய்,
  • கடைக்கண்.
இலக்கண நெறி இலக்கணப்போலி
இல்முன் முன்றில்
நகர்ப்புறம் புறநகர்
கோவில் கோயில்

இல்முன், நகர்ப்புறம், கோவில் என வழங்குவதே இலக்கண நெறி ஆகும்.ஆனால் தொன்றுதொட்டுச் சான்றோரால் முன்றில், புறநகர், கோயில் என வழங்கப்படுவதால் இலக்கணப் போலி எனப்படுகின்றன.இவ்வாறு இலக்கண நெறி மாறி வழங்கி வரும் சொல் இலக்கணப்போலி எனப்படும்.

மரூஉ

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

  • நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.

மரூஉ எடுத்துக்காட்டு

இலக்கண நெறி மரூஉ
தஞ்சாவூர் தஞ்சை
திருநெல்வேலி நெல்லை
புதுச்சேரி புதுவை
கோயம்புத்தூர் கோவை
என் தந்தை எந்தை
பொழுது போது
சோழ நாடு சோணாடு
அ, இ என்னும் சுட்டுக்களே அந்த, இந்த, அந்த,இந்த
யாவர் என்னும் வினாப் பெயரே யார் யார்
எவன் என்னும் குறிப்புவினை என், என்ன என், என்ன

இவ்வாறு இலக்கண நெறியில் வழங்க வேண்டிய சொற்கள் சிதைந்து வழங்கிவருதல் மரூஉ எனப்படும்.

தகுதி வழக்கு

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

  • இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
  • இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி ஆகிய இம்மூன்றும் இப்பொருளை இச்சொல்லால் சொல்வது தகுதியன்று என்றும் வேறொரு சொல்லால் சொல்வது தகுதி என்றும் நினைத்துக் கூறுவதால் தகுதி வழக்கு எனப்பட்டன.

தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.

1. இடக்கரடக்கல்
2. மங்கலம்
3. குழூஉக்குறி

தகுதி வழக்கு

இடக்கரடக்கல்

இடக்கர் அடக்கல் என்பது, பலர் முன்னிலையில் சொல்லத் தகாத சொல்லை மறைத்து வேறு வாய்பாட்டால் சொல்வது ஆகும்.

இடக்கரடக்கல் எடுத்துக்காட்டு

  • குழந்தை வெளியே போய்விட்டது.
  • ஒன்றுக்குப் போய் வந்தேன்.
இலக்கண நெறி இடக்கரடக்கல்
மலம் கழுவி வருவதைக் கால் கழுவி வந்தான்

இவ்வாறு, பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

மங்கலம்

மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

மங்கலம் எடுத்துக்காட்டு

இலக்கண நெறி மங்கலம்
ஓலை திருமுகம்
கறுப்பு ஆடு வெள்ளாடு
விளக்கை அணை விளக்கைக் குளிரவை
சுடுகாடு , இடுகாடு நன்காடு
செத்தார் இயற்கை எய்தினார்

இவ்வாறு, மங்கலம் என்பது மங்கலம் அல்லாததை நீக்கிக் கூறுதல்

குழூஉக்குறி

குழூஉக் குறி என்பது ஒரு கூட்டத்தார் ஏதோ ஒரு காரணம் பற்றித் தம் கூட்டத்தார்க்கு மட்டும் பொருள் விளங்கும் வகையில் குறியீட்டுச் சொற்களை அமைத்துக் கூறுதல்

  • இவ்வாறு ஒரு குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

குழூஉக்குறி எடுத்துக்காட்டு

.
இலக்கண நெறி குழூஉக்குறி
பொற்கொல்லர் பயன்படுத்துவது பொன்னைப் பறி
யானைப்பாகர் பயன்படுத்துவது ஆடையைக் காரை
வசம்பு எனும் மருந்துப் பொருளைப் பெயர் சொல்லாதது எனச் சொல்லுதல்

இவ்வாறு, பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர்.

நினைவுகூர்க:

வழக்குச் சொற்களும் திருத்தமான சொற்களும்

ஆசிரியர்: மணி, நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை ?

மணி: நேத்து வவுத்து வலி, ஐயா. 

ஆசிரியர்: தமிழரசி, மணி சொன்னது சரியா?

தமிழரசி:  தவறு, 'நேற்று வயிற்று வலி' எனச் சொல்லுதல் வேண்டும் ஐயா.

வழக்குச் சொற்களை நீக்கித் திருத்தமான சொற்களை எழுதுக.

1. பள்ளிக்கு அருகாமையில் என் வீடு இருக்கிறது.

பள்ளிக்கு அருகில் என் வீடு இருக்கிறது.

2. என் வீட்லே யாருமே இல்லே.

என் வீட்டில் யாரும் இல்லை.

3. எம் ஊர் ஆத்துல தண்ணியே இல்லே.

எம் ஊர் ஆற்றில் தண்ணியே இல்லை.

4. என் அப்பா அதிகமா சிலவு செய்கிறார்.

என் அப்பா அதிகமாக செலவு செய்கிறார்.


இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்
இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம்


வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம்

(எ.கா.)-நிலம், மரம், (எ.கா.)-வாயில் (எ.கா.)-வாசல்

இடக்கரடக்கல்
மங்கலம்
குழூஉக்குறி
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல்
(எ.கா.) கால் கழுவி வந்தான். (எ.கா.) செத்தார் - இயற்கை எய்தினார் (எ.கா.) பொன்னைப் பறி

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad