தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.
திணை பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
பாடத்தலைப்புகள்(toc)
திணை என்றால் என்ன?
திணை என்பது, ஒழுக்கம், நாகரிகம், பிரிவு, குலம், இனம் முதலான, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகும்.
- திணை என்பதன் பொருள் - ஒழுக்கம்
திணை என்ற சொல்லின் பொருள்
சொல் இலக்கணத்தில் அமைந்த திணை என்பதன் பொருள், பிரிவு என்ற பொருளில் அமைகிறது.
இருதிணைகள் யாவை?
உயர்திணை, அஃறிணை என்னும் இரண்டு வகை திணைகளை இருதிணைகள் என்பர்.
தமிழ் இலக்கணத்தில் திணை எத்தனை வகைப்படும்?
திணை வகைகள்,
- உயர்திணை - உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்கள் (மக்கள், கடவுள்)
- அஃறிணை - உயர்திணை அல்லாத உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்கள் (கல், மரம்)
என இரண்டு வகைப்படும்.
இப்பாகுபாடு பிற திராவிட மொழிகளிலும், வடமொழியிலும் இல்லை மற்றும் பிற உலக மொழிகளிலும் காணப்படுவது இல்லை. தமிழ் மொழியில் மட்டுமே காணப்படுகிறது.
திணை அடிப்படையில், பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் எனப் பிரிக்கிறோம்.
- வீரன், அம்மா, நடிகன், கண்ணகி - உயர்திணைப் பெயர்கள்.
- பூ, மரம், பூனை, குருவி - அஃறிணைப் பெயர்கள்
>
உயர்திணை
உயர்திணை என்பது பகுத்தறிவு கொண்ட மக்கள், தேவர், நரகர் ஆகிய மூவரையும் குறிக்கும்.
உயர்திணை எடுத்துக்காட்டு
- மக்கள் – ஆண், பெண்
- தேவர் – கந்தன், திருமால், வள்ளி
- நரகர் – அரக்கண், சூரன்
அஃறிணை
அஃறிணை என்பது மக்கள், தேவர், நரகர் அல்லாத பிற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களைக் குறிக்கும்.
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
அஃறிணை எடுத்துக்காட்டு
- உயிருள்ள அஃறிணை பொருட்கள் – மரம், மயில், பசு
- உயிரற்ற அஃறிணை பொருட்கள் – காற்று, மலை, கடல், தலை, கை, கால்
இவற்றில் தலை, கை, கால் என்ற மனித உறுப்புகளும் அஃறிணையில் அமைந்துள்ளதைக் காணலாம்.
மனிதன் உயர்திணையில் அமைந்திருக்க அவனது உடல் உறுப்புகள் மட்டும் எப்படி அஃறிணை ஆயின என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்.
ஏனெனில், ஒட்டு மொத்த மனிதனைக் குறிக்கும் போது மட்டுமே உயர்திணைப் பெயரில் அமையும். தனித்தனி உறுப்புகளாகப் பிரித்துவிட்டால் அவை அஃறிணைப் பொருட்களே.
பொதுப் பெயர்
உயர்திணைக்கும், அஃறிணைக்கும், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் பொதுப்பெயர் எனப்படும்.
பொதுப் பெயர் எடுத்துக்காட்டு
- தான்,
- தாம்,
- எல்லாம்.
நினைவுகூர்க
தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.
நான் | வருகின்றேன் |
அவன் | வருகின்றான் |
அது | வருகின்றது |
அவை | வருகின்றன |
நீ | வருகின்றாய் |
வினைமுற்றுச் சொல்லில் உள்ள விகுதியைக் கொண்டே பால், எண், திணை, இடம், காலம் எல்லாவற்றையும் காணமுடியும்.
காலம், இடம், பால், திணை, எண் வேறுபாடு
வினைசொல் | பால் | எண் | திணை | இடம் | காலம் |
---|---|---|---|---|---|
வருகின்றான் | ஆண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வருகின்றாள் | பெண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வருகின்றது | ஒன்றன்பால் | ஒருமை | அஃறிணை | படர்க்கை | நிகழ்காலம் |
வந்தான் | ஆண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வந்தாள் | பெண் | ஒருமை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வந்தது | ஒன்றன்பால் | ஒருமை | அஃறிணை | படர்க்கை | இறந்தகாலம் |
வருகின்றார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | நிகழ்காலம் |
வந்தார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | இறந்தகாலம் |
வருவார்கள் | பலர்பால் | பன்மை | உயர்திணை | படர்க்கை | எதிர்காலம் |
வந்தேன் | ஆண் | ஒருமை | உயர்திணை | தன்மை | இறந்தகாலம் |
வருவோம் | பலர்பால் | பன்மை | உயர்திணை | தன்மை | எதிர்காலம் |
வந்தன | பலவின்பால் | பன்மை | அஃறிணை | படர்க்கை | இறந்தகாலம் |
கீழுள்ள பத்தியில் அடிகோடிட்ட சொற்களில் உயர்திணைப் பெயர்ச்சொற்களையும் அஃறிணைப் பெயர்ச்சொற்களையும் எடுத்து எழுதுக.
அரசன் வேட்டையாடுவதற்குக் காடு சென்றான். அவனுடன் வீரர்களும் சென்றார்கள்; பணியாளர்கள் சிலரும் சென்றார்கள். காட்டில் மான்கள் ஓடின; மலைப்பாம்பு ஊர்ந்தது. திடீரென்று காற்று கடுமையாக வீசியது; மரங்கள் முரிந்தன. ஆந்தைகள் அலறின. அதனைப் பார்த்துக் குரங்குகள் அச்சம் கொண்டன; அரண்மனையில் அரசி கவலையுடன் இருந்தாள். அமைச்சர், தளபதி ஆகியோரும் கவலையுடன் இருந்தனர்.
உயர்திணைப் பெயர்ச்சொற்கள்
அரசன், பணியாளர்கள், அமைச்சர், தளபதி
அஃறிணைப் பெயர்ச்சொற்கள்
காடு, மலைப்பாம்பு, மரங்கள், ஆந்தைகள், குரங்குகள்
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்
உயர்திணை
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா
அஃறிணை
வயல், குதிரை, மரம், கடல், புத்தகம்
தொடர்புடையவை
- தமிழ் இலக்கணத்தில் காலம் எத்தனை வகைப்படும்?
- திணை உட்பிரிவு என்ன?
- இடம் எடுத்துக்காட்டு?
- அஃறிணைக்குரிய பால்கள் யாவை?
- எண் பற்றி கூறுக ?
Please share your valuable comments