சொலவடைகள் - Complete List of Tamil Solavadaigal with Meaning for TNPSC Notes

ManiMegala 0

சொலவடைகள் பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும். இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும். பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். 

 TNPSC Group 2, 2A, 4 (VAO), TET போன்ற போட்டித்  தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்கணப் பிரிவின் கீழ் கேட்கப்படும் "உவமைத் தொடரின் பொருளறிதல் - வாசித்தல், புரிந்து கொள்ளும் திறன்","சொலவடைகள் " மற்றும் "பழமொழிகள்" ஆகிய தலைப்புகள் எளிதாக மதிப்பெண்களைப் பெற்றுத் தரக்கூடியவை. 

மேலும், மாணவர்களின் பயிற்சிக்குத் தேவையான TNPSC Model Questions (மாதிரி வினாக்கள்) மற்றும் சுய தயாரிப்பிற்கு உதவும் Free Study Materials PDF பதிவிறக்க லிங்க் ஆகியவையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

பழமொழிகள் தமிழ் விளக்கம் இங்கே உவமை அணி விளக்கம் இங்கே உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC பொதுத்தமிழ் சொலவடைகள் (7th Tamil Solavadaigal notes)

TNPSC குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்குத் தேவையான 7th Standard New Tamil Book (ஏழாம் வகுப்பு தமிழ் புதிய பாடப்புத்தகம்) இயல்-1 இல் இடம்பெற்றுள்ள முக்கியமான சொலவடைகள் (Tamil Solavadaigal) அவற்றின் விளக்கங்களுடன் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 

  • பழமொழி என்பது ஒரு உலகளாவிய வாழ்க்கை உண்மையை அல்லது நீதியை நேரடியாகப் போதிப்பது.
  • சொலவடை என்பது பேச்சு வழக்கோடு கலந்து, கதைகளிலும் உரையாடல்களிலும் சூழலுக்கு ஏற்ப நையாண்டியாகவோ அல்லது விளக்கமாகவோ பயன்படுத்தப்படும் நாட்டுப்புறத் தொடர் ஆகும்.
அம்சம் (Feature) சொலவடை (Solavadai) பழமொழி (Palamozhi) உவமைத் தொடர் (Uvamai Thodar)
பொருள் (Definition) பேச்சு வழக்கின் அழகிற்காகவும், ஒரு சூழ்நிலையை நயமாக விளக்கவும் பயன்படுத்தப்படும் சிறுசிறு சொற்றொடர்கள். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் கண்டறிந்த உண்மைகளையும் அறிவுரைகளையும் கூறும் தொடர்கள். ஒரு பொருளை அல்லது செயலை, அதோடு தொடர்புடைய மற்றொரு சிறந்த பொருளோடு ஒப்பிட்டுக் கூறும் தொடர்.
வடிவம் (Structure) பெரும்பாலும் வட்டாரப் பேச்சு மொழியிலேயே (Dialect) அமைந்திருக்கும். எழுத்து வடிவம் குறைவு. ஓசை நயத்துடனும், எதுகை, மோனையுடனும் இலக்கியத் தரமான வாக்கியங்களாக அமைந்திருக்கும். பெரும்பாலும் 'போல', 'புரைய' போன்ற உவம உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வரும் சுருக்கமான தொடர்.
நோக்கம் (Purpose) ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை, நையாண்டி (Wit) அல்லது நகைச்சுவையுடன் ஒப்பிட்டுக் காட்டுவது இதன் நோக்கம். மக்களுக்கு ஒரு அறிவுரையையோ, நீதியையோ அல்லது எச்சரிக்கையையோ வழங்குவது இதன் நோக்கம். கூற நினைக்கும் கருத்தை அல்லது குணத்தை மிக எளிதாகவும் தெளிவாகவும் புரிய வைப்பது இதன் நோக்கம்.
எடுத்துக்காட்டு (Example) "அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது" (ஒரு இக்கட்டான சூழ்நிலையை விவரிக்கிறது). "சிறு துளி பெரு வெள்ளம்" அல்லது "யானைக்கும் அடி சறுக்கும்" (உலகளாவிய வாழ்க்கை தத்துவத்தைக் கூறுகிறது). "மடைதிறந்த வெள்ளம் போல" (தடையின்றி வேகமாக வருவதைக் குறிக்கிறது) அல்லது "உள்ளங்கை நெல்லிக்கனி போல" (தெளிவைக்குறிக்கிறது).
TNPSC பொதுத்தமிழ் சொலவடைகள் பழமொழிகள் விளக்கங்கள்

சொலவடைகள் எடுத்துக்காட்டு - Tamil Solavadaigal with Examples

கீழே உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தி 7-ஆம் வகுப்பு பொதுத்தமிழ் சொலவடைகளின் பொருளை எளிதாகக் கண்டறியலாம்.

சொலவடைளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை

வ.எண் கதையில் இடம்பெற்ற சொலவடைகள் (Solavadaigal) பொருள் / சூழல் (Meaning & Context)
1 அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம். தானிருக்கும் மோசமான அல்லது குறுகிய நிலையையே சிறந்தது என எண்ணித் திருப்தி அடைதல்.
2 அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி. பெரிய இன்னல்கள் நீங்கினாலும், சிறிய தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது.
3 அதிர அடிச்சா உதிர விளையும். கடுமையான உழைப்பிற்கும் முயற்சிக்கும் உரிய பலன் நிச்சயம் உண்டு.
4 அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல. வேறொரு வழி இன்றி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பது.
5 அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான். ஆபத்தை உணராமல் கண்ணை மூடிக்கொண்டுச் செயல்படுவது.
6 அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. கடந்த காலத்தையும், இழந்த வாய்ப்பையும் மீண்டும் பெற முடியாது.
7 அவப்பொழுது போக்குவதிலும் தவப்பொழுது நல்லது. காலத்தை வீணாக்குவதை விட, பயனுள்ள காரியங்களைச் செய்வது சிறப்பு.
8 அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது. நேரடியாகத் துன்பம் தருபவரை விட, மறைமுகமாகத் தொல்லை தருபவர் ஆபத்தானவர்.
9 ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். ஒரு சிறிய தீமை ஒரு பெரிய குழுவையே அழித்துவிடும்.
10 ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும். தன் கையே தனக்கு உதவி; பிறரை நம்பியிராமல் தன் வேலையைத் தானே செய்ய வேண்டும்.
11 இருப்பவனுக்குப் புளியேப்பம்; இல்லாதவனுக்குப் பசியேப்பம். வசதி உள்ளவருக்கும் இல்லாதவருக்கும் வெவ்வேறு விதமான கவலைகள் இருக்கும்.
12 உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும். உழைப்பவருக்கு மட்டுமே சமூகத்தில் மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும்.
13 எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற மாதிரி. தொடர் முயற்சியால் கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.
14 கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி. அரிதாகக் கிடைக்கும் வாய்ப்பு அல்லது மிகுந்த மகிழ்ச்சியான தருணம்.
15 காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும். ஒரு கஷ்டத்தை அனுபவிப்பவருக்கே அதன் முழு வலியும் புரியும்.
16 குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம். வயிற்றுப் பசி போன்ற அடிப்படைத் தேவையை விட ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் தருவது.
17 குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலா? எதிர்வரும் சூழ்நிலையைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி இருத்தல்.
18 தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம. உதவி செய்ய யாருமற்ற தனிமை நிலை.
19 நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா? தகுதிக்கு மீறிய செயலைச் செய்ய முயன்று தோல்வி அடைவது.
20 நாலு வீட்டில கல்யாணமாம்; நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம். ஒழுங்கான திட்டமிடல் இன்றி அங்கும் இங்கும் அலைந்து நேரத்தை வீணடித்தல்.
21 நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற மாதிரி. முன்னெச்சரிக்கை இன்றி ஒரு செயலில் இருந்து சட்டென விலகி ஓடுவது.
22 பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா? தகுதியில்லாத அல்லது பயனில்லாத ஒரு விஷயத்திற்காக உழைப்பது வீண்.
23 புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? ஒருவரின் பிடிவாத குணத்தை மாற்றுவது கடினம்.
24 வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகைங்கிற மாதிரி. ஒன்றுக்கொன்று சேராத முரண்பட்ட குணங்கள் அல்லது பகை.

சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை ஒன்றைப் பொம்மலாட்டமாகப் பார்ப்போம்.

கீழே உள்ள வீடியோவில், சொலவடைகளுடன் கூடிய இந்த நாட்டுப்புறக் கதையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கீழே பொம்மலாட்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து உங்கள் TNPSC பொதுத்தமிழ் தயாரிப்பை எளிதாக்குங்கள்!



கதைசொல்லி : பெரியோர்களே! தாய்மார்களே! குழந்தைகளே! நாம இன்னிக்கு 'ஆளுக்கு ஒரு வேலை' என்னும் கதையைப் பொம்மலாட்டமாப் பாக்கப் போறோம்.

இந்தப் பையன்தான் நம்ம கதைநாயகன். இவன் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகாம ஊரைச் சுத்திக்கிட்டு வருவான். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.

"புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?" அவனோட புடிவாதத்தை யாராலும் மாத்த முடியல. ஒருநாள் அப்பா பையனக் கூப்பிடுறாரு.

அப்பா: "அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது". இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையில முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு.

பையன் : படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

கதைசொல்லி : "வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகைங்கிற மாதிரி" இந்தப் பயகிட்ட போராடித்தான் படிக்க வைக்கணும். "எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற" மாதிரி இவனைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்னு நினைக்குறாரு அவங்க அப்பா. பொறுமையா அறிவுரை சொல்றாரு. ஆனா பையன் கேக்கல.

பையன்: போப்பா, பள்ளிக்கூடம் போற வேலையெல்லாம் எனக்கு ஒத்து வராது.

கதைசொல்லி : அப்பாவுக்குக் கோபம் வருது. சத்தம் போடுறாரு. சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க.

அம்மா : ராசா, "உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும்". நீ படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க.

கதைசொல்லி : "அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுங்கிற" மாதிரி அப்பா விட்டாலும் அம்மா விடமாட்டாங்க போல இருக்குன்னு நெனச்சுப் பையன் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அவனுக்குப் படிக்கப் பிடிக்கல. "நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற" மாதிரிப் பள்ளிக்கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்குறான். விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒண்ணு போய்கிட்டு இருக்கு

பையன்: எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?

எறும்பு: போ! போ! உனக்குத் தான் வேலை இல்ல. "குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்". எனக்கு நெறைய வேல கிடக்கு. நான் எங்குழந்தைகளுக்குத் தீனி கொடுக்கணும். அரிசி, நொய் எல்லாம் சேகரிக்கணும். "சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?" நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.

பையன்: தேனீ! தேனீ!  என் கூட விளையாட வர்றியா?

தேனீ: "நல்ல பாம்பு படம் எடுக்கலாம்: நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?" உனக்குத்தான் வேலை இல்லை. "ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்." உன்னைப் போல ஒரு ஆளு இருந்தா எங்கக் கூட்டமே கெட்டுப் போயிடும். எனக்குத் தேன் எடுக்குற வேலை இருக்கு. போ! போ!

பையன் : உங்க கூட்டத்தில ஆயிரம் தேனீ இருக்கே, நீ ஒரு ஆளு தேன் எடுக்கலன்னா என்ன கொறைஞ்சா போயிடும்?

தேனீ: "ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்." பூவெல்லாம் குறுகி மூடுறதுக்குள்ள நான் தேனெடுக்கப் போகணும்.

கதைசொல்லி : தேனீயும் போயிடுது. பையன் கொஞ்சம் தூரம் நடக்குறான். ஒரு வீட்டு வாசலில் பொதிமாடு ஒண்ணு நின்னுக்கிட்டு இருக்கு.

பையன்: மாடே! மாடே! சும்மாதானே இருக்கே.ஏங்கூட விளையாட வாரியா?

மாடு: என்னது! சும்மா இருக்கிறேனா? "காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்." இப்போ உனக்குத்தான் வேலை இல்லை. "இருப்பவனுக்குப் புளியேப்பம்: இல்லாதவனுக்குப் பசியேப்பம்." நான் என் முதலாளிக்கு உப்புமூட்டை, புளிமூட்டை எல்லாம் சுமக்கணும். நான் வரல. அதோ அந்த ஆமைகிட்ட போய் விளையாடு.

பையன்: ஆமையே! ஆமையே! "நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்" என்கிற மாதிரி எங்கே வேகமாகப் போயிட்டு இருக்கே? ஏங்கூட விளையாட வாரியா?

ஆமை: என்னைவிட வேகமாக ஓடுற முயலோட போட்டி வச்சிருக்கேன். "அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க." நான் கொஞ்ச நேரம் கூட வீணாக்காமல் நடந்தே ஆகணும்.

பையன் : "பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?" நீ ஓடி ஓடிப் பார்த்தாலும் முயலை முந்த முடியுமா?

ஆமை : "அதிர அடிச்சா உதிர விளையும்." அது மாதிரி முயற்சி செஞ்சா எல்லாம் முடியும். நீ வேணும்னா அதோ அங்கே படுத்திருக்கிற முயல் கூடப் போய் விளையாடு.

கதைசொல்லி: பையன் கொஞ்ச தூரத்தில் படுத்திருகிற முயல் கிட்டப் போறான்.

பையன் : முயலே! முயலே! "குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற" மாதிரி கவலையே இல்லாம படுத்திருக்கியே, வா விளையாடலாம்.

முயல் : "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு" சொல்லுற மாதிரி, நிழலில் படுத்துத் தூங்கினதால போனதடவை ஆமையிடம் தோத்துப் போய்ட்டேன். இந்தத் தடவையாவது நான் முந்தி ஆகணும். அதனால நான் வேகமா ஓடணும். நீ வேணும்னா அதோ அங்கே இருக்குற குட்டிச்சுவருகூடப் போய் விளையாடு.

கதைசொல்லி: அந்தப் பையன் "கார்த்திகை மாசம் பிறைய கண்ட" மாதிரி விளையாட ஆள் கிடைச்சிடுச்சுனு நினைச்சு அந்தக் குட்டிச்சுவரு மேலே ஏறிக் குதிச்சுக் குதிச்சு விளையாடுறான். அது ரொம்பப் பழைய சுவரு. மழையிலவேற நல்லா ஊறி இருக்கு. இவன் ஏறிக் குதிச்சதும் பொல பொலன்னு இடிஞ்சு விழுது. அதுல இருந்த பூச்சி, எறும்பு, வண்டு எல்லாம் வெளியில வருது.

எறும்பு: அடப்பாவி, நாங்களே "அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்லனு" நினைச்சு "தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம இருக்கோம்." உனக்குத்தான் வேலை இல்லைன்னா நாங்க பாடுபட்டுச் சேர்த்து வச்ச பொருளை எல்லாம் இப்படிப் போட்டு உடைச்சிட்டியே!

கதைசொல்லி : எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோட அவன் கையில கால்ல ஏறி நறுக்கு நறுக்குன்னு கடிக்குதுக. "அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு" அந்தப் பையன் வலி பொறுக்க முடியாம கத்திக்கிட்டு ஓடுறான். "அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்" என்கிற மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் ஏறி விழுந்து வீட்டுக்கு ஓடி வந்து சேருறான்.

பையன் : அம்மா! அம்மா! ஊரு உலகத்துல எல்லாரும் அவங்க அவங்க வேலையப் பாக்குறாங்க. ஈ எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது. என்னோட வேல படிக்கிறதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. இனிமே நானும் சும்மா இருக்காம. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயிப் படிப்பேன்.

கதைசொல்லி: அதுக்குப்பிறகு அந்தப் பையன் நல்லபடியா படிக்கத் தொடங்கறான். ஆளுக்கு ஒரு வேலைன்னு எல்லாருக்கும் புரிய வைக்கிறான். இத்தோட கதை முடியுது. இதுவரைக்கும் பொறுமையா இருந்து பொம்மலாட்டத்தைப் பார்த்த உங்கள் எல்லாருக்கும் நன்றி... நன்றி... நன்றி!

உவமை அணி விளக்கம்

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

பழமொழிகள்(Tamil Proverbs and Meanings in English)

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள் (Proverbs)விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

உவமைத் தொடர்கள் (Idioms) - 8ம் வகுப்பு 

உவமைத் தொடர்கள் (Idioms) மற்றும் பழமொழிகள் (Proverbs) தமிழ் மொழியின் செழுமையை வெளிப்படுத்துவதோடு, ஒரு கருத்தை ஆழமாகவும் சுருக்கமாகவும் கூற உதவுகின்றன.

உதவிக்குறிப்புகள் & மூலங்கள் (References)

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO) Tamil Model Questions and Answers

1. "அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது" - இச்சொலவடை உணர்த்தும் சரியான பொருள் யாது?

A) இழந்த வாய்ப்பை மீண்டும் பெற முடியாது
B) கடுமையான உழைப்பு வீண் போகாது
C) காலத்தை வீணாக்குவது நல்லது
D) தகுதிக்கு மீறிய ஆசை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) இழந்த வாய்ப்பை மீண்டும் பெற முடியாது

2. "அதிர அடிச்சா உதிர விளையும்" - என்ற சொலவடையின் மூலம் நாட்டுப்புற மக்கள் வெளிப்படுத்தும் பண்பு எது?

A) சோம்பேறித்தனம்
B) விடாமுயற்சி மற்றும் உழைப்பு
C) கோப குணத்தின் வெளிப்பாடு
D) வறுமையின் கொடுமை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) விடாமுயற்சி மற்றும் உழைப்பு

3. பொருத்துக:
(அ) குத்துக்குல்லுக்கு - 1. தனிமை நிலை
(ஆ) தட்டிப்போட்ட ரொட்டிக்கு - 2. கவலையின்றி இருத்தல்
(இ) புண்ணுக்கு மருந்து - 3. பகை குணம்
(ஈ) வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் - 4. பிடிவாத குணம்

A) 2, 1, 4, 3
B) 1, 2, 3, 4
C) 4, 3, 2, 1
D) 2, 4, 1, 3
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) 2, 1, 4, 3

4. "பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?" - இச்சொலவடைக்கு இணையான உவமைத் தொடரைத் தேர்நெடு.

A) விழலுக்கு இறைத்த நீர் போல
B) குன்றின் மேலிட்ட விளக்கு போல
C) நகமும் சதையும் போல
D) இஞ்சிய தின்ற குரங்கு போல
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) விழலுக்கு இறைத்த நீர் போல (பயனற்ற செயல்)

5. "அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது" - இதில் 'கிள்ளுறவன்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?

A) நேரடியாக உதவி செய்பவர்
B) நேரடியாகத் துன்பம் தருபவர்
C) மறைமுகமாகத் தொல்லை தருபவர்
D) பசிக்கு உணவு தருபவர்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) மறைமுகமாகத் தொல்லை தருபவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.