பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைத்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு: வேற்றுமையும் உண்டு. பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகியவற்றின் நுட்பங்களை அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

மொழி

மொழி என்றால் என்ன?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும். 

அஃது ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து, செயல்பட உதவுகிறது. மொழியின் மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மொழி இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது.

தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக்கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.

மொழி எத்தனை வகைபடும்?

மொழியின் இரு வடிவங்கள் யாவை?

மொழியின் வடிவங்கள்,
  • பேச்சுமொழி
  • எழுத்துமொழி

பேச்சுமொழி

வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும். 

இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை.

எழுத்துமொழி

 கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழியாகும். 

இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை. 

நேரில் காண இயவாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கும் எழுத்துமொழியே காரணமாகின்றது. ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடிப் பயன்பாட்டிற்கு உரியது. வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் உரியது. 

உலகில் சில மொழிகள் பேச்சுமொழியாக மட்டுமே உள்ளன. சில மொழிகள் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன. 

ஆனால் தமிழ்மொழியில் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.

பேச்சுமொழி

பேச்சுமொழி என்றால் என்ன?

மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர். 

பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும்; 

அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. 

பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.

பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு

பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் வேறுபடும்.

  • எடுத்துக்காட்டாகக் 'குழந்தையை நல்லாக் கவனிங்க' என்று கூறும்போது 'கவனி' என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகிறது.
  •  'நில், கவனி, செல்' என்பதில் 'கவனி' என்னும் சொல் நின்று, கவனித்துச் செல் என்னும் 'பாதுகாப்புப் பொருளைத் தருகிறது'.

அதுபோலவே ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும். 

  • எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும்போது மறுப்பை உணர்த்துகிறது. 
  • மென்மையாக ஒலிக்கும்போது இயலாமையை உணர்த்துகிறது. 

ஒரு தொடரில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்பப் பேச்சுமொழியில் பொருளும் வேறுபடும். 

  • எடுத்துக்காட்டாக 'நான் பறவையைப் பார்த்தேன்' என்னும் தொடரில் 'நான்' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், 'பறவையைப் பார்த்தது யார்? என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.
  •  'பறவையை' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் 'நீ எதைப் பார்த்தாய்?' என்னும் வினாவுக்கு விடையாக அமையும். 
  • 'பார்த்தேன்' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் 'நீ பறவையை என்ன செய்தாய்?' என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

'பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்'

-மு.வரதராசனார்(alert-success)


இவ்வாறு சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை,

"எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்"

-நன்னூல்(code-box)

என்னும் நன்னூல் நூற்பா உணர்த்துகிறது.

வட்டாரமொழி

வட்டாரமொழி எனப்படுவது யாது?

பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

எடுத்துக்காட்டாக .

'இருக்கிறது' என்னும் சொல்லை 

  • 'இருக்கு', 
  • 'இருக்குது'
  •  'கீது' 

என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லுவர். 

இத்தகைய வேறுபாடுகள் காரணமாகவே வட்டார வழக்குகள் தோன்றுகின்றன.

கிளைமொழி

கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு. வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழியைக் கிளைமொழி என்பர். 

  • கன்னடம், 
  • தெலுங்கு, 
  • மலையாளம் 

முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

எழுத்துமொழி

பேச்சுமொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும்.

ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. 

பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது. எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும். 

எடுத்துக்காட்டாக,

முற்காலத்தில் இருபதாம் நூற்றாண்டு வரை ணா, றா, னா - என எழுதினர். 

அதேபோல ணை, லை, ளை, னை -என எழுதினர். 

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

  • பேச்சுமொழியை உலக வழக்கு என்றும்,
  •  எழுத்துமொழியை இலக்கிய வழக்கு என்றும்

 கூறுவர். 

பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. 

  • பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும். 
  • எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். 

எடுத்துக்காட்டாக

  •  'நல்லாச் சாப்ட்டான்' என்பது பேச்சுமொழி.
  •  'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது எழுத்துமொழி.


பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

-தொல்காப்பியர்(alert-passed)


பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். 

எழுத்துமொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு.

 'உம்', 'வந்து' போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால் எழுத்து முறையில் இவை இடம் பெறுவதில்லை.

பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அஃது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்துமொழியில் இடமில்லை.


கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.


எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழிநடையில் அமைகிறது. ஆனால் பேச்சுமொழியில் சிந்திப்பதற்கான நேரம் குறைவு: திருத்திக்கொள்ள வாய்ப்பும் இல்லை. எனவே பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.

பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைந்து வருகிறது. எழுத்துமொழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும் பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஆனால் எழுத்துமொழியில் பெரும்பாலும் மொழித்தூய்மை பேணப்படுகிறது.

பேச்சுமொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பதும் உண்டு. 

  • 'இ' என்பதை 'எ' என்றும் 'உ' என்பதை 'ஒ' என்றும் மாற்றி ஒலிப்பர்.
  •  எடுத்துக்காட்டாக 'இலை' என்பதை 'எல' என்றும் 'உலகம்' என்பதை 'ஒலகம்' என்றும் ஒலிப்பர். 

இம்மாறுபாடுகள் எழுத்துமொழியில் இல்லை.

ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழியும் தேவைப்படுகின்றன. இவ்விரு வடிவங்களையும் சரியாக அறிந்து கொண்டால் மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர். மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது; பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேச்சுத்தமிழில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. ஆனால் ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் தாய்மொழியைச் சிதையாமல் காக்க முடியும்.

"எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
 இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
 வெளியுலகில், சிந்தனையில் புதிதயுதிதாக
 விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
 தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
 செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்."

-பாரதிதாசன்(code-box)

என்பது பாவேந்தரின் ஆசை. அதன்படி நம் செந்தமிழ்மொழி செழுந்தமிழாய் விளங்கப் பாடுபடுவோம்.

பயிற்சி 

1. உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதி வருக.

(எ.கா.) 

பேச்சுமொழி : அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு வேணும்.

எழுத்துமொழி : அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.

2. பேசும்போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. 'ஆ' என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்துவழக்குச் சொற்களையும் எழுதுக.

(எ.கா.) 

சொல்லு - சொல்

நில்லு - நில்

வந்தியா - வந்தாயா?

சாப்ட்டியா - சாப்பிட்டாயா?

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மொழியின் முதல்நிலை பேசுதல், ......... ஆகியனவாகும்.

அ) படித்தல்

ஆ) கேட்டல்

இ) எழுதுதல்

ஈ) வரைதல்

2. ஒலியின் வரிவடிவம் ....... ஆகும்.

அ) பேச்சு

ஆ) எழுத்து

இ) குரல்

ஈ) பாட்டு

3. தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று

ஆ) இந்தி

இ) தெலுங்கு

அ) உருது

ஈ) ஆங்கிலம்

4. பேச்சுமொழியை  ......... வழக்கு என்றும் கூறுவர்

அ) இலக்கிய

ஆ) உலக

இ) நூல்

ஈ) மொழி

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது. 

சரி

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

சரி

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.

தவறு (சரி - பேச்சு மொழி)

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

தவறு( சரி - குறைவு)

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

சரி

குறுவினா

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

2. பேச்சுமொழி என்றால் என்ன?

3. வட்டாரமொழி எனப்படுவது யாது?

சிறுவினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

2. கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

TNPSC previous year questions and answers 

1. மொழியின் முதல்நிலை பேசுதல், ......... ஆகியனவாகும்.

அ) படித்தல்

ஆ) கேட்டல்

இ) எழுதுதல்

ஈ) வரைதல்

2. ஒலியின் வரிவடிவம் ....... ஆகும்.

அ) பேச்சு

ஆ) எழுத்து

இ) குரல்

ஈ) பாட்டு

3. தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று

ஆ) இந்தி

இ) தெலுங்கு

அ) உருது

ஈ) ஆங்கிலம்

4. பேச்சுமொழியை  ......... வழக்கு என்றும் கூறுவர்

அ) இலக்கிய

ஆ) உலக

இ) நூல்

ஈ) மொழி

 5. எழுத்துமொழியை ......... வழக்கு என்றும் கூறுவர்

அ) இலக்கிய

ஆ) உலக

இ) நூல்

ஈ) மொழி

7. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்று கூறும் நூல் 

நன்னூல்

8. "எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்" என்று கூறியவர் 

பாரதிதாசன்

9. திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் 

கன்னடம்

தெலுங்கு

மலையாளம் 

அனைத்தும்

10. "எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்' என்றவர்

மு.வரதராசனார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad