தமிழக விளையாட்டுகள் பற்றிக் கட்டுரை

விளையாட்டுகள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர், சிறுமியர், இளையோர், முதியோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல்திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணைபுரிகின்றன. தமிழக விளையாட்டுகள் பற்றிக் கட்டுரை இங்கே.

பாடத்தலைப்புகள்(toc)

விளையாட்டின் நோக்கம்

விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். 

உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.

விளையாட்டின் மேன்மை பற்றி பாடிய பாரதி

ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
----------
மாலை முழுதும் விளையாட்டு - என்று 
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

-பாரதி(code-box)

என்று பாரதி, விளையாட்டின் மேன்மையறிந்து அதனைப் பழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார்.

வகைகள்

விளையாட்டுகள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அமைகின்றன. 

  • மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவும், 
  • ஆடவர் விளையாட்டுகள் புற விளையாட்டுகளாகவும் உள்ளன.

சிற்றூர்ச் சிறுவர் விளையாட்டுகள் 

  • பம்பரம், 
  • கிளித்தட்டு, 
  • உப்பு விளையாட்டு, 
  • கள்ளன் காவலன், 
  • கோலி, 
  • கிட்டிப்புள், 
  • காற்றாடி, 
  • பந்துவிளையாட்டு, 
  • ஒற்றையா இரட்டையா, 
  • நீச்சல் 

முதலியன சிற்றூர்ச் சிறுவர் விளையாடுவன.

சிற்றூர்ச் சிறுமியர் விளையாட்டுகள்

  •  பூப்பறித்தல், 
  • கரகரவண்டி, 
  • தட்டாங்கல், 
  • பல்லாங்குழி, 
  • ஊஞ்சல், 
  • தாயம் 

என்பன சிற்றூர்ச் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள். 

போட்டி ஆட்டங்கள்

இன்று, 

  • சடுகுடு (கபடி), 
  • மட்டைப்பந்து, 
  • கால்பந்து, 
  • கைப்பந்து, 
  • எறிபந்து, 
  • இறகுப்பந்து, 
  • ஓட்டம், 
  • தடைதாண்டி ஒட்டம் 

எனப் பலவகை விளையாட்டுகள் போட்டி ஆட்டங்களாக விளையாடப்படுகின்றன.

தமிழர் வீரவிளையாட்டுகள்

பண்டைக் காலத்தில் தமிழர் விளையாடினரா ? அதற்கு அவர்களுக்கு நேரமிருந்ததா? என்னென்னவெல்லாம் விளையாடினார்கள்? எப்படி விளையாட்டு வளர்ந்தது என்பதனைப்பற்றி அறிந்து கொள்வோமா?

வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் தமிழர். 

ஆடவர் விளையாட்டுகள்

  • மற்போரிடல், 
  • ஏறுதழுவுதல், 
  • வேட்டையாடுதல், 
  • நீரில் மூழ்கி மணல் எடுத்தல் 

என்பன பழைமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். 

மற்போர் குறித்த புறநானூறு

முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னரால் மதிக்கப் பெற்றனர். 

களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமும் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

ஏறுதழுவுதல்

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. 

முரசு அதிர, பம்பை முழங்க, தொழுவத்திலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். 

கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து, அதன் கொட்டத்தை அடக்குவர். 

வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. 

நீரில் மூழ்கி மணல் எடுத்தல்

பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.

பெண்கள் விளையாட்டுகள்

பண்டைய நாளில் பெண்கள், 

  • வட்டாடுதல், 
  • கழங்கு, 
  • அம்மானை, 
  • பந்தாடுதல், 
  • ஊஞ்சல், 
  • ஓரையாடுதல் 

எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். 

வட்டாடுதல்

அரங்கு இழைத்து (கட்டம் வரைந்து) நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். 

ஒரையாட்டம்

அக்கால மகளிர் நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஒரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். 

சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.

விலங்குப்போர்

இங்ஙனம், வீர விளையாட்டுகள் ஆடுவதில் விருப்புற்று விளங்கிய தமிழர் விலங்குப்போர் காண்பதிலும் வேட்கையுற்று விளங்கினர்.

  • ஆட்டுக்கிடாய்ப் போர், 
  • சேவற்போர், 
  • கடுமையான காடைப்போர் ,
  • யானைப்போர்

என்பனவற்றைத் தமிழர் கண்டு மகிழ்ந்தனர். 

சோழநாட்டின் பழைய தலைநகரமான உறந்தையூரில் வீரக்கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்னும் பெயரும் அதற்கமைந்தது என்பர்.

யானைப்போர்

அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. 

மதுரையில் உள்ள தமுக்கம் மைதானம் யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.


விளையாட்டுகளின் தன்மை

காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. 

பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.

தமிழரின் தற்காப்புக்கலை

சிலம்பாட்டம்

தமிழரின் தற்காப்புக்கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் நெற்றி உயரம்வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும். குச்சி விளையாட்டு, கம்பு விளையாட்டு எனச் சிற்றூர்களில் அறியப்படும் சிலம்பாட்டம் இன்றும் ஊர் விழாக்களில் நடைபெறுகிறது.

கபடி

உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடி (சடுகுடு)க்குத் தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக்கொண்டே விளையாடுவது நம் மூதாதையர் வழக்கம்.

ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்துவிட்டது. 

ஊர்த்திருவிழா

ஊர்த்திருவிழாக் காலங்களில் 

  • வழுக்குமரம் ஏறுதல், 
  • உறியடித்தல், 
  • மஞ்சள்நீர் ஊற்றுதல் 

ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.

விளையாட்டின் மேன்மை

விளையாட்டு, குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உள்ள மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. இது, நம் சமுதாயத்தின் நாகரிகத்தையும் மரபையும் பண்பாட்டையும் விளக்கவல்லது. 

தமிழக அரசு, விளையாட்டின் பெருமையும் பயனும் மக்களைச் சென்றடைய தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி ஏற்படுத்தி ஊக்கமளித்து ஊக்கமளித்து வருகிறது. 

விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் தருவதனோடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு முன்னுரிமை அளிக்கின்றது. 

நினைவுக்கூர்க 

இயந்திரக் காலத்தாலும் புதுமைப் போக்காலும் சமுதாய மாற்றத்தாலும் விளையாட்டுகள் குறைந்துகொண்டும் மாறியும் வருகின்றன. விளையாட்டின் மேன்மைகண்ட நாம், மேன்மேலும் அதனை வளர்ப்போம்! எந்நாளும் காப்போம்! புகழில் உயர்ந்து நிற்போம்.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - தமிழக விளையாட்டுகள் மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

அ. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதல் ஆகும்.

ஆ. தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று சிலம்பாட்டம்

இ. முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது.

பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது 

விளையாட்டு - விளையாடுவோர்

அ. ஆடவர் - ஏறு தழுவுதல்

ஆ. மகளிர் - ஒரையாடுதல்

இ. சிறுவர் - கிட்டிப்புள்

ஈ. சிறுமியர் - பூப்பறித்தல்

குறுவினாக்கள்

1. பாரதியார் விளையாட்டின் இன்றியமையாமையைப்பற்றிக் கூறியது யாது?

2. சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் யாவை?

சிறுவினா

3. புறநானூறு கூறும் வீர விளையாட்டுகள் யாவை?

4. பண்டைக் காலத்தில் நடைபெற்ற விலங்குப்போர்பற்றி விளக்குக.

நெடுவினா

தமிழர்களின் விளையாட்டுகள் பற்றிக் கட்டுரை வரைக.

தமிழர் விளையாட்டுகளைப்பற்றி மன வரைபடம் வரைக.

TNPSC previous year question 

1. முல்லை நிலத்தில் ......... என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது.

ஏறுதழுவுதல்

2. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது 

விளையாட்டு - விளையாடுவோர்

அ. ஆடவர் - ஏறு தழுவுதல்

ஆ. மகளிர் - ஒரையாடுதல்

இ. சிறுவர் - கிட்டிப்புள்

ஈ. சிறுமியர் - பூப்பறித்தல்

3. மதுரையில் உள்ள தமுக்கம் மைதானம் ............. காண்பதற்கான திடலாகும்.

யானைப்போர்

4. சோழநாட்டின் பழைய தலைநகரம் 

உறந்தையூர் 

5. பொருந்தாதது 

வட்டாடுதல், 

கழங்கு, 

அம்மானை, 

தட்டாங்கல் (சிறுமியர் விளையாட்டு - மற்றவை பெண்கள் விளையாட்டுகள்)

6. பொருந்தாதது

பூப்பறித்தல், 

கரகரவண்டி, 

தட்டாங்கல், 

அம்மானை (பெண்கள் விளையாட்டு - மற்றவை சிறுமியர் விளையாட்டுகள்)

7. பொருந்தாதது

பம்பரம், 

கிளித்தட்டு, 

கரகரவண்டி (சிறுமியர் விளையாட்டு - மற்றவை சிறுவர் விளையாட்டுகள்)

கிட்டிப்புள்

8. பொருந்தாதது

ஏறுதழுவுதல்  

சல்லிக்கட்டு

மஞ்சுவிரட்டு 

ஏறுவிரட்டு ( மற்றவை சல்லிக்கட்டின் மறுபெயர்கள் )

9. ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டைப் ..... என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

புறநானூறு

10. சிறுமியர் கற்களைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு

தட்டாங்கல்

11. ஏறுதழுவுதல் நடைபெறும் நிலம் 

முல்லை

12. ஊர்த்திருவிழாக் காலங்களில் பானையை உறியில் கட்டி அடித்து ஆடும் விளையாட்டு 

உறியடித்தல்

13. பண்டைய மகளிர் நண்டு, ஆமை ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாடும் ஆட்டம் 

ஒரையாட்டம்

14. மதுரையில் யானைப்போர் நடைபெற்ற மைதானம் 

தமுக்கம்

15. பாடிக்கொண்டே விளையாடும் தமிழரின் வீர விளையாட்டு 

கபடி

16. ஏறுதழுவுதலின்போது முழக்கப்படும் போர் இசைக்கருவி

முரசு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad