முக்கூடற்பள்ளு

நீர் நிறைந்த பள்ளமான சேற்றுநிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவதாக அமைந்த நூல், பள்ளு. நகர்வளம் குறித்த முக்கூடற்பள்ளு பாடல் ஒன்று இங்கே விளக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

முக்கூடற்பள்ளு பாடல்கள் விளக்கம்

நகர்வளம் - இளைய பள்ளி

தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்
   சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்
   கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சாறயர் சித்ரம் படைக்கும்
   நிதியெல் லாந்தன் பதியில் கிடைக்கும்
மத்தம் சூடும் மதோன்மத்த ரான
   மருதீசர் மருதூர் எங்கள் ஊரே

- முக்கூடற்பள்ளு(code-box)


பொருள் 

ஊமத்தம் பூவை விரும்பிச் சூடும் பெரும்பித்தனாகிய சிவபெருமானுக்கு உரிய ஊர் எங்கள் மருதூர். 

இவ்வூர், வாய்க்கால்களில் தத்திச்செல்லும் நீரானது முத்துகளால் இடைமறித்து அடைக்கப்படும். 

சாலை வழியாகக் கொணர்ந்த கருப்பங்கழிகளைக் கரும்பாலைகளில் சாறு பிழிந்துகொண்டிருக்கும் பேரிரைச்சல் சத்தமோ காதுகளைச் செவிடாக்கும். 

இவ்வூரில் உள்ளோர் பலரும் அடித்துச் செய்யும் உலோக வேலைகளின் ஒலியோ அந்தப் பேரிரைச்சலை மறைக்கும்படியாக மிக்கிருக்கும். 

நாள்தோறும் விழாக்கள் கொண்டாடுவார்போல, எங்கும் சிறப்பான காட்சிகளின் அழகு மிளிரும். 

இத்தகைய எல்லாச் செல்வங்களும் இவ்வூரிலேயே கிடைக்கும்.

சொற்பொருள் : 

தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்; 

முத்தம் அடைக்கும் - முத்துகள் மிக்குப் பெருகி இடையே அடைத்துக்கொண்டு கிடக்கும்;

கலிப்புவேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்; 

சித்ரம் - சிறப்பான காட்சிகள்; 

மதோன்மத்தர் -பெரும்பித்தனாகிய சிவபெருமான்.

முக்கூடற்பள்ளு ஆசிரியர் குறிப்பு 

இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.

ஆயினும், நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் எனச் சிலர் கூறுவர். 

சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில், திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.

முக்கூடற்பள்ளு நூற்குறிப்பு

நீர் நிறைந்த பள்ளமான சேற்றுநிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவதாக அமைந்த நூல், பள்ளு.

திருநெல்வேலிக்குச் சற்று வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர், முக்கூடல்

இதற்கு ஆசூர் வடகரை நாடு என்னும் பெயரும் உண்டு. 

தென்பால் உள்ள பகுதி, சீவலமங்கைத் தென்கரை நாடு என வழங்கப் பெறுகின்றது.

முக்கூடற்பள்ளு பெயர் காரணம்

தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் மருதூர். முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி. இருவரையும் மணந்து வாழும் ஒருவனின், வாழ்க்கை வளத்தை வடித்துரைப்பதுபோலப் பாடப்பட்ட இந்நூல், முக்கூடற்பள்ளு எனப் பெயர் பெற்றது.

நூற்பயன் : 

முக்கூடற்பள்ளு கற்பதனால், அக்கால மக்களின் உழவுத்தொழில் பற்றியும் அச்சமுதாயத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நிலவளம் பற்றியும் அறியலாம்.

ஒன்பது மணிகள்

  1. பவளம்
  2. முத்து
  3. மாணிக்கம்
  4. வைரம்
  5. புட்பராகம்
  6. வைடூரியம்
  7. மரகதம்
  8. இரத்தினம்
  9. கோமேதகம்

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ்  7. சிற்றிலக்கியங்கள் : முக்கூடற்பள்ளு பகுதிக்காகக் பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - முக்கூடற்பள்ளு மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் சிவபெருமான்

2. மூன்று ஆறுகள் சேருமிடம் முக்கூடல் 

குறுவினாக்கள்

1. வாய்க்கால் நீரை அடைத்தது எது?

வாய்க்கால்களில் தத்திச்செல்லும் நீரானது முத்துகளால் இடைமறித்து அடைக்கப்படும். 

2. மருதூரில் நடைபெற்ற தொழில்கள் யாவை?

மருதூரில் நடைபெற்ற தொழில்கள்

கலிப்புவேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்; 

3. முக்கூடல் - குறிப்பு எழுதுக.

சிறுவினா

மருதூரின் பெருமைகளாக முக்கூடற்பள்ளு கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

TNPSC previous year question 

1. ஊமத்தம் பூவை விரும்பிச் சூடும் பெரும்பித்தன் 

சிவபெருமான் 

2. பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவதாக அமைந்த நூல் 

பள்ளு

3. மருதூரில் வீற்றிருக்கும் இறைவன்

சிவபெருமான்

4. மூன்று ஆறுகள் சேருமிடம் 

முக்கூடல் 

5. முக்கூடற்பள்ளுவில் பாடப்படும் இறைவன்

சிவபெருமான்

6. கீழ்கண்டவற்றுள் பொருந்தாதது

பவளம்

முத்து

மாணிக்கம்

தங்கம் (மற்றவை ஒன்பது வகையான மணிகள்)

7. எந்த மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர், முக்கூடல். 

தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு

8. நாடகப் பாங்கில் அமைந்த முக்கூடற்பள்ளுவை இயற்றியவர் 

என்னயினாப் புலவர்

9. முக்கூடற்பள்ளுவை இயற்றியவர் 

 யாரெனத் தெரியவில்லை

10. "மத்தம் சூடும் மதோன்மத்த ரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே" எனக் கூறும் நூல்

முக்கூடற்பள்ளு

11. சிவபெருமான் விரும்பிச் சூடும் பூ 

ஊமத்தம்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad