எச்சம் - இயல் மூன்று - 8ம் வகுப்பு

தமிழில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பிரிப்பர்: வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள்.வினைச்சொல் என்பது செயலையும் காலத்தையும் காட்டும்; வேற்றுமை உருபு ஏற்காது.

பால் உணர்த்தும் விகுதி பெறாமலும், முற்றுப் பெறாமலும் இருக்குமானால் எச்சம் என்பர்.

பாடத்தலைப்புகள்(toc)

எச்சம் - இயல் மூன்று - 8ம் வகுப்பு 

படித்தான், படித்த, படித்து - ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.

வினைமுற்று இலக்கணம் - 8ம் வகுப்பு இயல் இரண்டு 

வினைமுற்று - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல் TNPSC சொல் இலக்கணம் 

எச்சம் என்றால் என்ன?

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

எச்சம் எத்தனை வகைப்படும்?

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

பெயரெச்சம் என்றால் என்ன?

படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

எடுத்துக்காட்டு 

  • படித்த மாணவன்.
  • படித்த பள்ளி.

இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். 

பெயரெச்சம் - காலம் 

பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.

  • (எ.கா.) பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்
  • பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்
  • பாடும் பாடல்  - எதிர்காலப் பெயரெச்சம்

பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?

பேரைச்சும் இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சங்கள்.

தெரிநிலை பெயரெச்சம் எடுத்துக்காட்டு

எழுதிய கடிதம் - இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம் எடுத்துக்காட்டு

சிறிய கடிதம் - இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

பெயரெச்சம் சொற்கள் 10 examples 

  1. படித்த பெண் 
  2. அழகிய மயில் 
  3. சிறந்த குழந்தை 
  4. சிரித்த அவர்கள். 
  5. நல்ல குடும்பம் 
  6. சிறிய பையன் 
  7. நடித்த நடிகர்கள். 
  8. சிந்தித்த ஆசிரியர்.
  9. பேசிய அவன். 
  10. கேட்ட அவள்.

வினையெச்சம் என்றால் என்ன?

படித்து என்னும் சொல் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைச் சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(எ.கா.) படித்து முடித்தான். 

படித்து வியந்தான்.

இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

நேசம் இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை, குறிப்பு வினையெச்சங்கள்.

தெரிநிலை வினையெச்சம் எடுத்துக்காட்டு

எழுதி வந்தான் -இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம் எடுத்துக்காட்டு

மெல்ல வந்தான் - இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

முற்றெச்சம்

வள்ளி படித்தனள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.

எடுத்துக்காட்டு 5 சான்றுகள்

  1. வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
  2. ஆதவன் சிந்தித்தனன் செயல்படுத்தினான்.
  3. மைதிலி வந்தனள் பாடினள்.
  4. முருகன் படித்தனன் தேறினன்.
  5. செல்வி வரைந்தனள் தூங்கினாள்.

முற்றெச்சம் என்றால் என்ன?

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

கற்பவை கற்றபின்

1. 'வந்த' என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.

(எ.கா.) வந்த மாணவன்.

வந்த மாடு.

வந்த பெண். 

வந்த ஆசிரியர். 

வந்த அப்பா.

வந்த குருவி.

வந்த மழை. 

வந்த குழந்தை


2. 'வரைந்து' என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.

(எ.கா.) வரைந்து வந்தான்.

வரைந்து முடித்தான்.

வரைந்து படித்தான். 

வரைந்து சென்றான். 

வரைந்து வருவான். 

வரைந்து முடிப்பான். 

வரைந்து கொண்டிருப்பான். 

வரைந்து கொண்டிருந்தவன். 


நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு - எச்சம்- 8ம் வகுப்பு இயல் மூன்று - வினா விடை 8th standard tamil book back exercise

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்

அ) முற்று

ஆ) எச்சம்

இ) முற்றெச்சம்

ஈ) வினையெச்சம்


2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்

அ) படித்து

ஆ) எழுதி

இ) வந்து

ஈ) பார்த்த


3. குறிப்பு வினையெச்சம் ...... வெளிப்படையாகக் காட்டாது.

அ) காலத்தை

ஆ) வினையை

இ) பண்பினை

(ஈ) பெயரை


பொருத்துக.

நடந்து - வினையெச்சம்

பேசிய - பெயரெச்சம்

பெரிய - குறிப்புப் பெயரெச்சம்

எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்


கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

பெயரெச்சம்

நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த.

வினையெச்சம்

படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பார்த்து.


சிறுவினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.


2. அழகிய மரம் - எச்ச வகையை விளக்குக.

அழகிய மரம் - குறிப்புப் பெயரெச்சம் - இத்தொடரில் உள்ள அழகிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.


3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

முற்றெச்சம் 

ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

சான்று

வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. 


4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

வினையெச்ச வகைகள்

1. தெரிநிலை வினையெச்சம்

எழுதி வந்தான் -இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

2. குறிப்பு வினையெச்சம்

மெல்ல வந்தான் - இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.