இயல் ஏழு - விடுதலைத் திருநாள்- மீரா

பிறந்தநாள், திருமணநாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும். சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும். இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இன்றியமையா நாள் ஒன்றின் சிறப்பை அறிவோம்.

பாடத்தலைப்புகள்(toc)

மீரா ஆசிரியர் குறிப்பு TNPSC 

இயற்பெயர் 

மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடையவர் மீரா. 

பணி

கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்

இதழ்

அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். 

இயற்றிய நூல்கள்

  • ஊசிகள், 
  • குக்கூ, 
  • மூன்றும் ஆறும், 
  • வா இந்தப் பக்கம்,
  • கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்,
  • மருக்கொழுந்து ,
  • கோடையும் வசந்தமும் 

 உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இயல் ஏழு - விடுதலைத் திருநாள்- மீரா மீரா ஆசிரியர் குறிப்பு TNPSC


இயல் ஏழு - விடுதலைத் திருநாள் - 8 ஆம் வகுப்பு இயல் ஏழு

முன்னூறு வருடமாய் 
முற்றுகை யிட்ட 
அந்நிய இருட்டின் 
அரக்கக் கூத்து 
முடிந்தது என்று 
முழங்கி நின்றது 
எந்த நாளோ 
அந்த நாள் இது.

செத்த பிணமாய்ச் 
சீவனில் லாமல் 
மொத்தமாய்த் தேசத்தை 
முற்றுகையிட்ட 
மூட மூட 
நிர்மூட உறக்கத்தை 
ஓட ஓட 
விரட்டி யடித்து 
விழிக்க வைத்தது -
வையம் 
வியக்க வைத்தது - 
எந்த நாளோ 
அந்த நாள் இது.

பரிதவித் திருந்த 
பாரத அன்னை 
காளியாய்ச் சீறிக் 
கைவிலங் கொடித்து 
பகையைத் துடைத்து 
சத்திய நெஞ்சின்
சபதம் முடித்து
கூந்தல் முடித்துக்
குங்குமப் பொட்டு வைத்து
ஆனந்த தரிசனம்
அளித்து நின்றது 
எந்த நாளோ அந்த நாள்இது.

சதி வழக்கினிலே
சம்பந்தப் பட்டுத் 
தூக்குக் கயிற்றில் 
தொங்கப் போகும் 
கடைசிக் கணத்திலும் 
கண்முன் நிறுத்திப் 
பகத்சிங் பார்த்துப் 
பரவசப் பட்ட 
அற்புத விடியலை 
அழைத்து வந்தது 
எந்த நாளோ 
அந்த நாள் இது.

முற்றிப் படர்ந்த
முட்காட்டை எரித்து 
விளைந்த மூங்கிலை 
வீரமாய்த் துளைத்து 
மூச்சுக் காற்றை 
மோகித்து நுழைத்து 
புரட்சிப் 
புல்லாங் குழலில்
பூபாளம் இசைத்தது
எந்த நாளோ
அந்த நாள் இது.

இதந்தரும் இந்தச்
சுதந்திர நாளைச் 
சொந்தம் கொண்டாடத் 
தந்த பூமியைத் 
தமிழால் வணங்குவோம்.


- மீரா


சொல்லும் பொருளும்

சீவன் - உயிர்

சத்தியம் - உண்மை

வையம் - உலகம்

சபதம் - சூளுரை

ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி

மோகித்து - விரும்பி


பாடலின் பொருள்

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று.

உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. 

பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

நூல் வெளி

இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் ஏழு விடுதலைத் திருநாள்- மீரா வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ......... அளித்தது

அ) தயவு

ஆ) தரிசனம்

இ) துணிவு

ஈ) தயக்கம்


2. இந்த .......... முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ) வையம்

ஆ) வானம்

இ) ஆழி

ஈ) கானகம்


3. 'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) சீவ + நில்லாமல்

ஆ) சீவன் + நில்லாமல்

இ) சீவன் + இல்லாமல்

ஈ) சீவ + இல்லாமல்


4. 'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விலம் + கொடித்து

ஆ) விலம் + ஒடித்து

இ) விலன் + ஒடித்து

ஈ) விலங்கு + ஒடித்து


5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டைஎரித்து

ஆ) காட்டையெரித்து

இ) காடுஎரித்து

ஈ) காடுயெரித்து


6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்


சொல்லும் பொருளும்

சீவன் - உயிர்

சத்தியம் - உண்மை

வையம் - உலகம்

சபதம் - சூளுரை

ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி

மோகித்து - விரும்பி


குறுவினா

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் இந்தியாவின் விடியல் குறித்த கனவு கண்டார்.


2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

இருண்ட ஆட்சி என முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை மீரா குறிப்பிடுகிறார்.


சிறுவினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கிறாள்.

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடு அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. அடிமைத்தளை நீங்குவதற்குக் கண்ணீரும் செந்நீரும் சிந்தினர் பலர்.

தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், முத்துராமலிங்கர், திருப்பூர்க் குமரன், வாஞ்சிநாதன், பாரதியார் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். 

விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்தது மட்டுமில்லாமல்  அவர்களைக் குறித்தும் விடுதலைக்காக அவர்கள் போராடியதை பற்றியும், தியாகங்கள் குறித்தும், ரத்தம் சிந்தியத்தை பற்றியும், சிறையில் பட்ட துன்பங்கள் பற்றியும் மற்றவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த பேச்சு போட்டி நடத்த வேண்டும். 

நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad