விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன. தமிழருக்கே உரிய சிறப்பான விழாவைப் பற்றி அறிவோம் வாருங்கள்.
பாடத்தலைப்புகள்(toc)
தமிழர் பெருவிழா - பொங்கல் பண்டிகை வரலாறு
இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கைமுறை ஆகும். இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.
பொங்கல் பற்றி எழுதுக
தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.
- இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள்
கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்.
- எனவே, இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர்.
அந்தச் சமயத்தில் இயற்கை அன்னை பசுமையான ஆடை உடுத்தி, பல நிறப் பூக்களைச் சூடி இருப்பாள். காயும் கனியும் கரும்பும் எங்குப் பார்த்தாலும் விளைந்து காட்சி தரும்.
உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே.
- இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.
பொங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது. இது வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடுகிறது.
அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது.
குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
போகித்திருநாள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நன்னூல் நூற்பா-462(code-box)
என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.(alert-success)
பொங்கல் திருநாள்
தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
- இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர்.
- மாவிலைத் தோரணம் கட்டுவர்.
- புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்துப் பொங்கலிடுவர்.
பொங்கல் கொண்டாடபடுவது என்?
பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள்.
பொங்கல் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என்று மங்கல ஒலி எழுப்பிப் போற்றுவர். "பொங்கல் பொங்கி வருவதுபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்" என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
பின்னர், தலைவாழை இலையிட்டுப் பொங்கலைப் படைப்பர். கரும்பு, மஞ்சள்,கொத்து, தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.
விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர். சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வர்.
தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.(alert-passed)
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்.
மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன.
- மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.
உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலன்று மாடுகளை நீராட்டுவர்.
கொம்புகளைச் சீவி வண்ணங்கள் தீட்டுவர்.
மாடுகளின் கழுத்திலே மணிகளைக் கட்டுவர்.
பூவும், தழையும் சூட்டுவர்.
மாட்டுக்கு மஞ்சள், குங்குமம் இடுவர்.
பொங்கல், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர்.
மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும்.
- மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.
இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு,ஏறுதழுவுதல் என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும்.
(எ.கா.) 2023 + 31 = 2059
காணும் பொங்கல்
மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும்.
இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
பொங்கல்விழா நடைபெறும் காலம் இனிய காலம்; கால் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம்; இயற்கையன்னை பசுமையான புடைவை உடுத்துப் பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும் கனியும் கரும்பும் அணிந்து இன்பக்காட்சி தருங்காலம்.
பொங்கலுக்குத் தலைநாள் போகி. போகியை அடுத்து வருவது பொங்கல் புதுநாள்; அந்நாளில், 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' நிகழும்; வீட்டிலுள்ள பழம்பானைகள் விடைபெறும்; புதுப் பானைகளில் பொங்கல் நடைபெறும். பால் பொங்கும் பொழுது, “பொங்கலோ பொங்கல்" என்னும் மங்கல ஒலி எங்கும் கிளம்பும். அப்பொழுது, பெண்கள் குரவை ஆடுவர்; பிறகு, “பூவும் புகையும் பொங்கலும்” கொண்டு இல்லுறை தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிறார உண்டு மகிழ்வர்.
- ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழின்பம்(alert-passed)
நினைவு கூர்க
இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டிப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பற்றிய சில வரிகள்
- தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
- விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன.
- தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.
- கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா.
- உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர்.
- பொங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது.
- முதல் நாள் - வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள்.
- தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
- பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்
- மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - தமிழர் பெருவிழா மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.கதிர் முற்றியதும்.........செய்வர்.
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்..........கட்டுவர்.
அ) செடி
ஆ)கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல் அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) போகி+பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு +பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை
5. பழையன கழிதலும்.........புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண.....தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) பொங்கல்
கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா.
ஆ) செல்வம்
மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.
இ) பண்பாடு
தமிழரின் நாகரிகம், வீரம், பண்பாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
குறுவினா
1. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
போகிப்பண்டிகை என்பது வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள்.
2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சிறுவினா
1. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
காணும் பொங்கலை மக்கள் கீழ்கண்டவாறு கொண்டாடுகின்றனர்
- உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
- குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
- மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்.
- விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
TNPSC previous year question
1. திருவள்ளுவர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
தை இரண்டாம் நாள்
2. பொருத்தமற்ற சொல்லைக் கண்டறி
மஞ்சுவிரட்டு
மாடுபிடித்தல்
ஜல்லிக்கட்டு
ஏறுவிரட்டு (சரி - ஏறுதழுவுதல்)
3. பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது
கர்நாடகம் - மகரசங்கராந்தி
பஞ்சாப் - லோரி
இராஜஸ்தான்- உத்தராயன்
4. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பது
நன்னூல் நூற்பா
5. மார்கழி மாதத்தின் இறுதி நாள்
போகித் திருநாள்
6. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை ........வாகக் கொண்டாடப்பட்டது
இந்திரவிழா
7. தை முதல் நாளில் ..... ஆண்டு தொடங்குகிறது
திருவள்ளுவராண்டு
8. மாடு என்ற சொல்லுக்குச் ...... என்னும் பொருளும் உண்டு.
செல்வம்
Please share your valuable comments