முடியரசன்

காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான். பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான். பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான். தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின. தமிழரின் வணிக மேன்மையை அறிவோம் வாருங்கள்.

பாடத்தலைப்புகள்(toc)

முடியரசன் ஆசிரியர் குறிப்பு 

இயற்பெயர் : துரைராசு. 

நூல்கள்: வீரகாவியம், பூங்கொடி, காவியப்பாவை , புதியதொரு விதி செய்வோம்

சிறப்பு பெயர் : கவியரசு, திராவிட நாட்டின் வானம்பாடி 

முடியரசன் எழுதிய நூல்கள்

முடியரசன் படைப்புகள் சில

  • பூங்கொடி 
  • வீரகாவியம் 
  • மனிதனை தேடுகிறேன் 
  • காவியப்பாவை 
  • நெஞ்சு பொருக்குதில்லையே 
  • முடியரசன் கவிதைகள் 
  • புதியதொரு விதி செய்வோம்

முடியரசன் சிறப்பு பெயர்

  • கவியரசு - குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டவர்
  • திராவிட நாட்டின் வானம்பாடி - அண்ணாவால் அழைக்கப்பட்டவர்


நானிலம் படைத்தவன்

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற

பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,

மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் 

நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,

ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்

சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்

முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்

எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்

பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்

கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,

அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் 

அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்


- முடியரசன்(code-box)

சொல்லும் பொருளும்

  • மல்லெடுத்த-  வலிமைபெற்ற
  • சமர்- போர்
  • மறம்- வீரம்
  • எக்களிப்பு -பெருமகிழ்ச்சி
  • கலம்- கப்பல்
  • நல்கும்- தரும்
  • கழவி- வயல்
  • ஆழி- கடல்

பாடலின் பொருள்

தமிழன் கற்களும் முட்களும் நிறைத்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். குறிஞ்சி , முல்லை , மருதம்  நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.

பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.

நூல் வெளி

இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக.

  1. குறிஞ்சி-  மலையும் மலைசார்ந்த இடமும்
  2. முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்
  3. மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
  4. நெய்தல்- கடலும் கடல்சார்ந்த இடமும்

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் மரபுக் கவிதை - முடியரசன்  பகுதிக்காகப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - நானிலம் படைத்தவன் மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்-

அ) மகிழ்ச்சி

ஆ) துன்பம்

இ) வீரம்

ஈ) அழுகை

2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...

அ) கல் + அடுத்து

ஆ) கல் + எடுத்து

இ) கல் + லடுத்து 

ஈ) கல் + லெடுத்து

3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---

அ) நா + னிலம்

ஆ) நான்கு + நிலம்

இ) நா + நிலம்

ஈ) நான் + நிலம்

4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.. 

அ) நாடென்ற 

ஆ) நாடன்ற 

இ) நாடுஎன்ற

 ஈ) நாடுஅன்ற

5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

அ) கலம்ஏறி

ஆ) கலமறி

இ) கலன்ஏறி

ஈ) கலமேறி

சொற்றொடரில் அமைத்து எழுதுக.


அ) மாநிலம் - தமிழர்கள் நாட்டை பல மாநிலமாக பிரித்தனர்.

ஆ) கடல்- பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். 

இ) பண்டங்கள் - ஏலம், மிளகு ஆகிய பண்டங்கள் கப்பல்களில் ஏற்றி தமிழர்கள்  வணிகம் செய்தனர்.

நயம் அறிக.

1. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

கல்லெடுத்து - மல்லெடுத்த

ஊராக்கி - பேராக்கி 

பண்டங்கள்- கண்டங்கள் 

2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

பெருவெளியை- பெருமை

முக்குளித்தான் - முத்தெடுத்தான்

அஞ்சாமை - அஞ்சுவதை

குறுவினா

1. நான்கு நிலங்கள் என்பன யாவை?

நான்கு நிலங்கள் என்பன

  • குறிஞ்சி , 
  • முல்லை , 
  • மருதம் , 
  •  நெய்தல்

2. தமிழன் எதற்கு அஞ்சினான்?

தமிழன் சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

தமிழன் ஏலம், மிளகு ஆகியவற்றைப் கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். 

சிறுவினா

1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?

தமிழன் கற்களும் முட்களும் நிறைத்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன்.

2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன

  • பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். 
  • அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். 
  • பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். 
  • ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். 
  • ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். 
  • கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். 
  • ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.

TNPSC previous year question 

1. முடியரசன் இயற்பெயர்

 துரைராசு. 

2. முடியரசன் 'கவியரசு' என்று யாரால் அழைக்கப்பட்டவர்

குன்றக்குடி அடிகளார் 

3. "திராவிட நாட்டின் வானம்பாடி" என்று முடியரசனை அழைத்தவர்

அண்ணா

4. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

குறிஞ்சி- மலையும் மலைசார்ந்த இடமும்

முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்- கடலும் கடல்சார்ந்த இடமும்

5. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

மல்லெடுத்த- வலிமைபெற்ற

சமர்- போர்

மறம்- வீரம்

எக்களிப்பு -பெருமகிழ்ச்சி

6. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது

கலம்- கப்பல்

நல்கும்- தரும்

கழவி- வயல்

ஆழி- கடல்

7. முடியரசன் படைப்புகளில் பொருந்தாதது 

பூங்கொடி 

மனிதனை தேடுகிறேன் 

வீரப்பாவை (சரி- காவியப்பாவை)

புதியதொரு விதி செய்வோம்

8. "காவியப்பாவை" என்ற நூல் யாரின் படைப்பு

முடியரசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad