மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. வணிகம் இல்லையேல் மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இயலாது. வணிகம் பல வகைகளில் நடைபெறுகிறது. வணிக நிறுவனங்களும் பல வகைகளாக உள்ளன. தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர். உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர். அதனை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
பாடத்தலைப்புகள்(toc)
வளரும் வணிகம்
மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான். தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு,
- ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
- பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்:
- வாங்குபவரை நுகர்வோர் என்பர்.
பண்டமாற்று வணிகம்
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்.
- நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர்.
- ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப் பெற்றனர்.
இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இக்காலத்தில் பண்டமாற்று வணிகம்
இக்காலத்தில் கூட வீட்டிற்கே வந்து பழைய செய்தித்தாள்கள், பயனற்ற நெகிழிப் பொருள்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். அதற்குப் பதிலாக வீட்டிற்குப் பயன்படும் பொருள்களைத் தருகின்றனர்.
வணிகத்தின் வகைகள்
வணிகம் எத்தனை வகைப்படும்
வணிகத்தைத்,
- தரைவழி வணிகம்,
- நீர்வழி வணிகம்
எனப் பிரிக்கலாம்.
தரைவழி வணிகம்
தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
வணிகச்சாத்து
வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.
நீர்வழி வணிகம்
கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்.
- கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.
- துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும், பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
பூம்புகார்
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
............
உமணர் போகலும்
- நற்றிணை-183(code-box)
பாலொடு வந்து கூழொடு பெயரும்......
- குறுந்தொகை 23(code-box)
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
- அகநானூறு 149(code-box)
வணிகம் வகைகள்
வணிகத்தைத்,
- தனிநபர் வணிகம்,
- நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம்.
தனிநபர் வணிகம்
தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும்.
நிறுவன வணிகம்
ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.
சிறுவணிகம்
நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர். இவர்கள் சிறு முதலீட்டில் பொருள்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வர். தலையில் சுமந்து சென்று விற்றல், தரைக்கடை அமைத்து விற்றல், தள்ளுவண்டி மூலம் விற்றல் போன்ற முறைகளில் சிறு வணிகம் நடைபெறுகிறது. சிறு வணிகர்கள் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள் ஆவர்.
பெருவணிகம்
பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும். பெருவணிகர்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வர். அவற்றைச் சிறுவணிகர்களுக்கு விற்பனை செய்வர். பெருவணிகர்களுக்கு நுகர்வோருடன் நேரடித் தொடர்பு இருப்பது அரிது.
ஏற்றுமதியும் இறக்குமதியும்
ஏற்றுமதி
- ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும்.
இறக்குமதி
- பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது இறக்குமதி ஆகும்.
சீனத்திலிருந்து கண்ணாடி. கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
வணிகத்தில் நேர்மை
அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
வணிகம் பற்றிய திருக்குறள்,
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
-திருக்குறள் - 120(code-box)
என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
- திருக்குறள்(code-box)
எனவே வணிகரை,
"நடுவு நின்ற நன்னெஞ்சினோர்"
- பட்டினப்பாலை(code-box)
என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.
கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறைபடாது
-பட்டினப்பாலை(code-box)
இணையவழி வணிகம்
கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவனப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வர வழைக்கலாம். பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம்.
நினைவு கூர்க
வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் வணிகத்தில் இன்னும் பல புதுமைகள் வரக்கூடும்.
இப்பகுதியானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 18. தமிழர் வணிகம் என்ற தொகுப்பிற்காக புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - வளரும் வணிகம் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்.
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
2. வணிகம்+சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
இ) வணிகச்சாத்து
ஆ) வணிகம்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மின் + னணு
ஆ) மின்ன + அணு
இ) மின்னல் + அணு
ஈ) மின் + அணு
5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி+வடைந்த
ஆ) விரி+அடைந்த
இ) விரிவு +அடைந்த
ஈ) விரிவ்+அடைந்த
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) வணிகம்
மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆ) ஏற்றுமதி
ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும்.
இ) சில்லறை
நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சில்லறை வியாபாரிகள்.
ஈ) கப்பல்
கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.
குறுவினா
1.வணிகம் என்றால் என்ன?
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டு
- நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர்.
- ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப் பெற்றனர்.
3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?
நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை சிறுவணிகப் பொருட்கள் .
சிறுவினா
1. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.
சிறுவணிகம்
- நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர்.
- இவர்கள் சிறு முதலீட்டில் பொருள்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வர்.
- சிறு வணிகர்கள் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள் ஆவர்.
பெருவணிகம்
- பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும்.
- பெருவணிகர்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வர்.
- பெருவணிகர்களுக்கு நுகர்வோருடன் நேரடித் தொடர்பு இருப்பது அரிது.
2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள்
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள்
பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது இறக்குமதி ஆகும்.
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
TNPSC previous year question
1. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் குழுவின் பெயர்
வணிகச்சாத்து
2. தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுள் பொருந்தாதது
தேக்கு, மயில்தோகை
கற்பூரம், பட்டு
மயில்தோகை, இஞ்சி
மிளகு, சந்தனம்
3. சீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுள் பொருந்தாதது
கண்ணாடி, கற்பூரம், பட்டு, குதிரை
4. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்து வாங்கப்பட்டது
குதிரைகள், கண்ணாடி. கற்பூரம், பட்டு
5. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று வணிகர் குறித்து கூறுவது
பட்டினப்பாலை
6. வணிகரின் நேர்மையைப் பற்றி "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்" என்று கூறுவது
திருக்குறள்
6. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்று வணிகரின் நேர்மையைக் குறித்து கூறுவது
பட்டினப்பாலை
7. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து" என்று தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி பற்றி கூறுவது
நற்றிணை
Please share your valuable comments