மொழி வளரும் தன்மை உடையது. ஒவ்வொரு மொழியிலும் காலந்தோறும் புதிதுபுதிதாக இலக்கியங்கள் தோன்றுவது போலவே புதிய சொற்களும் தோன்றுகின்றன. ஓர் அடிச்சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்துப் பெருகுவது மொழி வளர்ச்சியின் அடையாளம் ஆகும். தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள் பற்றியும் அவற்றிலிருந்து தோன்றி வளரும் புதிய சொற்கள் பற்றியும் அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
இரா. இளங்குமரனார் ஆசிரியர் குறிப்பு TNPSC
சிறப்புப் பெயர்கள்
செந்தமிழ் அந்தணர், உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார்.
பணி
தமிழாசிரியர்; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பன்முகத் திறன்
நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
இயற்றிய நூல்கள்
பற்பல நூல்களை எழுதியிருப்பினும்,
- இலக்கண வரலாறு,
- தமிழிசை இயக்கம்,
- தனித்தமிழ் இயக்கம்,
- பாவாணர் வரலாறு,
- குண்டலகேசி உரை,
- யாப்பருங்கலம் உரை,
- புறத்திரட்டு உரை,
- திருக்குறள் தமிழ் மரபுரை,
- காக்கைப் பாடினிய உரை,
- தேவநேயம்,
- தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்
முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள்.
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
சிறப்புகள்
நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்;
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.
திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்;
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்;
இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர்.
இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.
தமிழ்மொழி
மலையில் இருந்து பெருகி வரும் வெள்ளத்தில் உருண்டு வரும் கற்கள் உருளை உருளைகளாய் இருப்பதைக் காண்கிறோம். அங்கே இருந்து வரும் உருளைக் கற்கள் மேலும் தேய்கின்றன. உடைந்து பொடிப்பொடியாகின்றன அல்லவோ? வயல்வெளியில் மணலாய், கடல்முகத்தில் நொய்மணலாய் இருக்கக் காண்கிறோமே, ஏன்? நொய்மணலைப் பார்க்கும்போது அது கிடந்திருந்த காலமும் கடந்து வந்த தொலைவும் புலப்படும்.
கல்லின் தேய்மானம் போலச் சொல்லுக்கும் தேய்மானம் உண்டு. கல் தோன்றிய காலம், உயிரோட்ட இயக்கம் இவற்றைப் போலச் சொல் தோன்றிய காலம், இயக்கம் ஆகியவற்றால் சொல்லும் தேய்தல் இயற்கை.
தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தொன்மையான மொழிகள் பல ஏட்டளவில் மட்டுமே இருக்கக் காண்கிறோம். வேறு சில மொழிகளில் ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களைப் படிக்க முடியாத நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். ஆனால் தமிழறிந்த, தமிழ்ப் பற்றுள்ள தமிழர் யாரும் கற்க முடியாது எனச் சொல்லும் ஒரு நூல்கூடத் தமிழில் இல்லை. இப்பேறு எதனால்? தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருவதாலேயே ஆகும்.
- தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்.
சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை. நெல்லில் பதர் உண்டு. ஆனால் சொல்லில் பதர் இருத்தலாகாது.
- "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பியர் மொழி.
மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.
- மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள்.
ஒரேழுத்து பற்றிய தொல்காப்பியர் கருத்து
ஓர் எழுத்து மொழி எவை எனின் நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர்.
குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்பார்.
ஒரேழுத்து பற்றிய பவணந்தி முனிவர் கருத்து
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்றால் உயிர்நெட்டெழுத்துகள் ஏழுமா?
உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் 126 உண்டே! அவை மொழியாகும் தன்மை இல்லாதனவா என ஐயம் தோன்றும். இந்த ஐயம் தோன்றாமல் இருக்கவே உயிர் நெடில் எழுத்து என்றோ உயிர்மெய் நெட்டெழுத்து என்றோ கூறாமல் நெட்டெழுத்து என்று மட்டும் கூறினார். தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார்.
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.(alert-success)
ஓரெழுத்து
தமிழில் சொல்லின் முதலில் வரும் எழுத்து, இடையில் வரும் எழுத்து, இறுதியில் வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்து வரும் எழுத்து என வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. சில எழுத்துகள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா. இவற்றைப் போலவே நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு.
- உயிர் வருக்கம், ம - வருக்கம் ஒவ்வொன்றிலும் ஆறும்,
- த, ப, ந வருக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்தும்,
- க, வ, ச வருக்கங்கள் ஒவ்வொன்றிலும் நான்கும்,
- ய - கர வருக்கத்தில் ஒன்றும்
ஆக நெட்டெழுத்துகளால் ஆகிய சொற்கள் நாற்பது.
- நொ, து என்னும் குறிலெழுத்துகளால் ஆகிய சொற்கள் இரண்டு.
ஆக மொத்தம் ஓரெழுத்துகளால் ஆகிய சொற்கள் நாற்பத்திரண்டு ஆகும்.
ஓரெழுத்து ஒருமொழிகள்
- உயிர் எழுத்து - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
- மகர வரிசை - மா, மீ, மூ, மே, மை, மோ
- தகர வரிசை - தா தீ, தூ, தே, தை
- பகர வரிசை - பா, பூ, பே, பை, போ
- நகர வரிசை - நா,நீ, நே, நை, நோ
- ககர வரிசை - கா,கூ, கை, கோ
- சகர வரிசை - சா, சீ, சே, சோ
- வகர வரிசை - வா, வீ, வை, வெள
- யகர வரிசை - யா
- குறில் எழுத்து - நொ,து
ஆக ஓரெழுத்து மொழிகள் தமிழில் நாற்பத்திரண்டு. இச்சொற்களின் பொருள்களை கண்டறிக.
ஓர் எழுத்து மொழி
தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார். எந்தெந்த ஓரெழுத்துச் சொற்களை நாம் பயன்படுத்துகிறோம் என்பதை நாமே காண முயலலாமே!
நாம் பயன்படுத்தும் ஓரெழுத்துச் சொற்கள்
- பூ - என்பது ஓரெழுத்து ஒரு மொழி.
- கா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி.
இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
- யா - என்பது வினா.
யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து' 'யா' தானே!
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இன்னவாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு 'ஆமா' என்று பெயர்.
- மா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று.
நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட மாஞாலம் என்கிறோம். இவ்வாறெல்லாம் இயல்பாக மா என்னும் ஓரெழுத்து ஒருமொழி மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாநிறம் என மாந்தளிர் நிறத்தை ஒப்புமை காட்டி உரைப்பது பெருவழக்கு.
- மா - என்பது விலங்கையும் குறிக்கும்.
அரிமா,பரிமா,நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
- ஈ - என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது.
மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை எல்லாம் இக்காலத்தில் அனைவரும் வழங்கும் சொற்களே.
- ஆன் என்பது ஆ ஆகியது;
- மான் என்பது மா ஆகியது;
- கோன் என்பது கோ ஆகியது;
- தேன் என்பது தே ஆகியது;
- பேய் என்பது பே ஆகியது.
இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
- ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது.
எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது 'அம்புவிடுதல்'. ஏவும் அம்பு 'ஏ' என்றாகியது.
- அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான்.
- அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்;
- அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
ஏவு என்னும் சொல் 'ஏ' என்று ஆனது மட்டுமன்றி 'எய்' எனவும் ஆயிற்று.
- ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி.
- அம்பை எய்பவர் எயினர்.அவர்தம் மகளிர் எயினியர். சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
1. நான் கொடுக்கும் ஓர் எழுத்து கை .
2. நான் அழைக்கும் ஓர் எழுத்து வா.
3. நான் வாயைத்திறக்க வைக்கும் ஓர் எழுத்து ஆ.
4. நான் இகழும் ஓர் எழுத்து சீ.
5. நான் பறக்கும் ஓர் எழுத்து ஈ.
6. நான் வழி அனுப்பும் ஓர் எழுத்து போ.
நினைவுக்கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று சொற்பூங்கா - இரா. இளங்குமரனார் வினா விடை 8th standard tamil book back exercise
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் காட்டும் கனி என்று இளங்குமரனார் கூறுகிறார்.
அவர் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம்
- பூ - என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
- யா - என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து' 'யா' தானே!
- ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இன்னவாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு 'ஆமா' என்று பெயர்.
- மா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட மாஞாலம் என்கிறோம். இவ்வாறெல்லாம் இயல்பாக மா என்னும் ஓரெழுத்து ஒருமொழி மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாநிறம் என மாந்தளிர் நிறத்தை ஒப்புமை காட்டி உரைப்பது பெருவழக்கு.
- மா - என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா,பரிமா,நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
- ஈ - என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
- போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை எல்லாம் இக்காலத்தில் அனைவரும் வழங்கும் சொற்களே.
கல்லின் தேய்மானம் போலச் சொல்லுக்கும் தேய்மானம் உண்டு. கல் தோன்றிய காலம், உயிரோட்ட இயக்கம் இவற்றைப் போலச் சொல் தோன்றிய காலம், இயக்கம் ஆகியவற்றால் சொல்லும் தேய்தல் இயற்கை.
- ஆன் என்பது ஆ ஆகியது;
- மான் என்பது மா ஆகியது;
- கோன் என்பது கோ ஆகியது;
- தேன் என்பது தே ஆகியது;
- பேய் என்பது பே ஆகியது.
இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
Please share your valuable comments