ஓடை - வாணிதாசன் - 8 ஆம் வகுப்பு இயல் இரண்டு

மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும். ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வாறு மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்!

பாடத்தலைப்புகள்(toc)

வாணிதாசன் ஆசிரியர் குறிப்பு TNPSC 

வாணிதாசன் இயற்பெயர் : எத்திராசலு (எ ) அரங்கசாமி 

பிறந்த இடம் : புதுவையை அடுத்த வில்லியனூர்

பெற்றோர்: அரங்க. திருக்காமு - துளசியம்மாள்

சிறப்புகள்:  

தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்" என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது. 

இவர் பாரதிதாசனின் மாணவர்.

இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.

கற்ற மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்

சிறப்பு பெயர்கள்: ‘கவிஞரேறு', 'பாவலர்மணி' என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார். 

மொழி பெயர்ப்பு : உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் வாணிதாசன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

காலம் : 22.07.1915 - 07.08.1974

வாணிதாசன் எழுதிய பாடல்கள் 

  • தமிழச்சி 
  • கொடி முல்லை 
  • தொடுவானம் 
  • எழிலோவியம் 
  • பொங்கல் பரிசு 
  • இன்ப இலக்கியம் 
  • தீர்த்த யாத்திரை
  • குழந்தை இலக்கியம்


ஓடை - வாணிதாசன் - 8 ஆம் வகுப்பு இயல் இரண்டு

 

மெய்ப்பொருள் கல்வி - வாணிதாசன்

ஓடை - 8 ஆம் வகுப்பு இயல் இரண்டு

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! - கல்லில் 
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் 
(ஓடை ஆட  ...)

பாட இந்த ஓடை எந்தப் 
         பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக் கார் 
         ஈடு செய்யப் போரா ரோடி! 
(ஓடை ஆட  ...)

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி 
         நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக் 
கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக் 
         குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி 
( ஓடை ஆட ...)

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண 
          நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்
செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் 
           சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் 
(ஓடை ஆட...)


- வாணிதாசன்


சொல்லும் பொருளும்

தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் - இரக்கம்

நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

முழவு - இசைக்கருவி

புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

பயிலுதல் - படித்தல்

நாணம் - வெட்கம்

செஞ்சொல் - திருந்திய சொல்

பாடலின் பொருள்

நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! 

சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. 

நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

நூல் வெளி

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.


நினைவுக்கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC - பொதுத்தமிழ் குரூப் 4 and VAO தேர்வுக்கான புதியப் பாடத்திட்டம் 2025 அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பகுதிக்காகப் 8ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு - 8 ஆம் வகுப்பு இயல் இரண்டு - ஓடை - வாணிதாசன்  - வினா விடை 8th standard tamil book back exercise 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. பள்ளிக்குச் சென்று கல்வி .......... சிறப்பு.

அ) பயிலுதல்

ஆ) பார்த்தல்

இ) கேட்டல்

ஈ) பாடுதல்


2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ........

அ) கடல்

ஆ) ஓடை

இ) குளம்

ஈ) கிணறு


3. 'நன்செய்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + செய்

ஆ) நன்று + செய்

இ) நன்மை + செய்

ஈ) நல் + செய்


4. 'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நீளு + உழைப்பு

ஆ) நீண் + உழைப்பு

இ) நீள் + அழைப்பு

ஈ) நீள் + உழைப்பு


5. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) சீருக்குஏற்ப

ஆ) சீருக்கேற்ப

இ) சீர்க்கேற்ப

ஈ) சீருகேற்ப


6. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) ஓடைஆட

ஆ) ஓடையாட

இ) ஓடையோட

ஈ) ஓடைவாட


சொல்லும் பொருளும்

தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் - இரக்கம்

நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

முழவு - இசைக்கருவி

புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

பயிலுதல் - படித்தல்

நாணம் - வெட்கம்

செஞ்சொல் - திருந்திய சொல்


குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை, கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

 

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக, சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது என்று வாணிதாசன் குறிப்பிடுகிறார்.


சிறுவினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன

  • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. 
  • அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. 
  • கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. 
  • நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
  • சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

சிந்தனை வினா

வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

நாட்டுப்புறப் பாடல் தமிழ் மேலும் அறிய  

நாட்டுப்புறப் பாடல் வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தாலாட்டுப் பாடல்கள்
  • விளையாட்டுப் பாடல்கள்
  • தொழில் பாடல்கள் 
  • சடங்குப் பாடல்கள்
  • கொண்டாட்டப் பாடல்கள்
  • வழிபாட்டுப் பாடல்கள் 
  • ஒப்பாரிப் பாடல்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.