கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள 'குழந்தை இலக்கியம்" என்னும் பாடல் தொகுப்பிலிருந்து 'மெய்ப்பொருள் கல்வி' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள பாடல், பாடப்பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
வாணிதாசன் பற்றிய குறிப்புகள்
வாணிதாசன் இயற்பெயர் : எத்திராசலு (எ ) அரங்கசாமி : வாணிதாசன்
பிறந்த இடம் : புதுவையை அடுத்த வில்லியனூர்
பெற்றோர்: அரங்க. திருக்காமு - துளசியம்மாள்
சிறப்புகள்: தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்" என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது.
சிறப்பு பெயர்கள்: ‘கவிஞரேறு', 'பாவலர்மணி' என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
மொழி பெயர்ப்பு : உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் வாணிதாசன் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
காலம் : 22.07.1915 - 07.08.1974
வாணிதாசன் எழுதிய பாடல்கள்
- தமிழச்சி
- கொடி முல்லை
- தொடுவானம்
- எழிலோவியம்
- பொங்கல் பரிசு
- இன்ப இலக்கியம்
- தீர்த்த யாத்திரை
- குழந்தை இலக்கியம்
மெய்ப்பொருள் கல்வி
தலைசீவிப் பள்ளிக்கே ஓடு - நல்
தங்கப் பதுமையாம் தோழர்க ளோடு !
விலையில்லா மெய்ப்பொருள் கல்வி - அதை
விரும்பிப் படித்தால் அறிவுண்டாம் செல்வி!
அழுக்கில்லா ஆடையே மேன்மை அதை
அணிவதா லல்லவோ உடற்குண்டாம் தூய்மை
ஒழுங்கோடு நூல்களைத் தூக்கி - நில்லாது
ஓட்டி ஓட்டி பள்ளியை நோக்கி!
சின்னஞ் சிறுகுயில் போல இசை
சிந்திச் சிரித்துச் செவ்விதழ் காட்டு
பொன்னொத்த தோழர் களோடு - பள்ளி
போகும் வழியிலும் ஒற்றுமை காட்டு!
கற்பிப்போர் கண்கொடுப் போரே! - அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
‘நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
- வாணிதாசன்(code-box)
பொருள் :
மகளே! குளித்துத் தலைசீவி, நல்ல துணிகளை அணிந்து, பாட நூல்களை ஏந்தி, அழகுமிகு தோழிகளோடு பள்ளிக்கு விரைந்து செல்வாயாக! பள்ளி செல்லும்பொழுது உன் நண்பர்களோடு ஒற்றுமையாகச் சிரித்துப் பழகி மகிழ்வாயாக! உன் வாழ்க்கைக்குக் கல்விதரும் ஆசிரியர்தம் சொற்கேட்டு நடப்பாயாக! உற்றதுணையாகவும் உறுதுணையாகவும் விளங்குவதே கல்வி. அதுவே என்றும் உன்னோடு நிலைத்திருக்கும். அத்தகு கல்வியைக் கற்று வாழ்வில் முன்னேறிப் புகழ்பெறுவாயாக!
சொற்பொருள்:
பதுமை- உருவம்;
மெய்ப்பொருள் - நிலையான பொருள்;
கணக்காயர் - ஆசிரியர்
வாணிதாசன் கவிதைகள்
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
- வாணிதாசன்(code-box)
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 2. மரபுக் கவிதை - வாணிதாசன் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மெய்ப்பொருள் கல்வி மாதிரி வினாக்கள்
உரிய விடையைத் தேர்வு செய்க
அ) தங்கப் பதுமையாம் தோழர்களோடு - இவ்வடியில் 'பதுமை' என்னும் சொல் உணர்த்தும் பொருள்
1. புதுமை
2. பத்து
3. உருவம்
ஆ) தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்
1. வாணிதாசன்
2. பாரதிதாசன்
3. கம்பதாசன்
பிரித்து எழுதுக.
1. அழுக்கில்லா= அழுக்கு+ இல்லா
2. அணிவதாலல்லவோ = அணிவதால் + அல்லவோ
3. செவ்விதழ் = செம்மை+ இதழ்
4.அறிவுண்டாம்= அறிவு+ உண்டாம்
5. உடற்குண்டாம் = உடலுக்கு+ உண்டாம்
6. விலையில்லா= விலை+ இல்லா
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
பள்ளி- தோழிகளோடு பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும்.
பதுமை- தங்க பதுமை போன்ற தோழிகளோடு கல்வியைக் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
தோழர்- உன் தோழர்களோடு ஒற்றுமையாகச் சிரித்துப் பழகி மகிழ வேண்டும்.
கல்வி- உற்றதுணையாகவும் உறுதுணையாகவும் விளங்குவதே கல்வி.
குறுவினாக்கள்
1. வாணிதாசன் - குறிப்பு எழுதுக.
2. பள்ளிக்குச் செல்லும் ஒழுங்குபற்றி வாணிதாசன் குறிப்பிடுவன யாவை?
குளித்துத் தலைசீவி, நல்ல துணிகளை அணிந்து, பாட நூல்களை ஏந்தி, அழகுமிகு தோழிகளோடு பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டும். பள்ளி செல்லும்பொழுது உன் நண்பர்களோடு ஒற்றுமையாகச் சிரித்துப் பழகி மகிழ வேண்டும்.
3. கல்வி கற்பிப்போர் எத்தகையவர்?
கல்வி கற்பிப்போர் கண் கொடுப்பவர் போல, அவர் கற்பிப்பதனை இரு செவி கொடுத்து கேட்க வேண்டும். அவரிடம் நற்பெயர் எடுத்திட வேண்டும்.
சிறுவினா
பள்ளிக்கு எவ்வாறு செல்லவேண்டுமென வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
Please share your valuable comments