பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடு அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. அடிமைத்தளை நீங்குவதற்குக் கண்ணீரும் செந்நீரும் சிந்தினர் பலர்.
தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், முத்துராமலிங்கர், திருப்பூர்க் குமரன், வாஞ்சிநாதன், பாரதியார் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். இவர்களுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்.
பாடத்தலைப்புகள்(toc)
வ.உ.சிதம்பரம் பிள்ளை
தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார். அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார். ஒரு நாள் மாலைப்பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக்கடற்கரையில் நின்று அவர் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பார்? இதோ அவர் வாயாலேயே கேட்போம்!
வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி இரா.பி.சேது எழுதிய கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
கொற்கை துறைமுகம்
தென்னாட்டுத் துறைமுகமே! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன்; வாழ்த்து கின்றேன். ஆயினும், அக்காலத் துறைமுகத்தின் மாட்சியையும் இக்காலத்தில் காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும் பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே!
பார் அறிந்த கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக்கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தால் வளம்பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று, மீனக்கொடி எங்கே? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்குப் பறக்கின்றது? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பறந்து திரிகின்றது? கொள்ளை இலாபம் அடைகின்ற வெள்ளையர் கப்பலில், கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்! சொந்த நாட்டிலே வந்தவருக்கு அடிமைசெய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா?
சுதேசக் கப்பல் கம்பெனி
வளமார்ந்த துறைமுகமே! இந்த வசையை ஒழிப்பதற்காக இந்நகரில் சுதேசக் கப்பல் கம்பெனி ஒன்று உருவாயிற்று. பாரதநாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்குகொண்டார்கள்.
தலைவர்
பழங்காலப் பாண்டியரைப் போல் மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார் அக்கம்பெனியின் தலைவர் ஆயினார்.
செயலாளர்
அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக்கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் புறப்பட்ட நாளில், இன்ப வெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது: கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
ஆங்கில அரசாங்கம்
வாணிக மாமணியே! அன்றுமுதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது: வெள்ளையர் வாணிகம் தளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டனர்; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக்கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக மறைமுகமாகக் கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர்; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்குமுறையைக் கையாளக் கருதி அரசாங்கத்தின் உதவியை நாடினர்.
பரங்கியர் ஆளும் துறையே! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடையது என்றும், அதை அசைக்க எவராலும் ஆகாதென்றும் அப்போது பொதுமக்கள் எண்ணியிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைத்தனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல், 'சார், சார்' என்று சலாமிட்டும், 'புத்தி, புத்தி' என்று வாய் பொத்திச் 'சரி, சரி' எனச் சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர்கள், பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். அரசாங்கம் ஆட்டுவித்தால் அப்பதுமைகள் ஆடும்; எப்போதும், 'அரசு வாழ்க' என்று பாடும். இத்தகைய சூழ்நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம்!
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது: காட்டுக்கனல் போல் எங்கும் பரவிற்று.
"சுதந்தரம் எனது பிறப்புரிமை: அதை அடைந்தே தீருவேன்" என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர்.
அவரே பாரதநாடு போற்றும் பாலகங்காதர திலகர்.
தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர்:
"வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று அழகிய பாட்டிசைத்து, நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார்.
புதுமைகண்ட துறைமுகமே! அந்நாளில் 'வந்தேமாதரம்' என்றால் வந்தது தொல்லை. அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக்கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் நான் பேசும்பொழுது 'வந்தே மாதர'த்தை அழுத்தமாகச் சொல்வது வழக்கம். அதைக்கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள்: உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியும் அல்லவா? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று; என் மீது பல வகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமைதியை நான் கெடுத்தேனாம்! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை கொடுத்தேனாம்! வெள்ளையர் மீது வெறுப்பை ஊட்டினேனாம்! வீரசுதந்திரம் பெற வழிகாட்டினேனாம்!
சிறையில் சிதம்பரனார் இழுத்த செக்கு
சிறைத் தண்டனை
வெள்ளையர் கோர்ட்டிலே இக்குற்ற விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன். என் உடல் சலித்தது. ஆயினும், உள்ளம் ஒருநாளும் தளர்ந்ததில்லை; சிறைச்சாலையை தவச்சாலையாக நான் கருதினேன்; கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.
'சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்'
- சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று
செல்வச் செழுந்துறையே! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். கடும்பணி இட்டவர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்ததில்லை. ஆனால், முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தேன். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினேன்.
ஒரு நாள் மாலைப்பொழுது; உடல் நலிந்து, உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர்; அதிகாரத் தோரணையில் நீட்டி நிமிர்ந்து நின்றுகொண்டு எனக்குச் சில புத்திமதிகளைச் சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. 'அடே மடையா! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன்? மூடு வாயை! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான்' என்று வேகமுறப் பேசினேன். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர்.
தமிழ் நூல்கள்
தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன். இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ?
"தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்"
- கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார்
இயற்றிய நூல்கள்
ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தேன்.
உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு, மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினேன்.
இவற்றை என் தமிழ்த்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன். சிறையில் இருந்து இயற்றிய நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை வேண்டுகிறேன்.
வருங்காலப் பெருவாழ்வே! காலம் கடிது சென்றது. என் சிறைவாழ்வு முடிந்தது. இந்நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக்குழந்தையை - தேசக் கப்பலை இத்துறைமுகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். 'பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே' என்று பரிதவித்தேன். 'என்று வருமோ நற்காலம்' என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீரசுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும் பாரதநாட்டிலே?
"பாயக் காண்பது சுதந்திரவெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"
என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?" என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டு அகன்றார் வீர சிதம்பரனார்.
நூல் வெளி
இரா.பி.சேது பிள்ளை
வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி இரா.பி.சேது எழுதிய கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
பன்முகத் திறன்
இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
சிறப்புப் பெயர்
இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
சிறப்புகள்
செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
சாகித்திய அகாதெமி விருது
இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
நூல்கள்
- ஆற்றங்கரையினிலே,
- கடற்கரையினிலே,
- தமிழ் விருந்து,
- தமிழகம் - ஊரும் பேரும்,
- மேடைப்பேச்சு,
- தமிழின்பம்
உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் பகுதிக்காக 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வினா விடை மதிப்பீடு
வ.உ. சிதம்பரனாரின் உரையை, வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார்.
வ.உ.சி. அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார். அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம்.
பன்முகத்தன்மை
அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.
ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார்.
சிறப்புப் பெயர்கள்
- செக்கிழுத்த செம்மல்,
- கப்பலோட்டிய தமிழன்,
- தென்னாட்டுத் திலகர்.
இயற்றிய நூல்கள்
- ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல் மொழிப்பெயர்ப்பு "மனம் போல் வாழ்வு"
- மெய்யறிவு,
- மெய்யறம்
பொன்மொழிகள் மேற்கோள்கள்
- தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்
- "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் TNPSC previous year questions
1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர்
வ.உ.சிதம்பரம்
2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பாரதியார்
3. வ.உ.சி.அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்
பாரதியார்
4. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
தமிழ், ஆங்கிலம்
5. "தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்" என்றவர்
வ.உ.சிதம்பரம்
6. "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்" என்றவர்
வ.உ.சிதம்பரம்
7. ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூலை "மனம் போல் வாழ்வு" என மொழிப்பெயர்ப்பு செய்தார்
வ.உ.சிதம்பரம்
8. வ.உ.சிதம்பரம் இயற்றிய நூல்கள்
மெய்யறிவு, மெய்யறம்
9. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
வ.உ.சிதம்பரம்
10. வ.உ.சிதம்பரம் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த ஆண்டு
1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள்
11. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரை சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்
பாரதியார்
12. வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த பாடப்பகுதி இரா.பி.சேது எழுதிய ....... என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
கடற்கரையினிலே
13. இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
இரா.பி.சேது
14. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
இரா.பி.சேது
15. இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
இரா.பி.சேது
16. இரா.பி.சேது நூல்களில் பொருந்தாதது
விண்வெளியினிலே
கடற்கரையினிலே
தமிழ் விருந்து
தமிழின்பம்
17. சிதம்பரனார் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் .... உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார்
பாண்டித்துரை
18. 'சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்' என்றவர்
பின்ஹே
19. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி
பின்ஹே
20. "சுதந்தரம் எனது பிறப்புரிமை: அதை அடைந்தே தீருவேன்" என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர்.
பாலகங்காதர திலகர்
21. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்றவர்
பாரதியார்
தலைவர்
22. மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கியவர்
பாண்டித்துரையார்
23. சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர்
பாண்டித்துரையார்
24. சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர்
வ.உ. சிதம்பரனார்
25. சுதேசக் கப்பல், வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எங்கு நோக்கிப் பயணித்தது
கொழும்பு
26. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்றவர்
வள்ளுவர்
26. கப்பலோட்டிய தமிழன் யார்
வ.உ. சிதம்பரனார்
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் கட்டுரை
முன்னுரை
பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடு அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. அடிமைத்தளை நீங்குவதற்குக் கண்ணீரும் செந்நீரும் சிந்தினர் பலர்.
தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், முத்துராமலிங்கர், திருப்பூர்க் குமரன், வாஞ்சிநாதன், பாரதியார் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். இவர்களுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்.
பிறப்பு
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை V. O. Chidambaram Pillai.
பிறந்த நாள்: செப்டம்பர் 5 1872
பிறந்த இடம் : தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இறந்த நாள்: நவம்பர் 18 1936
ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்.
பன்முகத்தன்மை
அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.
பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சிறப்புப் பெயர்கள்
- செக்கிழுத்த செம்மல்,
- கப்பலோட்டிய தமிழன்,
- தென்னாட்டுத் திலகர்.
இயற்றிய நூல்கள்
- ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல் மொழிப்பெயர்ப்பு "மனம் போல் வாழ்வு"
- மெய்யறிவு,
- மெய்யறம்
பொன்மொழிகள் மேற்கோள்கள்
- தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன்
- "பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"
Please share your valuable comments