நாடும் நகரமும் - ஊரும் பேரும்

நாடு என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. 

சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கப்படும்.

பாடத்தலைப்புகள்(toc)

நாடும் நகரமும்

நாடு

மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. 

நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் 'நாடு' என அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

சிறுபான்மையாகச் சில தனி ஊர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருதையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. 

அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயர் உடையது. இங்ஙனம், நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம்.

மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஓரூர் கொரநாடு என வழங்கப்படுகிறது. 

பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன,

நாடு என்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவுற்ற தன்மையை இவ்வூர்ப்பெயர்கள் உணர்த்துகின்றன.

நகரம்

நாட்டின் தலைமைசான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்கள் ஆயின.

ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது. 

பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வாணிகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகின்றது. இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

சென்னையின் பகுதியான தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந்து இருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றுகள் ஆகும்.

சென்னை

இக்காலத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் மேடுபள்ளமாகக் கிடந்தது அவ்விடம்.

சென்னையின் பகுதிகளாக இன்று விளங்கும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந்நாளில் காட்சி அளித்தன.

மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.


திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி எனப்பெயர் பெற்றது. அங்கே பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருவல்லிக்கேணி ஆயிற்று.

திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்,பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு.

இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அருகில் பெரும்பள்ளமாக அந்நாளில் காணப்பட்டது.

பேட்டை

தொழில்களால் சிறப்படையும் ஊர்கள் பேட்டை எனப் பெயர் பெறும். 

  • சேலத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறும் ஓர் ஊர், செவ்வாய்ப்பேட்டை எனப்படுகிறது. 

புரம்

'புரம்' என்னும் சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். 

ஆதியில் காஞ்சி எனப் பெயர் பெற்ற ஊர் பின்னர், 'புரம்' என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. 

  • பல்லவபுரம் (பல்லாவரம்), 
  • கங்கைகொண்ட சோழபுரம், 
  • தருமபுரம் 

முதலியவை மேலும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பட்டினம்

கடற்கரையில் உருவாகும் நகரங்கள் 'பட்டினம்' எனப் பெயர் பெறும். 

  • காவிரிப்பூம்பட்டினம், 
  • நாகப்பட்டினம், 
  • காயல்பட்டினம், 
  • காயல்பட்டினம், 
  • குலசேகரப்பட்டினம்,
  • சதுரங்கப்பட்டினம்

ஆகியவை 'பட்டினம்" எனப் பெயர் பெற்ற ஊர்கள் ஆகும்.

பாக்கம்

கடற்கரைச் சிற்றூர்கள் 'பாக்கம்” எனப் பெயர் பெறும். 

  • பட்டினப்பாக்கம், 
  • கோடம்பாக்கம், 
  • மீனம்பாக்கம், 
  • நுங்கம்பாக்கம், 
  • சேப்பாக்கம் 

இப்படிப் 'பாக்கம்' எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.

புலம்

‘புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்.

 எடுத்துக்காட்டாக, 

  • மாம்புலம், 
  • தாமரைப்புலம், 
  • குரவைப்புலம் 

முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

குப்பம்

நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், 'குப்பம்' என்னும் பெயரால் வழங்கப்பெறும்.

  • காட்டுக்குப்பம், 
  • நொச்சிக்குப்பம், 
  • மஞ்சக்குப்பம், 
  • மந்தாரக்குப்பம்

முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்.

 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' என்றார் ஒரு புலவர்.

ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங்காணாப்பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழைமேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும். கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால், அவர் உள்ளம் துள்ளி மகிழும்.

ஆற்றுநீராலும் மழைநீராலும் உணவுப் பொருள்களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. 

'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' என்று பாடினார் கம்பர். 

இக்கருத்தை மனத்தில்கொண்டு, 

''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றார் பாரதியார். 

- ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழ் விருந்து

ஊரும் பேரும்

ஊரும் பேரும் என்னும் நூலின் ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ் மக்கள், தம் குடியிருப்புப் பகுதிகளை ஊர் என்னும் பெயரால் குறித்தனர். ஊர் என்னும் இத்தமிழ்ச்சொல் உலகின் பல நாடுகளில் வழங்குவது வியப்பளிக்கிறது. பாபிலோன் அருகே ஊர் என்னும் பெயரில் ஒரு நகரும், ஊர்நம்மு என்னும் ஊரும் உள்ளதாம். நாளடைவில் பல்வேறு ஊர்கள் உருவாக, நிலவகைக்கேற்பப் பெயரிட்டு மலையூர், காட்டூர், மருதூர், கடலூர் என வழங்க, மக்கள் தலைப்பட்டனர். இவ்வாறு  தமிழகத்தில் ஊரும் பேரும் தோன்றின. 

சில ஊர் பெயர்கள்

  • கான்பூர்
  • சிங்கப்பூர்
  • கோலாலம்பூர்
  • மணிப்பூர்
  • ஜனக்பூர்
  • ஜெய்ப்பூர்
  • ஜோத்பூர்

குறிஞ்சி நில ஊர்கள்

தமிழகத்தில் வளமார்ந்த மலைகள் பலவுண்டு. மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு 

  • ஆனைமலை, 
  • சிறுமலை, 
  • திருவண்ணாமலை, 
  • நாகமலை, 
  • வள்ளிமலை, 
  • விராலிமலை 

எனப் பெயர்கள் வழங்குவதனைக் காணலாம்.

ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி மலை எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததனைக் குன்று எனவும், குன்றிலும் உயரத்தில் குறைந்ததனைக் கரடு எனவும், பாறை எனவும் பெயரிட்டு அழைத்தனர். இவற்றையொட்டி வாழ்ந்த மக்கள், தம் வாழ்விடங்களுடன் ஊர் என்னும் பெயரையும் சேர்த்து ஊர்ப் பெயர்களாக்கினர். 

குன்றை அடுத்துள்ள ஊர்கள் 

  • குன்றூர், 
  • குன்றத்தூர், 
  • குன்றக்குடி 

என வழங்கப் பெற்றன. 

பாறை அடுத்துள்ள ஊர்கள் 

  • குட்டப்பாறை, 
  • சிப்பிப்பாறை, 
  • பூம்பாறை, 
  • மட்டப்பாறை, 
  • மணப்பாறை,
  • வால்பாறை 

என்னும் ஊர்ப்பெயர்களுக்கான காரணத்தையும் இதனால் அறியலாம்.

மலையைக் குறிக்கும் வடசொல், கிரி என்பதாகும். (alert-success)

மலையையொட்டி எழுந்த ஊர்ப்பெயர்கள் 

  • கிருஷ்ணகிரி, 
  • கோத்தகிரி,
  • சிவகிரி, 
  • நீலகிரி 

குறிஞ்சி நிலமக்கள் மலையிலிருந்து பிற இடங்களுக்குச் சென்று தங்கிய போதும் தங்கள் நிலப்பெயரை மறவாது 

  • ஆழ்வார்க்குறிச்சி, 
  • கல்லிடைக்குறிச்சி, 
  • குறிச்சி, 
  • கள்ளக்குறிச்சி, 
  • மொடக்குறிச்சி 

எனப் பெயர் வைத்துக் கொண்டனர் போலும். குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குறிச்சியாயிற்று எனலாம்.

முல்லை நில ஊர்கள் 

தமிழகத்தில் மரஞ்செறிந்த காடுகள் பழங்காலத்தில் மலிந்திருந்தன. மரங்கள் சூழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்த மக்கள், மரங்களுக்குப் பெயர்சூட்டி, அம்மரப்பெயர்களோடு ஊர்ப்பெயர்களையும் வழங்கினர். 

  • அத்தி (ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் ஆர்க்காடு எனவும், 
  • ஆல மரங்கள் நிறைந்த ஊர் ஆலங்காடு எனவும், 
  • களாச்செடிகள் நிறைந்த பகுதி களாக்காடு எனவும், 
  • மாமரங்கள் செழித்திருந்த இடம் மாங்காடு எனவும், 
  • பனைமரங்கள் நிறைந்திருந்த ஊர் பனையபுரம் 

எனவும் பெயரிட்டுத் தம்மிடத்தைக் குறிப்பிட்டனர். 

காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் பட்டி, பாடி என்றழைக்கப்பெற்றன. 

ஆடு, மாடுகள் அடைக்கப்படுமிடம் பட்டி எனப்படும். (alert-success)

  • ஆட்டையாம்பட்டி, 
  • காளிப்பட்டி, 
  • கோவில்பட்டி, 
  • சிறுகூடல்பட்டி, 
  • சின்னகொல்லப்பட்டி, 
  • பெரியகொல்லப்பட்டி 

முதலிய நூற்றுக்கணக்கான பட்டிகள் தமிழ்நாட்டில் உள்ளன. 

மருதநில ஊர்கள்

நிலவளமும் நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் ஊர் என வழங்கப்பட்டது. பொங்கிப் பெருகி வழிந்தோடி வளங்கூட்டிய ஆறும், அதன் கரையில் இருந்த உயர்ந்த மரங்களும் ஊர்ப்பெயர்களில் கலந்து நிலைத்தன. ஆறுகள் பாயும் இடங்களில் ஆற்றூர் என வழங்கும் ஊர்கள் தவிராமல் இடம்பெற்றிருக்கும். இதுவே காலப்போக்கில் பேச்சுவழக்கில் ஆத்தூர் என மருவி வழங்குகிறது. 

  • கடம்பமரம் சூழ்ந்த பகுதி கடம்பூர், கடம்பத்தூர், 
  • தென்னை சூழ்ந்த பகுதி தெங்கூர்;
  •  புளியமரங்கள் அடர்ந்த பகுதி புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி 

என வழங்கும் ஊர்கள் மரப்பெயர்த் தொகுப்பு அடிப்படையில் பெயரிடப்பட்ட ஊர்களாகும்.

நம் முன்னோர் குளம், ஏரி, ஊருணி முதலிய நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றோடு ஊர்ப்பெயர்களையும் இணைத்தனர். 

  • சீவலப்பேரி, 
  • புளியங்குளம், 
  • பேராவூரணி, 
  • மாங்குளம், 
  • வேப்பேரி 

என்பன இவ்வாறு தோன்றிய ஊர்ப்பெயர்களே.

நெய்தல் நில ஊர்கள்

பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் பட்டினம் எனவும், சிற்றூர்கள் பாக்கம் எனவும் பெயர் பெற்றிருந்தன. 

நெடிய கடற்கரையை உடைய தமிழகத்தில் பரதவர் வாழ்ந்த ஊர்கள் 

  • கீழக்கரை, 
  • கோடியக்கரை, 
  • நீலாங்கரை 

எனப் பெயர் பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் மீனவர் வாழுமிடங்களின் பெயர்கள், குப்பம் என்னும் பெயரைச் சேர்த்துப் பல்கிப் பெருகி வருகின்றன. 

அரசும் ஊர்களும்

பெருவேந்தரும் குறுநில மன்னரும் அரண்கள் அமைத்து மக்களைக் காத்தனர். அரண்களுள் கோட்டையும் ஒன்று. 

கோட்டை சூழவிருந்த ஊர்களே 

  • கந்தர்வக்கோட்டை, 
  • கோட்டை, 
  • தேவக்கோட்டை, 
  • நாட்டரசன்கோட்டை, 
  • நிலக் கோட்டை, 
  • பட்டுக்கோட்டை, 
  • புதுக்கோட்டை 

என வழங்கலாயின.


திசையும் ஊர்களும்

நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. 

  • தம் ஊருக்குக் கிழக்கே எழுந்த ஊர்ப்பகுதியைக் கீழூர் எனவும், 
  • மேற்கே அமைந்த ஊர்ப்பகுதியை மேலூர் எனவும்

பெயரிட்டு வழங்கினர். 

  • தெற்கே உள்ளது தென்பழஞ்சியாகவும் 
  • வடக்கே உள்ளது வடபழஞ்சியாகவும் 

பெயர் பெற்றன.

நாயக்க மன்னர்கள் 

நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினார்கள். அவர்கள் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கினார்கள். 

அவ்வாறு பெயர்பெற்ற ஊர்கள் 

  • ஆரப்பாளையம்,
  •  இராசபாளையம், 
  • கணக்கம்பாளையம், 
  • குமாரபாளையம், 
  • கோபிச்செட்டிப்பாளையம்,
  • கோரிப்பாளையம், 
  • மேட்டுப்பாளையம் 

எனப் பலவாகும். 

காலச்சுழற்சி, ஆட்சிமாற்றம், வேற்றினக்கலப்பு முதலிய காரணங்களால் முதனிலை ஊர்ப்பெயர்களும் தனித்தன்மைமிக்க ஊர்ப்பெயர்களும் சிதைந்து, திரிந்து, மருவி, மாறி வழங்கலாயின.

கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று மதுரையாக மாறியுள்ளது. கோவன்புத்தூர் என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று கோவையாக மருவியுள்ளது. (alert-success)

 

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 14. தமிழகம் ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

ஓரிரு சொற்களில் விடை தருக 

1. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன ?

விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டி.

2. பாக்கம் என்னும் பெயருடைய சிற்றூர்கள் எதன் அருகில் உள்ளன?

பாக்கம் என்னும் பெயருடைய சிற்றூர்கள் கடற்கரை அருகில் உள்ளன.

3. நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்குமாறு அமைந்த ஊர்ப்பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

கொரநாடு, கானாடு,  தொன்னாடு

நிரப்புக.

அ.  'ஊரும் பேரும்' என்னும் நூலின் ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

ஆ) ஆற்றூர் பேச்சுவழக்கில் ஆத்தூர் என மருவியுள்ளது .

TNPSC previous year question 

1. நம்மாழ்வார் பிறந்த இடம் எது?

குருகூர் என்ற ஆழ்வார்திருநகரி

2. மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் பற்றிப் பாடியவர்?

திருஞானசம்பந்தர்

3. கடற்கரைச் சிற்றூர்கள் எவ்வாறு பெயர் பெறும்?

பாக்கம்

4. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினார்கள்?

எழுபத்திரண்டு

5. கல்வெட்டுகளில் காணப்படும் மதுரையின் பெயர் என்ன?

மதிரை

6. ஆடு மாடுகள் அடைக்கப்படுமிடம் இடம்

பட்டி

7. மலையைக் குறிக்கும் வடசொல்

கிரி

8. 'ஊரும் பேரும்' என்னும் நூலின் ஆசிரியர்

 ரா.பி.சேதுப்பிள்ளை

9. ஆற்றூர் பேச்சுவழக்கில் ..... என மருவியுள்ளது

ஆத்தூர்

10. விருதுநகரின் முந்தைய பெயர்

விருதுப்பட்டி

11. ........ என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று கோவையாக மருவியுள்ளது.

கோவன்புத்தூர்

12. மீனவர் வாழுமிடங்களின் பெயர்கள்

குப்பம்

13. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் 

பட்டினம் 

14. ''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றவர்

பாரதியார்

15. 'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' என்று பாடியவர் 

 கம்பர்

16. நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள்

 குப்பம்

 17. 'சீரைத் தேடின் ........ தேடு' 

ஏரைத்

18. ‘புலம்” என்னும் சொல் குறிப்பது

நிலம்

19. தொழில்களால் சிறப்படையும் ஊர்கள் 

பேட்டை

20. பல்லாவரம் முந்தைய பெயர்

பல்லவபுரம் 

21. மயிலாப்பூரில் உள்ள .... என்னும் சிவாலயம் குறித்து திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

கபாலீச்சுரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad