தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
தனிப்பாடல் - இராமச்சந்திரக் கவிராயர்
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே.
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம்
இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி
எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!
குணக்கடலே அருட்கடலே அசுர ரான
ஏகுரைகடலை வென்றபரங் குன்று ளானே!
- இராமச்சந்திரக் கவிராயர்(code-box)
பாடல் பொருள்
கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்க இறைவன் சொல்லித் தரவில்லையே! பொன்பொருள் கொடுத்து என்னைக் காக்கவும் இல்லையே! இதற்காக யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன் ? எங்கும், எல்லாரிடமும் பல்லைக்காட்டிப் பிழைக்குமாறு இறைவன் என்னைப் படைத்துவிட்டானே!
பாட்டுப் பாடிப் பரிசு வாங்கப் பணம் படைத்தவர்களைப் பார்க்கப் போகும்போது, சில நேரம் அவர்கள் வணக்கம் சொல்லி வரவேற்கிறார்கள். சிலநேரம் என்னைக் கண்டதும் அவர்களுக்குக் குமரகண்ட வலிப்பு வருகிறது. முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். சில நேரம், என்னை ஏறிட்டும் பார்க்காமல் வேண்டுமென்றே கணக்குப் புத்தகத்தைப் புரட்டுகிறார்கள். சிலநேரம் நாய்களைப்போலக் கடிக்க வருகிறார்கள். இப்படிப்பட்ட கயவர்களிடம் தமிழைப் பாடிப்பாடிப் பரிசு வாங்க இன்னும் எத்தனை நாள், நான் திரிந்து அலைவேன் ? ஒலிக்கும் கடலாக இருந்த அரக்கர்களை வென்றவனே! திருப்பரங் குன்றத்தில் விளங்கும் முருகா! கூறு.
சொல்பொருள்
- இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
- அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
- ஆரைத்தான் - யாரைத்தான்
- பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
- புவி - உலகம்
- குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
- இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி,
- குணக்கடலே! அருட்கடலே! - முருகனை இவ்வாறு அழைக்கிறார்
- குரைகடல் - ஒலிக்கும் கடல்; அசுரர்கள் கடல் வடிவில் வந்தார்கள் என்பது கதை
- பரங்குன்றுளான் - திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
நூல்குறிப்பு
இப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர்; துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர்.
தனிப்பாடல் திரட்டு நூல்குறிப்பு
பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர்.
இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
சிலேடை அல்லது இரட்டுறமொழிதல்
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர்.
இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல்.
இருபொருள்படப் பாடுவது.
(எ.கா.) ஆறு
ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும்.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise தனிப்பாடல் மதிப்பீடு
நிரப்புக.
அ. புலவரின் வறுமையைப் பாடியவர் இராமச்சந்திரக் கவிராயர்
ஆ. இரு பொருள்படப் பாடுவது இரட்டுறமொழிதல் .
ஓரிரு தொடர்களில் விடை எழுதுக.
அ. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் எது ?
புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய் குமரகண்ட வலிப்பு.
ஆ. தம்மை என்ன பண்ணுமாறு பதுமத்தான் படைத்துவிட்டான் என்று புலவர் வருந்துகிறார்?
தம்மை எங்கும், எல்லாரிடமும் பல்லைக்காட்டிப் பிழைக்குமாறு பதுமத்தான் படைத்துவிட்டான் என்று புலவர் வருந்துகிறார்.
TNPSC previous year question
1. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
இராமச்சந்திரக் கவிராயர்
2. புலவரின் வறுமையை குறித்த சிலேடைப்பாடல் பாடியவர்
இராமச்சந்திரக் கவிராயர்
3. இரு பொருள்படப் பாடுவது
இரட்டுறமொழிதல்
4. "பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணி னானே" இதில் பதுமத்தான் என்று அழைக்கப்படும் கடவுள்
தாமரையில் உள்ள பிரமன்
5. ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது
சிலேடை
6. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்குச் சில நேரங்களில் வரும் நோய்
குமரகண்ட வலிப்பு
7. கீழ்கண்டவற்றுள் ஆறு என்ற சொல் குறிக்காதது
நீர் ஓடுகின்ற ஆறு
எண் ஆறு
செல்லும் வழி
ஆற்று
அருமை
பதிலளிநீக்குPlease share your valuable comments