இன்று, நீர் மாசுபாடு அடைந்ததன் காரணமாக அதனைத் தூய்மைப்படுத்தியும் விலைக்கு வாங்கியும் குடிக்கும் நிலையில் இருக்கிறோம். தண்ணீரைப் புட்டியில் அடைத்து விற்பது போன்று, உயிர்வளியையும் (ஆக்சிஜன்) விற்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன். வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது; மெய்யால் உணரமுடியும். என்னால் மழை: என்னால் பருவமாற்றம்: என்னால் இசை: என்னாலும் இலக்கியம்; இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா?
நான்தான் காற்று.
காற்றாகிய நான்
தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்தது எனக்குப் பெருமையே!
உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கை!
நாம் நம்பியிருப்பதும் நம்மில் என்று இருப்பதும் இயற்கையே, மூச்சுக்குக் காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்குக் கதிரவன் போன்றவை உயிரினங்களின் முதன்மைத் தேவை.
- இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது;
- காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது;
- மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல்;
- தூக்கிச் சென்றால் புயல்!
நம்மை எப்போதும் சூழ்ந்திருக்கும் இயற்கையை நாம் என்றேனும் உற்றுப் பார்க்கிறோமா? இருளில் நடந்தாலும் வானத்து விண்மீன்களையும் நம்முடனேயே நடந்துவரும் நிலவையும் கண்டு மகிழ்கிறோமா? காடு, மலை, அருவி, கதிரவன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு. 'நீரின்றி அமையாது உலகு' என்றாற் போல காற்றின்றி அமையாது உலக உயிரியக்கம் என்பதையே வெவ்வேறு கோணங்களில் காலந்தோறும் கவிஞர்கள் பலரும் பாடிவருகிறார்கள்.
உயிராக நான்
உங்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது காற்றின் இயக்கம்தானே!
அதனால்தான் திருமூலர் தம் திருமந்திரத்தில்
'மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்'
என்றும்,
பிற்கால ஒளவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,
'வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம்'
என்று என்னைச் சிறப்பித்துள்ளார்.
பல பெயர்களில் காற்று
உங்களின் பெயருடன் ஒரே ஒரு செல்லப்பெயரும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் எனக்கோ இந்தப் பூவுலகில் பல பெயர்கள் உண்டு.
- காற்று,
- வளி,
- தென்றல்,
- புயல்,
- சூறாவளி
எனப் பல்வேறு பெயர்களால் நான் அழைக்கப்படுகிறேன்.
பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்பத்
- தென்றல்காற்று,
- பூங்காற்று,
- கடல்காற்று,
- பனிக்காற்று,
- வாடைக்காற்று,
- மேல்காற்று,
- கீழ்காற்று,
- மென்காற்று,
- இளந்தென்றல்,
- புழுதிக்காற்று,
- ஆடிக்காற்று,
- கடுங்காற்று,
- புயல்காற்று,
- பேய்க்காற்று,
- சுழல்காற்று,
- சூறாவளிக்காற்று
எனப் பல்வேறு பெயர்களால் நான் அழைக்கப்படுகிறேன்.
நான்கு திசையிலும் காற்று
நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் தமிழர்கள் எனக்குப் பெயர் சூட்டியுள்ளனர்.
கிழக்கு என்பதற்குக் குணக்கு
என்னும் பெயருமுண்டு.கிழக்கிலிருந்து வீசும்போது நான்
கொண்டல் எனப்படுகிறேன். கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறேன்; இன்பத்தைத்
தருகிறேன்; மழையைத் தருகிறேன்; கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களைச் சுமந்து
வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன்.
மேற்கு என்பதற்குக் குடக்கு
என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்;
மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து
வீசுவதால் வெப்பக்காற்று எனப்படுகிறேன்.
வடக்கு என்பதற்கு வாடை
என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான்
வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும்
குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
தெற்கிலிருந்து
வீசும்போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; மரம், செடி, கொடி, ஆறு,
மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு
கொள்கிறேன்.
இலக்கியத்தில் நான்
தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவடிகள் என்னை,
'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' - சிலம்பதிகாரம் 2: 24
என நயம்பட உரைக்கிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி,
'நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த
தென்றலே'
எனத் தூது செல்ல என்னை அன்போடு அழைக்கிறாள்.
அது மட்டுமல்ல,
"நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே"
எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் நான் நீங்கா இடம் பிடித்திருக்கிறேன்.
முந்நீர் நாவாய் (பாய்மரக் கப்பல்)
பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றாகிய என்னால் இயக்கப்பட்ட பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன.
"நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக்
கரிகால் வளவ"!" - புறம் 66
எனக் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில், சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் 'வளி' எனக் குறிப்பிட்டுச் சிறப்புச் செய்திருப்பது என்னையே!
மழை தருவேன் நான்
நான் பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டுவந்து மழையைத் தருகிறேன்: தென்மேற்குப் பருவக்காற்றாக, வடகிழக்குப் பருவக்காற்றாக உலா வந்து மேகத்தைக் குளிர்வித்து மழையாகத் தருகின்றேன். கதிரவனின் வெப்பத்தால் சூடாகி, அடர்த்தி குறைந்து மேலே செல்லும் நான், அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியும் பருவக்காற்றாக மாறுகின்றேன்;
- ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும்
- அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும்
வீசுகின்றேன்; இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன்.
இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
தடம் பதிப்பேன் நான்
வடகிழக்குப் பருவ காலங்களில், தாழ்வுமண்டலமாய்த் தவழ்ந்து புயலாய் மாறிப் புறப்படுவேன். ஆற்றலுடன் வீறுகொண்டு பயணிக்கத் தொடங்கினால் என்னைத் தடுக்க யாராலும் இயலாது; மழையாகப் புயலாகத் தடம் பதிப்பேன் நான்.
'என் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை' - (புறம் 51)
ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார்.
இதுபோன்றே மதுரை வாழ இளநாகனார்,
'கடுங்காற்று, நிமி மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது'- (புறம் 55)
என்றும் வேகத்தைக் கூறியுள்ளார்.
புதுப்பிக்கக் கூடிய ஆற்றலாக நான்
நான் உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கின்றேன்: தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு உதவுகின்றேன்; விதைகளை எடுத்துச் சென்று பல இடங்களிலும் தூவுகின்றேன். பூவின், தேனின், கனியின், தாவரத்தின், உயிரினத்தின் மணத்தை என்னில் சுமந்து. புவியின் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுகின்றேன். இவை மட்டுமல்ல, உங்கள் நவீன தொலைத்தொடர்பின் மையமாகவும் நானே உள்ளேன்.
'காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்' எனும் புதுமொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன்.
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே.
ஆனால், என்னை உலகிலேயே
அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் இந்தியாவுக்கு என்பதை
அறியும்போது எனக்குப் பெருந்துயரே,
உயிரை உள்ளிருத்தும் காற்று
நீங்கள் உணவின்றி ஐந்து வாரம் உயிர்வாழ முடியும். நீரின்றி ஐந்து நாள் உயிர் வாழ முடியும். ஆனால் நானின்றி ஐந்து நிமிடம் கூட உங்களால் உயிர் வாழ முடியாது. இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தும் என்னை நேசிப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் நான் உங்களால் மாசுபடுகிறேன்.
- குப்பைகள், நெகிழிப் பைகள், மெதுஉருளைகள் (tyres) போன்றவற்றை எரிப்பது,
- குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டப்பட்ட அறை ஆகியவற்றை மிகுதியாகப் பயன்படுத்துவது,
- மிகுதியாகப் பட்டாசுகளை வெடிப்பது,
- புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குவது,
- பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாத தனிமனிதரின் மிகுதியான ஊர்திப்பயன்பாடு,
- வானூர்திகள் வெளிவிடும் புகை,
என உங்களின் அத்தனை செயல்பாடுகளாலும் என்னைப் பாழாக்குகிறீர்கள். இதனால்,
- கண் எரிச்சல்,
- தலைவலி,
- தொண்டைக்கட்டு,
- காய்ச்சல்,
- நுரையீரல் புற்றுநோய்,
- இளைப்பு நோய் எனப் பல நோய்களால் துன்பமடைகிறீர்கள்.
இந்தியாவில்
மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது காற்று
மாசுபாடே
என்பது தெரியுமா உங்களுக்கு?
ஓசோன் படலம்
என்னுடைய மேலடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் மூலம் கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊனதாக் கதிர்களைத் தடுக்கும் அரணாக விளங்குகின்றேன். புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் (சூரியன்) கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுக்கின்றேன்.
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்.
உங்கள் வசதிக்காக என்னை வைத்து குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சுக்காற்றை வெளிவிடும் இயந்திரங்களான குளிர்பதனப் பெட்டி முதலானவற்றை உருவாக்கியிருக்கிறீர்கள்! அந்த நச்சு, ஓசோன் படலத்தை ஓட்டையிடுகின்றது: அதனால் புறஊதாக் கதிர்கள் நேரடியாக உங்களைத் தாக்குகின்றன. இதனால் ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் அடைகின்றன. உங்கள் கண்களும் தோலும் பாதிப்படைகின்றன.இதைக் குறைக்கும் விதமாக ஹைட்ரோ கார்பன் என்னும் குளிர்பதனியை இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றீர்கள்.
உங்கள் நடவடிக்கைகளால் எனக்குள் கலந்துவிடும்
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும்போது நீரில் கரைந்துவிடுவதால் அமிலமழை பெய்கிறது.
17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக
விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக்
காட்சியளிப்பதன் காரணம் அமிலமழை. இதனால் மண், நீர், கட்டடங்கள்,
காடுகள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை துன்பத்துக்குள்ளாகின்றன.
நான் மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் [நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
மரம் தரும் வரம் நான்
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள்.
- மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுங்கள்;
- பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தாருங்கள்;
- மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துங்கள்;
- கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள்;
- வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிடுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறீர்கள். என்னை, ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதாது. நீங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும்.
காற்றின் மதிப்பை உணர்ந்த நம் முன்னோர்களை போல் நாமும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
கிரேக்க அறிஞர் "ஹிப்பாலஸ்" (Hippalus) என்பவர் பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார் என்பது வரலாறு. அதற்கும் முன்னரே என் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
ஹிப்பாலஸ் பருவக்காற்று
கி.பி. (பொ.ஆ) முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார் அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன. அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.
பின் வருத்தங்கள்
மென்துகிலாய் உடல்வருடி
வாஞ்சையுடன் மனம்வருடி
பகலெரிச்சல் பணக்கவலை
பயக் குழப்பம்
மொட்டை மாடித்தனியிரவில்
நட்சத்திரக் கணக்கெடுப்பில்
மறுபடியும் தவறவிட்ட
தாளாத தன்னிரக்கம்
இவை எல்லாமே
எளிதாகக் கரைந்து போகும்
மாயங்கள் செய்கின்ற
பூங்காற்றே!
இத்தனை நாள்
உனைப் பாடாதிருந்து விட்டேன்
புதுக் கவிதையில் சிக்கிப் போனேன். - தேவகோட்டை வா.மூர்த்தி
மூச்சுப்பயிற்சி செய்க,வாழ்நாளை நீட்டிக்கும் என்பதை நினைவுகூர்க.உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்க நண்பர்களே!
தேர்ந்தெடுக்க
செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஜூ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
அ) செய்தி ! மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க
கொண்டல் 1.மேற்கு
கோடை 2. தெற்கு
வாடை 3.கிழக்கு
தென்றல் 4. வடக்கு
A) 1,2,3,4 B) 3, 1,4, 2 C) 4, 3, 2, 1 D) 3, 4, 1, 2
Please share your valuable comments