புதுமை விளக்கு

உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளை விட உள்ளத் தூய்மையே முதன்மையானது. 

பாடத்தலைப்புகள்(toc)

புதுமை விளக்கு

இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம்.

பொய்கையாழ்வார் வரலாறு TNPSC 

பிறந்த ஊர்

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். 

  • திருமால் அம்சத்தில் கண் போன்றவர் இவர்.

பாடிய பாடல்கள் 

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். 

முதல் திருவந்தாதி என்னும் இவரின் பாக்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பாவிலும் அமைந்தவை.

சிறப்புகள் - பெயர்க் காரணம் 

தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் என்ற பெயர் பெற்றவர்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொய்கையாழ்வார் எழுதிய முதல் திருவந்தாதி - முதல் பாடல்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக 
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய 
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

-பொய்கையாழ்வார்


சொல்லும் பொருளும்

வையம் - உலகம்

வெய்ய - வெப்பக்கதிர் வீசும்

இடர்ஆழி - துன்பக்கடல்

சுடர்ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

சொல்மாலை - பாமாலை

பாடலின் பொருள்

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

நூல் வெளி

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பூதத்தாழ்வார் வரலாறு TNPSC 

  • திருமால் அம்சத்தில் தலை போன்றவர்.

பிறந்த ஊர் 

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். 

பாடிய பாடல்கள் 

இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.

இவரது பாடல்கள் அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்திருக்கின்றன.

சிறப்புகள் - பெயர்க் காரணம்

பூதமெனும் சொல்லைக் கையாண்டதால் பூதத்தாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.


பூதத்தாழ்வார் எழுதிய இரண்டாம் திருவந்தாதி - முதல் பாடல்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்

-பூதத்தாழ்வார்


சொல்லும் பொருளும்

தகளி - அகல்விளக்கு

நாரணன் - திருமால்

ஞானம் - அறிவு

பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

நூல் வெளி

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.

அந்தாதி

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர் (அந்தம் - முடிவு, ஆதி முதல்)

இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.

பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.


பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக

பன்னிரு ஆழ்வார்கள் பெயர்கள்

  1. பொய்கையாழ்வார் 
  2. பூதத்தாழ்வார் 
  3. பேயாழ்வார் 
  4. திருமழிசை ஆழ்வார் 
  5. பெரியாழ்வார்
  6. ஆண்டாள் 
  7. நம்மாழ்வார்
  8. மதுரகவி ஆழ்வார்
  9. திருமங்கை ஆழ்வார்
  10. தொண்டரடிப் பொடி ஆழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. குலசேகராழ்வார்

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் - Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் 2. அறநூல்கள் பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise -மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இடர் ஆழி நீங்குகவே" -இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) துன்பம்

ஆ) மகிழ்ச்சி

இ) ஆர்வம்

ஈ) இன்பம்


2. 'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஞான + சுடர்

ஆ) ஞானச் + சுடர்

இ) ஞானம் + சுடர்

ஈ) ஞானி + சுடர்


3 . இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்பு உருகு

ஆ) இன்பும் உருகு

இ) இன்புருகு

ஈ) இன்பருகு


பொருத்துக- பொருத்தப்பட்டுள்ளது

1. அன்பு - தகளி(அகல் விளக்கு)

2. ஆர்வம் - நெய்

3. சிந்தை - இடுதிரி

4. ஞானம் - விளக்கு


குறுவினா

1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?

  • பொய்கையாழ்வார் பூமியை அகல்விளக்கு என்றும்
  • பூதத்தாழ்வார் அன்பை  அகல்விளக்கு என்றும்

 உருவகப்படுத்துகின்றனர்.

2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

பொய்கை ஆழ்வார், பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு அவரது துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் பாமாலை சூட்டுகிறார்.

சிறுவினா

பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார், நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன் என ஞானவிளக்கு ஏற்றும் முறையை பற்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.