'உவமைக் கவிஞர்' சுரதா சில குறிப்புகள்

இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணாக்கர். இலக்கியச் சுவை மிக்க கவிதைகளைப் பாடுவதில் வல்லவர். நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களையும் திரை இசைப்பாடல்களையும் பாடியுள்ளார். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என்றும் அழைக்கப்பட்ட சுரதா குறித்த சில குறிப்புகள்.

பாடத்தலைப்புகள்(toc)

சுரதா ஆசிரியர் குறிப்பு 

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். 

பிறந்த ஊர் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் உள்ள பழையனூரில் பிறந்தவர். 

சிறப்புகள்

சுரதா பல நூல்களைப் ப படைத்திருந்த போதிலும் அவரை மிகச் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்திக் காட்டுவது 'தேன்மழை' கவிதைத் தொகுதியாகும். 

பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்த சுரதாவுக்கும் சகுனம் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை. பல்லி சொல்வதையும் நம்புவதில்லை. அது வீழ்வதைப் பற்றியும் நம்புவதில்லை.

சுரதா பெயர்க்காரணம்

சுரதா என்பதன் விரிவாக்கம் சுப்பு ரத்தின தாசன்.

பாரதிதாசனின் இயற்பெயர் 'சுப்புரத்தினம்' எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். 

சிறப்பு பெயர்

  • உவமைக் கவிஞர் 
  • பாவேந்தரின் தாசன் 

உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். 

சுரதா நூல்கள்

  • சாவின் முத்தம் - முதல் நூல்
  •  உதட்டில் உதடு, 
  • பட்டத்தரசி, 
  • அமுதும் தேனும், 
  • தேன்மழை, 
  • துறைமுகம் 
  • வார்த்தை வாசல் 
  • சிக்கனம்

முதலானவை இவரது படைப்புகளாகும்.

சுரதா கவிதைகள் 

  • தேன்மழை
  • அவை அடக்கம் 
  • துறைமுகம்
  • சுவரும் சுண்ணாம்பும்
  • சுரதாவின் கவிதைகள்

முதலியவை இவருடைய கவிதைத் தொகுதிகள்.

விருதுகள்

  • இவர், தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிடும் கலைமாமணிப்பட்டம் பெற்றவர். 
  • தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்றுள்ளது.
  • வாழும் பாவலராகிய சுரதா, தமிழகத்தில் உலவும் பன்னருந்தமிழப் பாவலர்களுக்குத் தலைமைப் பாவலர். 
  • தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் இவரே.
'உவமைக் கவிஞர்' சுரதா சில குறிப்புகள்

காடு

காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் 'காட்டின் வளமே நாட்டின் வளம்' என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி அறிவோம்.

கார்த்திகை தீபமெனக் 

   காடெல்லாம் பூத்திருக்கும் 

பார்த்திட வேண்டுமடீ - கிளியே 

   பார்வை குளிருமடீ!


காடு பொருள்கொடுக்கும் 

   காய்கனி ஈன்றெடுக்கும் 

கூடிக் களித்திடவே - கிளியே 

   குளிர்ந்த நிழல்கொடுக்கும்


குரங்கு குடியிருக்கும் 

   கொம்பில் கனிபறிக்கும் 

மரங்கள் வெயில்மறைக்கும் - கிளியே 

   வழியில் தடையிருக்கும்


பச்சை மயில்நடிக்கும் 

   பன்றி கிழங்கெடுக்கும் 

நச்சர வங்கலங்கும் - கிளியே 

   நரியெலாம் ஊளையிடும்


அதிமது ரத்தழையை 

   யானைகள் தின்றபடி 

புதுநடை போடுமடீ - கிளியே 

   பூங்குயில் கூவுமடீ!


சிங்கம் புலிகரடி 

சிறுத்தை விலங்கினங்கள் 

எங்கும் திரியுமடீ - கிளியே 

இயற்கை விடுதியிலே!

- சுரதா (code-box)


 சொல்லும் பொருளும்

ஈன்று - தந்து

களித்திட - மகிழ்ந்திட

கொம்பு - கிளை

நச்சரவம் - விடமுள்ள பாம்பு

அதிமதுரம் - மிகுந்த சுவை

விடுதி - தங்கும் இடம்

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். 

காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். 

அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். 

மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். 

இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

நூல் வெளி

இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை 'கிளிக்கண்ணி' ஆகும்.

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

  • கா, 
  • கால், 
  • கான், 
  • கானகம், 
  • அடவி, 
  • அரண், 
  • ஆரணி, 
  • புரவு, 
  • பொற்றை, 
  • பொழில், 
  • தில்லம், 
  • அழுவம். 
  • இயவு, 
  • பழவம், 
  • முளரி, 
  • வல்லை, 
  • விடர், 
  • வியல், 
  • வனம், 
  • முதை, 
  • மிளை, 
  • இறும்பு, 
  • சுரம், 
  • பொச்சை, 
  • பொதி, 
  • முளி, 
  • அரில், 
  • அறல், 
  • பதுக்கை, 
  • கணையம்

பாரதியார்யின் கிளிக்கண்ணிப் பாடல் 


நெஞ்சில் உரமுமின்றி 
   நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே
   வாய்ச்சொல்லில் வீரரடி 
கூட்டத்தில் கூடிநின்று
   கூவிப் பிதற்றலன்றி 
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே 
    நாளில் மறப்பாரடீ.

- பாரதியார்(code-box)


நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்  கீழ் 2. மரபுக் கவிதை - சுரதா பகுதிக்காகப் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. வாழை, கன்றை ......

அ) ஈன்றது

ஆ) வழங்கியது

இ) கொடுத்தது

ஈ) தந்தது

2. 'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) காடு + டெல்லாம்

ஆ) காடு + எல்லாம்

இ) கா + டெல்லாம்

ஈ) கான் + எல்லாம்

3. 'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கிழங்குஎடுக்கும்

ஆ) கிழங்கெடுக்கும்

இ) கிழங்குடுக்கும்

ஈ) கிழங்கொடுக்கும்

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை - முதல் எழுத்து ஒன்றி வருவது

  • கார்த்திகை - காடெல்லாம் பூத்திருக்கும் 
  • பார்த்திட  - பார்வை
  • காடு  - காய்கனி

எதுகை - இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது

  • சிங்கம் - எங்கும்
  • கார்த்திகை - பார்வை
  • குரங்கு - மரங்கள்

இயைபு - கடைசி எழுத்து ஒன்றி வருவது

  • வேண்டுமடீ - குளிருமடீ
  • பொருள்கொடுக்கும் - ஈன்றெடுக்கும்
  • மயில்நடிக்கும் - கிழங்கெடுக்கும்

குறுவினா

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும் என்று காட்டுப்பூக்களுக்கு உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்.

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன

  • காடு பல வகையான பொருள்களைத் தரும்.
  • காய்கனிகளையும் தரும். 
  • எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். 

சிறுவினா

'காடு' பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

'காடு' பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் சுரதா கூறுவன:

காட்டில் வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும். 

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். 

பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். 

நரிக் கூட்டம் ஊளையிடும். 

மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். 

பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். 

இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

TNPSC previous year question

1. இவர், தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிடும் கலைமாமணிப்பட்டம் பெற்றவர். 

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) முடியரசன்

D) சுரதா

2. சுரதாவின் எந்த நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்றுள்ளது.

பட்டத்தரசி

அமுதும் தேனும்

தேன்மழை

துறைமுகம் 

3. தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் இவரே.

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) முடியரசன்

D) சுரதா

4. பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணாக்கர்.  

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) முடியரசன்

D) சுரதா

5. உவமைக் கவிஞர் என்றும் அழைக்கபட்டவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) முடியரசன்

D) சுரதா

6. சுரதா குறித்த தவறான இணை 

இயற்பெயர் - இராசகோபாலன். 

பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் உள்ள பழையனூரில் பிறந்தவர். 

சிறப்பு பெயர் - உவமைக் கவிஞர்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்ற நூல் - துறைமுகம் (சரி- தேன்மழை)

7. சுரதா நூல்களில் பொருந்தாதது 

அமுதும் தேனும்

தேன்மழை

துறைமுகம் 

பொங்கல் பரிசு - வாணிதாசன் நூல்

8. சுரதா எழுதிய 'தேன்மழை' என்பது

உரைநடை 

கவிதை

இலக்கியம்

சிறுகதை

9. கவிஞர் இராசகோபால் தாம் யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் இயற்பெயரை 'சுரதா' என மாற்றிக் கொண்டார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) முடியரசன்

D) கண்ணதாசன்

10. தமிழக அரசின் இயலிசை நாடகமன்றம் வழங்கிடும் ........ பட்டத்தைப் பெற்றவர் சுரதா

A) கலைமாமணி

B) கலைச்சக்கரவர்த்தி

C) ராசராசன் விருது

D) தமிழ்ப்பாவலர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad