பொங்கல் வழிபாடு - ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள். 

பாடத்தலைப்புகள்(toc)

பொங்கல் வழிபாடு

நீ தந்த கனி இது; நீ தந்த கரும்பிது 

நீ தந்த நெற்கதிர் இது; 

நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது; 

நீ தந்த ஒளியும் இஃதே!


நீ தந்த சீரும் நீ தந்த திருவும் 

நினக்கே நிவேதனம் கதிரவா! 

கனகப் புரவிமேல் கடுகியே வந்திடு 

கதிரவா எங்கள் கோவே!


நீ தந்த செல்வத்தை நிவேதனம் 

செய்பிழை யாம் அறிந்தும் 

வழிவேறு வணங்க யாம் 

அறியாது கூவுகின்றோம். 

கதிரவா கடுகி வருவாய்!


நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,

ஒளியுண்டோ, நிலவுமுண்டோ, 

நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ? 

கதிரவா கனிந்து வருவாய்!


கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் 

நின்னடி படைத்து விட்டோம் 

கதிரவா! ஏற்று மகிழ்வாய் 

உயர்ந்தவா, உயிரின் முதலே! 


- ந. பிச்சமூர்த்தி(code-box)


பொருள்: 

உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் முதல்வனாக விளங்கும் ஞாயிறே! இவ்வுலகில் காணும் கனிவகையும் கரும்பும் நெற்கதிர்களும் உன்னால் விளைந்தவை. இவை அனைத்தும் உன்னில் தோன்றிய நீராலும் கதிரொளியாலும் உருவான சிறப்பினைப் பெற்றவை. 

கதிரவனே! நீ தந்த அழகிய செல்வப்பொருள்கள் அனைத்தையும் உனக்கே படையலாக்கி வணங்குகிறோம். கதிரவா! எங்கள் தலைவனே! உனக்கு எதனைப் படையலாக வைத்து வணங்குவது என்பதனை அறியாது, எமக்கு நீ வழங்கிய பொருள்களையே படையலாக்கித் தவற்றைச் செய்துவிட்டோம். ஆயினும், எம் பிழை பொறுத்துப் பொன்னொளி வீசும் குதிரைகள் மீதேறி விரைந்து வருக.

நீயில்லாமல் மண்ணும் விண்ணும் ஒளியும் நிலவும் நீருமில்லை. எல்லாமே உன்னிடமிருந்து பிறந்தவை. எனவே, உன்னைப் புகழ்ந்து போற்ற எம்மிடம் எப்பொருளும் இல்லை. 

கரும்புபோலும் இனிய மனத்துடனும் இனிதான உயிர்ப்புடனும் உனது திருவடிகளைப் பணிந்து படைத்துவிட்டோம். அனைத்திலும் உயர்ந்த நீ, இவற்றை ஏற்று மகிழ்ந்து அருள் புரிவாயாக!

சொற்பொருள் : 

திரு - செல்வம்; 

நிவேதனம் - படையலமுது; 

கனகம் - பொன்; 

புரவி - குதிரை; 

கோ - அரசன்; 

கடுகி - விரைந்து,

ந. பிச்சமூர்த்தி ஆசிரியர் குறிப்பு TNPSC 

இயற்பெயர் : ந. வேங்கட மகாலிங்கம்

புனைபெயர் : ந. பிச்சமூர்த்தி

ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்

தொழில் : 1924 1938வரை வழக்குரைஞர். 1938 -1954வரை கோவில் நிருவாக அலுவலர்.

எழுத்துப்பணி : கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.

காலம் : 15.08.1900- 04.12.1976



பொங்கல் வழிபாடு நூற்குறிப்பு : 

ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள். இவரது ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - பொங்கல் வழிபாடு மாதிரி வினாக்கள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ. கனகம் என்பதன் பொருள்

1. செல்வம் 

2. பொன்

3. மண் 

ஆ. புரவி என்பதன் பொருள்

1. பசு

 2. குதிரை 

3. யானை 

இ. உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் முதல்வன்

1. சந்திரன்

2.  கதிரவன்

3. மழை 

ந.பிச்சமூர்த்தி TNPSC previous year questions 

1. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்

ந. பிச்சமூர்த்தி

2. "கதிரவா கடுகி வருவாய்!" என்பதில் கடுகி என்பதன் பொருள்

விரைந்து

3. பொருத்துக - பொறுத்தப்பட்டுள்ளது

கனகம் - பொன்

புரவி - குதிரை

கோ - அரசன்

கடுகி - விரைந்து

4. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் 

ந.வேங்கட மகாலிங்கம்

5. ந. பிச்சமூர்த்தியின் பிறந்த ஊர் 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்

6. பொங்கல் வழிபாடு என்னும் கவிதையை எழுதியவர்

ந. பிச்சமூர்த்தி

பிரித்து எழுதுக.

1. நெற்கதிர் = நெல்+ கதிர்

2. நிலவுமுண்டோ = நிலவும் + உண்டோ 

3. மண்ணுண்டோ = மண்ணும்  + உண்டோ

4. நின்னடி = நின் + அடி 

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

கனி - மாம்மரம் தரும் கனி சுவையானது.

கதிர் - சூரியனின் கதிர் இல்லாமல் ஒளி இல்லை.

கதிரவன் - கதிரவன் காலையில் உதிக்கிறது.

கரும்பு - கரும்பு இனிப்பு சுவையுடையது.

உயிர் - உயிர் இல்லாமல் உடம்பு இல்லை.

குறுவினாக்கள்

1. கதிரவனால் விளைந்த பொருள்கள் எவை?

கதிரவனால் விளைந்த பொருள்கள்

இவ்வுலகில் காணும் கனிவகையும் கரும்பும் நெற்கதிர்களும் கதிரவனால் விளைந்தவை.

2. கதிரவனிடமிருந்து பிறந்தவை எவை?

மண்ணும் விண்ணும் ஒளியும் நிலவும் நீரும் எல்லாமே கதிரவனிடமிருந்து பிறந்தவை.

உரிய இணையைத் தேர்ந்தெடுக்க.(தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது)

அ. பொங்கல் வழிபாடு - ந. பிச்சமூர்த்தி

ஆ. கடுகி -  விரைந்து 

இ. ந. பிச்சமூர்த்தி - ந.வேங்கட மகாலிங்கம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.