திரிகடுகம்- நல்லாதனார்

திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும். 

பாடத்தலைப்புகள்(toc)

திரிகடுகம் நூல் குறிப்பு : 

திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 

  • இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது. 

திரிகடுகம் பொருள்

சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்.

திரி என்றால் மூன்று என்று பொருள்.

இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். 

இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.

திரிகடுகம் பயன்கள் 

திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும். 

திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார் குறிப்பு : 

திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்

இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர். 

இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


திரிகடுகம் பாடல்கள் மற்றும் விளக்கம்

தூயவர் செயல்கள்

உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்

சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்

தூஉயம் என்பார் தொழில் (code-box)


பொருள் : 

நீராடிய பின் உண்ணுதல், பெரும்பயன் கிடைத்தாலும் பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல், உடல்வாடித் தளர்ந்தபோதும் அறிவு ஒழுக்கங்களில் குன்றாது இருத்தல் ஆகிய இம்மூன்றும் மனம், மொழி, மெய்களால் தூய்மை உடையவரின் செய்கைகளாம்.

சொற்பொருள்:

உண்பொழுது - உண்ணும்பொழுது 

பெறினும் - பெற்றாலும்;

பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில்

இருந்து மாறுதல்); 

தோல்வற்றி - தோல்சுருங்கி;

சாயினும் - அழியினும்;

சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்;

குன்றாமை - குறையாது இருத்தல்; 

தூஉயம் - தூய்மை உடையோர்


அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை

இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க் குள.(code-box)


பொருள் : 

வறியவர்க்குப் பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல், எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும் அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு.

சொற்பொருள் : 

ஈயும் - அளிக்கும்; 

நில்லாமை - நிலையாமை; 

நெறி - வழி; 

தூய்மை -தூய தன்மை;

மாந்தர் - மக்கள்

புதரில் விதைத்த விதை

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்

தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து (code-box)


பொருள்: 

அறம் தவறாது செயல்படும் ஆற்றல் இல்லாதவன் பெற்ற தலைமை, ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம், மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் பெற்ற அழகு ஆகிய இம்மூன்றும் புதரில் விதைத்த விதைபோன்று பயனற்றவையே.

சொற்பொருள்: 

நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்; 

தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்;

வனப்பு - அழகு; 

தூறு - புதர்; 

வித்து - விதை.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2. அறநூல்கள் திரிகடுகம் பகுதிக்காகப் பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - திரிகடுகம் மாதிரி வினாக்கள்

உரிய விடையைத் தேர்வு செய்க.

1. பால்பற்றிச் சொல்லா விடுதலும் - இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்.

1.பகுப்புப்பற்றி

2.இனம்பற்றி 

3. ஒருபக்கச் சார்புபற்றி


2. 'நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்' இவ்வடியில் வழி என்னும் பொருள்தரும் சொல்.

1. நில்லாமை

2. நெறி

3. உள்


இ) வனப்பு என்னும் சொல்லின் பொருள்

1. அழகு

2. அறிவு

3. வளமை


ஈ. நல்லாதனார் இயற்றிய நூல்

ஆ.புறநானூறு

அ. திரிகடுகம்

இ. திருவாரூர் நாள்மணிமாலை


உ. நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்

அ. மதுரை

ஆ. கோவை

இ. திருநெல்வேலி


குறுவினாக்கள்

1. திரிகடுகம் - பெயர்க்காரணம் கூறுக.

2. நல்லாதனார் - ஆசிரியர் குறிப்புத் தருக.

சிறுவினாக்கள்

1. தூய்மை உடையவரின் செயல்கள் யாவை?

2. நன்றறியும் மாந்தர் செயல்கள் யாவை ?

3. புதரில் விதைத்த விதைகளாவன எவை ?

TNPSC previous year question 

1. திரிகடுகம் பாடல்களின் எண்ணிக்கை?

100 வெண்பா

2. திரிகடுகம் பா வகை?

வெண்பா

3. தூறு என்பதன் பொருள்

புதர்

4. செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடுவது யாரை?

திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார் 

5. திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார் பிறந்த ஊர் 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து

6. வனப்பு என்பதன் பொருள்

அழகு


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad