மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர் அவர்தாம், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர். இத்தகைய மாணவரை உருவாக்கிய பெருமை அவர்தம் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரையே சாரும்.

ஆசிரியரால் மாணவன் சிறப்படைவதுபோலவே ஓராசிரியரும் நல்ல மாணவர்களால் பெருமையடைகிறார் என்பதற்கு இவ்விருவருமே சான்றாவர்.

பாடத்தலைப்புகள்(toc)

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் வரலாறு

மீனாட்சிசுந்தரனார் நயமும் சுவையும் மிக்க பாடல்களை இயற்றிப் புதுப்புது நூல்களைப் படைத்தளித்தார். தமிழ்ப்பாடம் சொல்லிச் சொல்லி மாணவர்களைத் தமிழின்பால் ஈர்த்தார். அதனால், மாணவர்கள் தமிழின்மீது தீராக்காதல்கொண்டு தமிழை ஈடுபாட்டுடன் கற்றார்கள்.

அம்மாணவர்கள் தேமதுரத் தமிழை உலகெலாம் பரவச் செய்தார்கள்.

இளமையும் கல்வியும்

பிறப்பு

மீனாட்சிசுந்தரனார் 1815ஆம் ஆண்டு ஏப்ரல்திங்கள் ஆறாம் நாளன்று 

பிறந்த ஊர் 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணெய்க்கிராமத்தில் பிறந்தார். 

பெற்றோர்

அவர்தம் பெற்றோர் சிதம்பரம் -அள்ளத்தாச்சியார் ஆவர். 

கல்வி

மீனாட்சிசுந்தானார் இளமையில் தமது தந்தையாரிடம் தமிழ் கற்றார்; இலக்கிய இலக்கண நூல்களில் நன்கு புலமை பெற்றார். சிறுவயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றார். 


கல்வியே வாழ்க்கை

திருமணம்

மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் திரிசிரபுரத்தில் (திருச்சிராப்பள்ளி) வாழ்ந்தார். அதனால், அவரைத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் என்றே அழைத்தனர். அவரிடம், 'கற்கவேண்டும்' என்ற வேட்கை தணியாததாக இருந்தது. அதனால், எப்பொழுதும் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பார். அவர் தமிழ் இலக்கியத்திலும் சைவ சமய நூல்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

தமிழ் கற்பித்தல்

மீனாட்சிசுந்தரனார் தமிழ் கற்கவேண்டுமென்று விரும்பியவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்து வந்தார்; சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்து வந்தார். மீனாட்சிசுந்தரனார் பெருஞ்செல்வராக இல்லை என்றாலும், மாணவர் சிலருக்கு உண்டியும் உறையுளும் அளித்துக் கற்பித்திருக்கிறார். அதன் காரணமாக அவருடைய புகழ் எங்கும் பரவியது. 

மாணவர்கள்

குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர், அவர்களும் குறிப்பிடத்தக்க மாணவர்கள்.

ஆதின வித்துவான் 

திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக இருக்கவேண்டுமென்று ஆதினத் தலைவர், மீனாட்சிசுந்தரனாருக்கு அழைப்பு விடுத்தார். மீனாட்சிசுந்தரனார் அப்பதவியில் சிலகாலம் இருந்து அரும்பணி ஆற்றினார். இவர் திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில்தான் உவே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார். அவரைப்போன்ற நன்மாணாக்கர் பலரைப் பெற்றதால் மீனாட்சிசுந்தரனார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

மீனாட்சிசுந்தரனார் செய்த தமிழ்த்தொண்டுகள் கணக்கிலடங்கா. இவர், தம்வாழ்வின் பெரும்பகுதியை, மாணவர்களுக்குக் கற்பிப்பதிலேயே செலவழித்தார். கற்பித்ததால் அவருடைய அறிவும் வளர்ந்தது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லும்பொழுது அவர் ஏடுகளைப் பார்க்கவே மாட்டார். அவற்றிலுள்ள அனைத்தும் அவருக்கு மனப்பாடமாகவே இருந்தன. அவர் பேச்சுத் திறமையில் சிறந்திருந்தார். பிறருக்கு விளக்கும்போது, மிகத் தெளிவாக நல்ல தமிழில் பேசி விளக்கும் திறமை பெற்றிருந்தார். ஆகையால், அவருடைய மாணாக்கர்கள், அவரிடம் கற்பதனை மிகவும் விரும்பினார்கள்.

தமிழ்த்தொண்டு

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். 

தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றித் தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார். அத்தல புராணங்களில் கோவில் வரலாறு, சிறப்புகள், இறைவனின் பெருமைகள் முதலியன இடம்பெற்றுள்ளன.

பண்பு நலன்கள்

மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர். அவர், பலரால் பாராட்டப்பெற்றுள்ளார்; ஆயினும், தம்மைத்தாமே புகழ்ந்து பேசும் தற்பெருமை அவரிடம் இல்லை. மிகுந்த நகைச்சுவை உணர்வுமிக்க இவர், இறுதிவரை நிறைகுடமாகவே வாழ்ந்தார். 

நகைச்சுவை உணர்வு 

ஒருமுறை அவருடைய நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத்தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தார். அதில், சாட்சிக் கையொப்பமிட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்திலுள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை நீற்றுக்காரத் தெரு எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபொழுது, மீனாட்சிசுந்தரனார் இரண்டும் வேண்டாம். மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். (வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)

ஒருநாள் அவர், காய்ச்சலுற்றுத் துன்புற்றார். அப்பொழுது மாணவர் ஒருவரை நூல் முழுவதனையும் தொடர்ந்து படிக்குமாறு கேட்டார். உடல்நிலை சரியில்லாதபோது சற்று ஒவ்வெடுத்தால் நல்லதென்று மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம் என்றார். இதன்மூலம் அவர் தமிழ்மீது கொண்ட பற்றை அறியலாம். 

மறைவு 

இவர் 01.02. 1876 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

நினைவு கூர்க 

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் போன்றோருடைய புலமைத் திறத்தை நாமறிந்து மகிழவேண்டுமெனில், அவர்தம் நூல்களைப் படித்தல் வேண்டும். அவர்களுடைய நூல்களைப் படிப்பதோடு, அந்நூல்கள் கூறும் நற்கருத்துகளைப் பின்பற்றுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறாகும்.

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உவே. சாமிநாதரின் ஆசிரியர் பெயர் மீனாட்சிசுந்தரனார்

2. நோய்க்கு மருந்து இலக்கியம் என்பார் மீனாட்சிசுந்தரனார். 

3. மீனாட்சிசுந்தரனார் தல புராணங்கள் பாடுவதில் வல்லவர்.

குறுவினாக்கள்

1. மீனாட்சிசுந்தரனார் இளமையில் எவ்வாறு தமிழ் கற்றார்?

மீனாட்சிசுந்தானார் இளமையில் தமது தந்தையாரிடம் தமிழ் கற்றார்; இலக்கிய இலக்கண நூல்களில் நன்கு புலமை பெற்றார். சிறுவயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றல் கைவரப் பெற்றார். 

2. மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ் கற்றோர் யாவர்?

மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ் கற்றோர்

குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர்.

3. மீனாட்சிசுந்தரனாரின் நகைச்சுவையை விளக்குக.

கும்பகோணத்திலுள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பதனை நீற்றுக்காரத் தெரு எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று ஒருவர் அவரிடம் கேட்டபொழுது, மீனாட்சிசுந்தரனார் இரண்டும் வேண்டாம். மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். (வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)

சிறுவினா

மீனாட்சிசுந்தரனாருக்குத் தமிழ் மீதுள்ள பற்றினை விவரிக்க.

மீனாட்சிசுந்தரனார் தமிழ் கற்கவேண்டுமென்று விரும்பியவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்து வந்தார்; சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்து வந்தார். மீனாட்சிசுந்தரனார் பெருஞ்செல்வராக இல்லை என்றாலும், மாணவர் சிலருக்கு உண்டியும் உறையுளும் அளித்துக் கற்பித்திருக்கிறார். இதிலிருந்து மீனாட்சிசுந்தரனாருக்குத் தமிழ் மீதுள்ள பற்றினை அறியலாம்.

நெடுவினாக்கள்

1.மீனாட்சிசுந்தரனாரின் பண்புநலன்களை விளக்குக.

மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர். அவர், பலரால் பாராட்டப்பெற்றுள்ளார்; ஆயினும், தம்மைத்தாமே புகழ்ந்து பேசும் தற்பெருமை அவரிடம் இல்லை. மிகுந்த நகைச்சுவை உணர்வுமிக்க இவர், இறுதிவரை நிறைகுடமாகவே வாழ்ந்தார். 

2. மீனாட்சிசுந்தரனார் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கூறுக.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். 

தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றித் தலபுராணங்கள் பல இயற்றியுள்ளார். அத்தல புராணங்களில் கோவில் வரலாறு, சிறப்புகள், இறைவனின் பெருமைகள் முதலியன இடம்பெற்றுள்ளன.

TNPSC previous year question 

1. தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றித் தலபுராணங்கள் பல இயற்றியவர்?

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.

2. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவர்?

 உ.வே.சாமிநாதர்.

 3. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.

4. நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

5. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை 

எண்பதுக்கும் மேற்பட்ட 

6. திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக இருக்கவேண்டுமென்று ஆதினத் தலைவர், யாருக்கு அழைப்பு விடுத்தார்?

மீனாட்சிசுந்தரனார்

7. தல புராணங்கள் பாடுவதில் வல்லவர்

மீனாட்சிசுந்தரனார்

8. உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணெய்க்கிராமம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad