கோவூர்கிழார்

சே.சுந்தரராசன் எழுதிய குறள்நெறி இலக்கியக் கதைகளில் கோவூர்கிழார் பற்றிய சில கதைகள்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். - குறள், 648(code-box)

என்ற குறளுக்கு பொருத்தமான சில கதைகள் கீழே.

பாடத்தலைப்புகள்(toc)

கோவூர்கிழார் குறிப்பு

கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில், வேளாளர் மரபில் பிறந்தார்;

இளமைப்பருவத்திலேயே கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார். இவர் சான்றோர் பலரை அணுகி இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்; கவிதைகள் எழுதுவதில் ஆற்றல் பெற்றார்; நற்பண்புகளின் இருப்பிடமாகத் திகழ்ந்தார்; 

சிறப்புகள்

கோவூர்கிழார் முறையாக இனிதாகச் சொல்லும் சொல்வன்மையால், சொல்லுவதனை நுட்பமாகக் கேட்டு அறியும் மன்னர்கள் செவிமடுத்து ஏற்றுப் பயன்பெற்றார்கள். 

  • நெடுங்கிள்ளி, தனது கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்தான்; 
  • யானையின் காலில் அகப்பட்டு இறக்க இருந்த திருமுடிக்காரியின் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டார்கள்; 
  • ஒற்றரெனச் சிறையில் அடைபட்ட இளந்தத்தனார் விடுதலை பெற்று மகிழ்ந்தார். 

கோவூர்கிழார்போல் சொல்லும் திறனும் அதனைக் கேட்டு ஏற்றுச் செயல்படும் பண்பும் மன்னர்க்கு இருந்ததால் மக்கள் நலமுற்றனர்.

பாடல்கள் 

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

நலங்கிள்ளி

நலங்கிள்ளி என்ற மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இம்மன்னன், கோவூர்கிழாரின் புலமையைப் பலர் வாயிலாகக் கேட்டு அறிந்தான். தம் அவைக்கு அவரை அழைத்து, அரசு அவைக்களத் தலைவர் ஆக்கினான். அவரிடம் நட்புக்கொண்டு பல சிறப்புகளைச் செய்தான். மகிழ்ந்த புலவர், நலங்கிள்ளியின் புகழ் விளங்கப் பல பாடல்களை இயற்றினார். இவர் அஞ்சா நெஞ்சர்; யார் தவறு செய்தாலும் அத்தவற்றினைச் சுட்டிக்காட்டி, முறையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இனிமையாகச் சொல்லித் திருத்துவதில் வல்லவர்; அரசர்களானாலும், பிறரானாலும் கோவூர்கிழார் சொல்லுவதனை ஏற்றுச் செயல்பட்டுள்ளனர். 

போரைத் தவிர்த்த புலவர்

சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது. ஒருமுறை இருவருக்கும் போர் மூண்டது. உறையூருக்கு அருகில் ஆவூர்க்கோட்டை இருந்தது. நலங்கிள்ளியின் படையினர் அக்கோட்டையை முற்றுகையிட்டனர்; நாள் பல கழிந்தன. கோட்டையினுள் இருந்த மக்கள் துன்புற்றனர்.

கோவூர்கிழார் கோட்டையினுள் சென்றார்; நெடுங்கிள்ளியைக் கண்டார்.

"நெடுங்கிள்ளியே! கோட்டைக்குள் யானைகள் உணவின்மையால் பிளிறுகின்றன;

குழந்தைகள் பாலின்றிக் கதறுகின்றன; மக்கள் குடிக்க நீரின்றித் தவிக்கின்றனர். நீ அறத்தினை உடையவனானால், வெற்றிபெற்ற நலங்கிள்ளியிடம் கோட்டையை ஒப்படைத்துவிட்டு வெளியேறு; அல்லது நீ வீரனானால் எதிர்த்துப் போரிடு. இரண்டில் எதனையும் செய்யாமல் கோட்டை மதிலுக்குள் ஒடுங்கியிருப்பது நாணும் தன்மையுடையது" என்றார். கோவூர்கிழாரின் அறிவுரையைக் கேட்ட நெடுங்கிள்ளி, ஆவூர்க்கோட்டையைத் திறந்துவிட்டு உறையூர்க் கோட்டைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டான். செய்தியறிந்த நலங்கிள்ளி வெகுண்டெழுந்தான்; உறையூர்க்கோட்டையை முற்றுகையிட்டான். கோவூர்கிழார் அவ்விருவரையும் அமைதிப்படுத்த எண்ணினார்;உறையூர்க்கோட்டைக்குள் புகுந்து நெடுங்கிள்ளியை மீண்டும் கண்டார்.

''நெடுங்கிள்ளியே! உன்னோடு போர் புரிய, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டிருப்பவன் பனம்பூ மாலையணிந்த சேரனும் அல்லன்; வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும் அல்லன்; சோழருக்குரிய ஆத்திமாலையணிந்தவனே. உம் இருவருள் எவர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே. இருவரும் வெற்றி பெறுவது உலக இயற்கையன்று. ஒருகுடியைச் சேர்ந்த நீவிர் இருவரும் பகைமை கொள்வது பெருமை தரும் செயல் ஆகாது. உங்கள் பகைவர்களுக்கு நும் செயல் மகிழ்ச்சி தரும். ஆதலின் போரை ஒழிமின் என்றார். கோவூர்கிழாரின் அறிவுரையைக் கேட்ட நெடுங்கிள்ளி உறையூர்க்கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினான்.



மலையமான் பிள்ளைகளைக் காத்தல்

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புகார் நகரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் சிறந்த கவிஞன் ஆவான். இவன் புலவர் பலரால் பாராட்டப்பட்ட கொடை வள்ளல். புலவர்களுக்குக் கொடையளித்துப் புகழ் பெற்றவன். கோவூர்கிழார் கிள்ளிவளவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவரான மலையமான் திருமுடிக்காரிக்கும். கிள்ளிவளவனுக்கும் பெரும்பகை இருந்தது. மலையமான் சிறந்த வீரன். அவனுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். மலையமானை அடக்கமுடியாத சோழன் கிள்ளிவளவன், அவன் பிள்ளைகள் இருவரையும் கவர்ந்து சிறை வைத்தான். அவர்களைத் தன் பட்டத்து யானையின் காலால் இடறிக் கொல்ல முடிவு செய்தான். பகைவன் மரபை அழிக்க இதுவே வழியெனக் கருதினான்; அதற்கான நாளையும் குறித்தான். சிறுவர் இருவரும் யானையைக் கண்டு மருண்டனர்; அஞ்சி நடுங்கினர்; வியந்து நோக்கினர். கோவூர்கிழார், அவ்விடத்திற்கு விரைந்தார்; யானையின் அருகில் சென்றார். இருபிள்ளைகளையும் தம் இருகரத்தால் தழுவி அணைத்துக் கொண்டார். அவர் கிள்ளிவளவனின் முகத்தைக் கண்டார்; சினத்தால் அவன் முகம் கடுகடுத்துக் காணப்பட்டது; கண்கள் சிவந்திருந்தன; கோவூர்கிழார் கிள்ளிவளவன் செயலுக்கு வருந்தினார்.

"கிள்ளியே! புறாவுக்கு வந்த துன்பத்தையும் பசுவுக்கு உற்ற துயரத்தையும் நீக்கிய சோழர் மரபில் பிறந்தவன் நீ! இப்பிள்ளைகளோ வறுமையுற்றோருக்கு வாரி வழங்கும் வள்ளல் மரபில் பிறந்தவர்கள். இப்பொழுது இவர்கள், தம் அழுகையையும் மறந்து களிற்றைக் கண்டு வியந்து நிற்கின்றார்கள். இவர்கள், இதுவரை கண்டறியாத துன்பத்தை அடைந்துள்ளார்கள். மன்னா, நான் சொன்னதனைச் செவிமடுத்துக் கேட்டாய். இனி, நீ விரும்பியதனைச் செய்வாயாக" என்று கிள்ளிவளவனின் நெஞ்சில் பதியுமாறு கூறினார்.

முன்னோர் பெருமையை நினைவூட்டினார் கோவூரார். அதனால், கிள்ளி வளவன் தான் செய்யவிருந்த பெரும்பிழையைத் தவிர்த்தான். சிறுவர் இருவரையும் யானையின் முன்னிருந்து விடுவித்த கோவூர்கிழார், பிள்ளைகளை மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்புவித்து மகிழ்ந்தார்.

இளந்தத்தனாரைச் சிறைமீட்ட செம்மல்

சோழன் நெடுங்கிள்ளி உறையூரில் இருந்தான். சோழன் நலங்கிள்ளியைப் பாடிப் பரிசு பெற்ற புலவரான இளந்தத்தனார் நெடுங்கிள்ளியை நாடிச் சென்றார். அவனைப் பாடிப் பரிசுபெற நினைத்தார். நெடுங்கிள்ளியைப் புகழ்ந்து பல பாடல்கள் பாடினார். புலவர், தமக்குப் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தார். நெடுங்கிள்ளியோ மாறாக நினைத்தான். தன் பகைவன் நலங்கிள்ளியிடமிருந்து வந்த ஒற்றன் எனப் புலவரை ஐயங்கொண்டான். அரசனின் ஐயத்தைப் போக்க, அப்போது அவன் அருகில் ஒருவருமிலர். ஆகவே, புலவரைச் சிறையிலடைத்துப் பின்பு கொல்லத் துணிவு கொண்டான். கோவூர்கிழார் செய்தியறிந்தார்; விரைந்து சென்றார்; நெடுங்கிள்ளியின் முன் நின்றார். அவர், உண்மையை அஞ்சாமல் உரைத்தார்.

"நெடுங்கிள்ளியே! பழுமரம் இருக்கும் இடத்திற்குப் பறவைகள் நாடிச் செல்வது போலப் புலவர் வள்ளல்களை நாடிச் செல்வர்; நெடுந்தொலைவு நடந்தே செல்வர். தம் ஆற்றலுக்கேற்பப் புகழ்ந்து பாடுவர்; பரிசு பெற்று மகிழ்வர்; தாம் பெற்ற பரிசினை உற்றார்க்கும் உறவினர்க்கும் பிறருக்கும் பகிர்ந்தளித்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமக்குப் பரிசில் அளித்தாரைச் சிறப்பிப்பது புலவர் தம் வழக்கம். இத்தகைய புலவர் வாழ்க்கை, பிறருக்குத் தீங்கு செய்ய அறியாது” என்னும் கருத்தமைந்த பாடலைப் பாடினார்.

அஃது, அவன் தவற்றை உணரச் செய்தது. நெடுங்கிள்ளி திருந்தினான். கோவூர்கிழார் இளந்தத்தனாரைச் சிறை மீட்ட செம்மலானார். 

பண்டைக்காலத்தில் அரசன் போர் செய்யக் கருதியவுடன், அவனது போர்ப்பறை முழங்கும். அப்பறையின் ஓசை நாற்றிசையையும் அதிரச் செய்யும். அவ்வோசையைக் கேட்ட போர்வீரர்கள் போர்க்கோலம் பூண்டு மிக்க ஆர்வத்தோடு போருக்குப் புறப்படுவார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நாற்படைகளும் திரண்டெழும். அரசன் படைத்தலைவரோடு சென்று அவற்றைப் பார்த்து மகிழ்வான்.

போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மனையில் வீரர்களுக்குப் பெருவிருந்து அளிப்பான். அதனைப் 'பெருஞ்சோறு அளித்தல்' என்பர். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத்தலைவர்களும் தங்குதற்குரிய பாடி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் இளைப்பாறுவர். அப்பொழுது ஆடலும் பாடலும் நடைபெறும்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - கோவூர்கிழார் மாதிரி வினாக்கள்

கோடிட்ட இடத்தில் உரிய விடையை எடுத்து எழுதுக.


1. சோழருக்குரிய மாலை

அ) பனம்பூ

ஆ) வேப்பம்பூ

இ) ஆத்திப்பூ

2. பனம்பூ மாலை யாருடையது?

சேரன்

3. வேப்பம்பூ மாலையணிந்தவர்கள்

பாண்டியர்கள்

4. நலங்கிள்ளியின் அவைக்களத் தலைவர் 

கோவூர்கிழார்

TNPSC previous year questions 

1. நலங்கிள்ளி என்ற மன்னன் ........ தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான்.

உறையூர் 

2. குறள்நெறி இலக்கியக் கதைகளை எழுதியவர்

 சே.சுந்தரராசன்

3. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கோவூர்கிழார்

4. நெடுங்கிள்ளி, தனது கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைக்க காரணமான புலவர்

கோவூர்கிழார்

5. யானையின் காலில் அகப்பட்டு இறக்க இருந்த திருமுடிக்காரியின் பிள்ளைகளை காப்பாற்றிய புலவர்

கோவூர்கிழார்

6. ஒற்றரெனச் சிறையில் அடைபட்ட இளந்தத்தனார் விடுதலை பெற செய்த புலவர்

கோவூர்கிழார்

7. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மனையில் வீரர்களுக்கு கொடுக்கும் விருந்து 

பெருஞ்சோறு அளித்தல்

8. புறாவுக்கு வந்த துன்பத்தையும் பசுவுக்கு உற்ற துயரத்தையும் நீக்கிய மரபு

சோழர் மரபு

9. போரை ஒழிமின் என்றவர்

கோவூர்கிழார்

சிறு வினாக்கள் 

1. நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் எவ்வாறு அமைதிப்படுத்தினார்?

2. மலையமான் பிள்ளைகளைக் கோவூர்கிழார் எவ்வாறு காப்பாற்றினார்?

3. இளந்தத்தனாரைக் கோவூர்கிழார் எவ்வாறு சிறைமீட்டார்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad