‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர் திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார். அவர்தான் ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம். 

பாடத்தலைப்புகள்(toc)

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பற்றிய குறிப்பு

பிறந்த ஊர் - பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர். 

வாழ்ந்த காலம் - 13.04.1930முதல் 08.10. 1959 வரை.

சிறப்பு பெயர்கள்

மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.


சிறப்புகள் 

  • எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர் 
  • திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். 
  • உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் 

  • செய்யும் தொழிலே தெய்வம்
  • துன்பம் வெல்லும் கல்வி

செய்யும் தொழிலே தெய்வம் பாடல்

அவர் எழுதிய செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடல் இங்கே நாம் படிக்கப் போகிறோம்.


செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்

திறமைதான் நமது செல்வம் 

கையும் காலுந்தான் உதவி - கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி                    (செய்யும்...)


பயிரை வளர்த்தால் பலனாகும் - அது

உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த

வேர்வைகள் எல்லாம் விதையாகும்

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்.         (செய்யும்...)


காயும் ஒருநாள் கனியாகும் - நம்

கனவும் ஒருநாள் நனவாகும் 

காயும் கனியும் விலையாகும் - நம்

கனவும் நினைவும் நிலையாகும் - உடல்

வாடினாலும் பசி மீறினாலும் - வழி

மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.        (செய்யும்.....)

- பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்(code-box)


துன்பம் வெல்லும் கல்வி பாடல்

"கல்வி அழகே அழகு" என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி. கல்வி. அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும். எனவே. படிப்போம்! பண்பாட்டோடு நிற்போம்! பார் போற்ற வாழ்வோம்!

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ 

   ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே

நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே- நம்

    நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே


மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு 

    முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்

    மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது.


துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ

     சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு

      வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்


வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர

      மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் 

       வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(code-box)


சொல்லும் பொருளும்

தூற்றும்படி - இகழும்படி

மூத்தோர் - பெரியோர்

மேதைகள்- அறிஞர்கள்

மாற்றார்- மற்றவர்

நெறி- வழி

வற்றாமல் - குறையாமல்

பாடலின் பொருள் 

நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது.

பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.

தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும். அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும்.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - துன்பம் வெல்லும் கல்வி மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர்.......நடக்கக் கூடாது.

அ) போற்றும்படி 

ஆ) தூற்றும்படி 

இ) பார்க்கும்படி 

ஈ) வியக்கும்படி

2. நாம்........சொல்படி நடக்க வேண்டும்.

அ) இளையோர் 

ஆ) ஊரார்

இ) மூத்தோர்

ஈ) வழிப்போக்கர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

அ) கையில் + பொருள்

ஆ) கைப் + பொருள்

இ) கை+ பொருள்

ஈ) கைப்பு + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மானம்இல்லா

ஆ) மானமில்லா

ஈ) மானம்மில்லா

இ) மானமல்லா

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம் - சோம்பல் களைந்து மனமாற்றம் பெற்று துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். 

2. ஏட்டுக் கல்வி - ஏட்டுக் கல்வி படித்ததோடு இருந்து விடாதே

3. நல்லவர்கள் - நல்லவர்கள் இகழும்படி வளர்ந்து விடாதே.

4. சோம்பல் - சோம்பல் மனிதனால் களையப் பட வேண்டும்.

குறுவினா

1. நாம் யாருடன் சேரக்கூடாது?

நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

2. நாம் எதை நம்பி வாழக்கூடாது?

நாம் பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.

3. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்? 

நாம் பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார். 

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

நாம் மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும். அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 2. மரபுக் கவிதை பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்  பகுதிக்காகப் பழைய மற்றும் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது..

TNPSC previous year question 

1. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்

 பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.

2. உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கியவர்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

3. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்" என்னும் பாடல் பாடியவர்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

4. "செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்" என்னும் பாடல் பாடியவர்

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்

5. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்  

செங்கப்படுத்தான்காடு

6. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்பு பெயர்

மக்கள் கவிஞர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad