1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு என பல பட்டங்களை பெற்ற சாதனைப் பெண்மணி மேரி கியூரி அம்மையார் பற்றிக் கட்டுரை பார்க்கலாம்.
பாடத்தலைப்புகள்(toc)
மேரி கியூரி பற்றிய கட்டுரை
பிறப்பு
கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார்.
குடும்பம்
இவருடைய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். இவரே அவர்களுள் இளையவர்.
இவர்தம் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். ஆனாலும் குடும்பத்தில் வறுமை.
தமக்கை மருத்துவக் கல்வி பயில விரும்பினார். ஆனால், போதிய வசதி இல்லை.
இளையவள் மேரி, குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார்; செவிலிபோல் பணிவிடைகள் செய்தார். அதன்மூலம் பொருள்ஈட்டித் தம் தமக்கை கல்வி பயில உதவினார்.
கல்வி
மேரி, அறிவியல் கல்வி கற்க விரும்பினார். ஆனால், பெண்ணுக்கு அறிவியல் கல்வி தேவை இல்லை. சமையல் கலையே போதும் எனக் கல்லூரி நிருவாகம் கூறியது. அதனை ஏற்க மேரி மறுத்தார்.
மேரி, பிரான்சு நாடு சென்று கல்லூரியில் சேர்ந்தார். தம் வாழ்வின் இலக்கான அறிவியல் கல்வியைப் பயின்றார். தம்முடைய வறுமையை யாரும் அறியாவண்ணம் கல்லூரி நாள்களைக் கழித்தார். ஒருமுறை மூன்று நாள் உணவு உட்கொள்ளாததனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர் நல்ல உணவும் ஓய்வும் தரவேண்டும் எனக் கூறியபோது, உடன்பயிலும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து, பலவகையிலும் உதவினர்.
திருமணம்
அறிவியல் மேதை பியரி கியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், ஒரு வாரம் மட்டுமே ஒய்வெடுத்துக்கொண்டு தம்முடைய அறிவியல் ஆராய்ச்சிப் பணிக்குத் திரும்பினார்.
தம்முடைய வருவாயில் பெரும்பருதியை ஆராய்ச்சிக்குச் செலவிட்டதனால், வீட்டுவேலைகளைக் கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து செய்தனர்; எளிமையாகவே வாழ்ந்தனர்.
மேரி கியூரி கண்டுபிடிப்புகள்
இயற்பியலில் ஆராய்ச்சி
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இடைவிடாது செய்த ஆராய்ச்சியின் பயனாகக்
- கணவன்-மனைவி இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர்;
- அதன்பிறகு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர்.
பொலோனியம், ரேடியம் ஆகிய இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி, மேரி கியூரிஇணையருக்கும் 1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசுபெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார். (alert-passed)
ரேடியம்
ரேடியத்தின் உதவியால் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர்.
மேரி கியூரி தம்முடைய உடல்நலத்தைப் பணயம் வைத்துக் கண்டுபிடித்த ரேடியத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று இலட்சம் 50 டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்தது.
ஆனால், தம்முடைய கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்துக்குக் கொடையாக வழங்கினார் கியூரி.
ரேடியத்தின் அணு எடை
அவருடைய கணவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தபிறகு, பிரெஞ்சு அரசு, அம்மையாருக்கும் அவருடைய பெண் குழந்தைகள் இருவருக்கும் பொருளுதவி அளிக்க முன்வந்தது. ஆனாலும் மேரி, அதனை ஏற்க மறுத்தார். அதன்பிறகு, அவருடைய கணவர் ஆற்றிய பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு அளிக்கப்பட்டது. அப்பணியை அவர் சிறப்பாகச் செய்தார். அவர் மேன்மேலும் வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக, அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, அவர் பல நாட்டினராலும் அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்; பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.
இறப்பு
செயற்கரிய செயல்களை செய்த கியூரி அம்மையார் 1934ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
நினைவு கூர்க
கியூரி அம்மையாருக்குப்பின், அவர் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை எந்தக் குடும்பத்தினராலும் முறியடிக்கப்படவில்லை.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது..
ஓரிரு சொற்களில் விடை எழுதுக.
அ. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கியூரி அம்மையார் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்
ஆ. கியூரி அம்மையார், தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன?
கியூரி அம்மையார், தம் கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் ரேடியம்
இ. கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
கியூரி அம்மையார் குடும்பம் மூன்று நோபல் பரிசு பெற்றது.
ஓரிரு தொடர்களில் விடை எழுதுக.
அ. ரேடியத்தின் உதவியால் மனிதகுலத்துக்குக் கிடைத்த பயன் என்ன?
ரேடியத்தின் உதவியால் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கலாம்.
Tnpsc previous year question
2. கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
போலந்து
2. யாருடன் சேர்ந்து பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல்
3. பொலோனியம், ரேடியம் ஆகிய இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி, மேரி கியூரிஇணையருக்கும் 1903ஆம் ஆண்டு எதற்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது.
இயற்பியல்
4. நோபல் பரிசு வரலாற்றில் பரிசுபெற்ற முதற்பெண்மணி
மேரி கியூரி
Please share your valuable comments