சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் மதுரை என்னும் மாநகரம்.
பாடத்தலைப்புகள்(toc)
மதுரை சிறப்புகள்
- நள்ளிரவு மணி பன்னிரண்டு எங்கும் உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் 'தூங்கா நகர்' ,
- ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதனால், 'திருவிழா நகர்',
- நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு, எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் 'கோவில் மாநகர்',
- பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்த 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்',
இவ்வளவு சிறப்புப் பெயர்கள் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம்.
மதுரை - பெயர்க்காரணம்
பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கியது மதுரை. இஃது இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை.
- தமிழ் என்றால் மதுரை;
- மதுரை என்றால் தமிழ்.
மதுரை பற்றிய மேற்கோள்கள்
பரிபாடல்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்இதழகத் தனைய தெருவம் இதழகத்துஅரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்(code-box)
என்னும் பரிபாடல் அடிகள் கூறுவதுபோலவே இன்றும் கோவிலும் தெருக்களும் அவ்வாறே காணப்படுகின்றன.
புறநானூறு
தமிழும் மதுரையும் இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். 'தமிழ்கெழு கூடல்' எனப் புறநானூறு போற்றியது.
சிறுபாணாற்றுப்படை
நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில், “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபிள் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறிந்தார்.
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில்,
- 'ஓங்குசீர் மதுரை',
- 'மதுரை மூதூர் பாநார்”,
- 'தென்தமிழ் நன்னாட்டுத் தீருதீர் மதுரை',
- 'மாண்புடை மரபின் மதுரை',
- 'வானவர் உறையும் மதுரை’,
- 'பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்'
எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்குப் புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார்.
- "சேரநாடு வேழமுடைத்து(யானை),
- சோழநாடு சோறுடைத்து,
- பாண்டியநாடு முத்துடைத்து,
- தொண்டைநாடு சான்றோர் உடைத்து'
என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.
நான்மாடக்கூடல்
- மதுரைக்குக் 'கூடல்' எனவும்,
- ‘ஆலவாய்' எனவும்
- வேறு பெயர்கள் வழங்குகின்றன.
நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது.
- திருவாலவாய்,
- திருநள்ளாறு,
- திருமுடங்கை,
- திருநடுவூர்
ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமைந்ததனால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
- ‘கன்னிகோவில்',
- 'கரியமால் கோவில்',
- 'காளிகோவில்',
- ‘ஆலவாய்க் கோவில்”
ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததனால், 'நான்மாடக்கூடல்' என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.
பரஞ்சோதியார்
வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதனைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார்.
எந்நாட்டவரும் எவ்வூரினாரும் வந்துகூடும் வளமான நகர் என்பதனால், கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதனால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.
ஆலவாய்
திருவிளையாடற் புராணம்
மதுரையை விரிவுபடுத்த எண்ணிய பாண்டியன், இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு, வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வருத்துக் காட்டியது. அன்றுமுதல் மதுரைக்கு 'ஆலவாய்' என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
ஆலவாய் என்பது, ஆலத்தை (விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததனால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
சங்ககால மதுரை
தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.
மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்னும் பெயர் காணப்படுகிறது.
சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் உயரமாக வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச் சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன.
யானைக் கூட்டங்கள் அகழிக்குச் செல்வதற்கு ஏற்ற சுருங்கை (சுரங்க) வழியும் அமைந்திருந்தது.
மதுரை மாநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி ஒழுங்குற அமைந்த தெருக்களும், தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களைப் போன்றும் காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர்தம் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.
மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபாங்களுள் பழைமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 160.9 அடி உயரமும் 1511 சுதை உருவங்களும் உடையது.
சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன.
அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்ச்சாலைகள், நாளங்காடி, அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.
சங்கப்புலவர்
சங்கப்புலவர்களுள்,
- கணக்காயனார் மகனார் நக்கீரனார்,
- குமரனார்,
- நல்லந்துவனார்,
- மருதனிளநாகனார்,
- இளந்திருமாறன்,
- சீத்தலைச் சாத்தனார்,
- பெருங்கொல்லனார்,
- கண்ணகளார்,
- கதங்கண்ணாகனார்,
- சேந்தம்பூதனார்
முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.
மதுரை வீதிகளின் பெயர்
அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைவீதி
கூலவீதி- தானியக்கடை வீதி
பொன் வீதி - பொற்கடை வீதி
மன்னவர் வீதி - மன்னர் வாழும் வீதி
மறையவர் வீதி - அந்தணர் வீதி
மதுரையின் மாண்பு
சிவபெருமான் சுந்தர பாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப் பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாராகவும் மதுரையை ஆண்டனர்.
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
திருஞானசம்பந்தர், கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.
பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர், சிறந்த புலவர்களாகவும் விளங்கினர்.
அவருள் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், வரகுண பாண்டியன், அதிவீரராம பாண்டியன் முதலியோர் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தார்கள்.
மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மையும் சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். கோவிலின் உள்ளே பொற்றாமரைக்குளம் அமைந்து உள்ளது. இக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
திருமலை நாயக்கரின் திருப்பணிகள்
திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார். மீனாட்சியம்மன் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தார்; கலைநயமிக்க நகரமாக மதுரையைக் கவினுற அமைத்தார்;
சிற்பங்கள் மிக்க புது மண்டபத்தைக் கட்டினார்;
திருமலை நாயக்கர் மகால்
கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலைநயத்தில் "தாஜ்மகாலை' யொத்த திருமலை நாயக்கர் மகாலையும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார். அதில், மிகச் சிறந்த ஓவியங்களை அமைத்தார்.
பெருவிழாக்கள் பலவும் திருக்கோவிலில் நடைபெறுமாறு செய்தார்.
சித்திரைத் திருவிழாவைச் செந்தமிழ்நாட்டு மக்களேயன்றிப் பன்னாட்டினரும் பார்த்து மகிழுமாறு சிறப்புற நடைபெறச் செய்தார்; மதுரையை விழா நிறைந்த நகரமாக விளக்கமுறச் செய்தார்; கலைமலிந்த கலைநகரமாக்கிக் கண்டு களித்தார். அவர் கண்ட அணிமதுரைத் திருநகரை நாம் இன்றும் கண்டு இன்புறலாம்.
இராணி மங்கம்மாள் அமைத்த சத்திரங்களும் சாலைகளும் மதுரைக்குப் பெருமை சேர்ப்பனவாக இன்றும் திகழ்கின்றன.
புராண நிகழ்வுகள்
பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணம், தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் நாலடியார் இயற்றப் பெற்றது.
குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தது முதலானவை மதுரையில் நடைபெற்ற நிகழ்வுகளாகும்.
கல்வி வளர்க்கும் மதுரை
வள்ளல் பாண்டித்துரையார், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்தார்.
பாண்டித்துரை சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். இவர் மதுரைக்குச் சென்றபோது மதுரை அன்பர் சிலர், இவரைச் சொற்பொழிவு ஆற்றுமாறு வேண்டிக்கொண்டனர். இதற்காகத் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஒருமுறை படித்துவிட்டுப் பேச எண்ணினார். இவ்விரு நூல்களையும் அன்பரிடம் கேட்டார். ஆனால், அன்பர்களோ அந்நூல்கள் தங்களிடம் இல்லை என்று கூறினர். இதனால் பாண்டித்துரை வருத்தமுற்றார். இந்நிலை மாற ஓர் அரிய திட்டத்தைத் தீட்டியது அவர் மனம்.
அத்திட்டத்தின் விளைவாகத்தான் 1901ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் மதுரையிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தார். இச்சங்கம் தமிழை வளர்த்ததோடு மட்டுமன்றித் தமிழ்வளர்க்கும் புலவர் பெருமக்களையும் வளர்த்தும் காத்தும் வந்தது. தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும்வகையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டெடுத்த பாண்டித்துரையின் புகழ் தாய்த்தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" -பாரதிதாசன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை மருத்துவக் கல்லூரி இவற்றோடு கலைக் கல்லூரிகளும் இன்று கல்விப்பணி ஆற்றிவருகின்றன.
- ஆயிரங்கால் மண்டபம்,
- அட்டசத்தி மண்டபம்,
- புது மண்டபம்,
- நகரா மண்டபம்
என்பன இந்நகருக்கு மேலும் அணி சேர்ப்பன.
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால், இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.
சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் கோவலன் பொட்டல் என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களால் வழங்கப்படுகிறது.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரமே மதுரை மூதூர் எனக் குறிப்பிடுவதனால் மதுரையின் பழைமை பெறப்படும்.
பழங்கால மதிலின் எஞ்சிய சிறுபகுதி மேலவெளி வீதியில் மாநகராட்சித் தென்மண்டல அலுவலகமாக இயங்கி வருகிறது. கீழவாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்குவாசல் என வழங்கப்படும் இடங்கள் கோட்டையின் மதில் வாயில்கள் இருந்த இடங்களாக அறியப்படுகின்றன.
கையிற் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.
விழிகளை மூடினாலும் தூங்காநகரின் வியத்தகு தொன்மைக்காட்சிகள் நம் மனக்கண்ணுள் நினைவுகூர்க.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - தூங்கா நகர்-மதுரை -மாதிரி வினாக்கள்
1. உரிய விடையைத் தேர்வு செய்க.
அ) தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது
1. திருநெல்வேலி 2. தஞ்சை 3. மதுரை
ஆ) மதுரை என்னும் சொல்லுக்கான பொருள்
1. பொறுமை
2. இனிமை
3. பழைமை
இ) பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது?
1. முத்து 2. சோறு 3. தந்தம்
ஈ) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர்
1.மீனாட்சி 2. குமரகுருபரர்
3. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
உ) நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்
1. மருதுபாண்டியர் 2. பாண்டித்துரையார் 3. முத்துராமலிங்கனார்
குறுவினாக்கள்
1. கோவலன் பொட்டல் என வழங்கப்படுவதன் காரணம் என்ன?
சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் கோவலன் பொட்டல் என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களால் வழங்கப்படுகிறது.
2. திருமலை நாயக்கர் செய்த கோவில் பணிகள் யாவை ?
3. திருமலை நாயக்கர் மகாலின் சிறப்பை எழுதுக.
சிறுவினாக்கள்
1. மதுரையின் மாண்புகளை எழுதுக.
2. மதுரையில் நடைபெற்ற புராண நிகழ்வுகளை எழுதுக.
நெடுவினாக்கள்
1. மதுரையின் பெயர்க்காரணத்தை விவரிக்க.
Please share your valuable comments