இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல் அலகு 7 - காந்தவியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்ற, உலோகங்களைக் கவரும் பண்பினைப் பெற்ற கல், உலோகம் அல்லது இதர பொருள்களே காந்தமாகும். காந்தத்தின் கவரும் பண்பே 'காந்தப்பண்பு' என அழைக்கப்படுகிறது. இது இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம்.
காந்தவியல்
காந்தப் பண்புகளை விவரிக்கும் இயற்பியல் பிரிவு 'காந்தவியல்' என அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் மெக்னிசியா என்று அழைக்கப்படும் ஆசியா மைனர் பகுதியில் காந்தங்கள் கிடைத்ததாக அறியப்பட்டுள்ளது.
கி.மு (பொ.ஆ.மு) 200 க்கு முன்பே காந்தத்தின் பண்புகளை சீனர்கள் அறிந்திருந்தனர் என்று நம்பப்படுகிறது.
கி.பி (பொ.ஆ.பி) 1200 இல் அவர்கள் காந்தத்தினை திசைகாட்டியாகப் பயன்படுத்தியுள்ளனர். காந்தத்தினை திசைகாட்டியாகக் கொண்டு, எளிமையாக நீண்டதூர கடல் பயணத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
வில்லியம் கில்பர்ட் எனும் அறிவியல் அறிஞர் காந்தவியல் பிரிவு உருவாகக் காரணமானவர். பூமி மிகப்பெரிய காந்தம் என்பதனை அவர் வலியுறுத்தினார். 1544 ஆம் ஆண்டு, மே மாதம் 24 ஆம் தேதி வில்லியம் கில்பர்ட் பிறந்தார். இவரே முதன்முதலில் காந்தக் கல் (காந்தத்தின் இரும்புத் தாது) குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார். தனது கண்டுபிடிப்புகளை 'தி மேக்னடைட்' எனும் நூலில் வெளியிட்டார்.
காந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகம் புதிய திசையை நோக்கி முன்னேறியது. நம் அன்றாட வாழ்வில் காந்தங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. குளிர்ப் பதனிகள், கணினிகள், மகிழுந்து இயந்திரங்கள், மின்உயர்த்திகள் மற்றும் பிற சாதனங்களில் காந்தங்கள் பயன்படுகின்றன.
இயற்கைக் காந்தங்கள்
இயற்கையிலேயே கிடைக்கும் காந்தங்களே இயற்கைக் காந்தங்கள் எனப்படுகின்றன. அவை நிலையான காந்தங்களாகும். ஏனெனில், அவை ஒரு போதும் காந்தத் திறனை இழப்பதில்லை. இவை பூமியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மணல் படிவுகளில் காணப்படுகின்றன.
இரும்பின் தாதுவான மேக்னடைட் (இரும்பு ஆக்சைடு) எனப்படும் காந்தக் கல்லே வலிமையான இயற்கைக் காந்தமாகும். மேக்னடைட் என்பது இரும்பின் ஆக்சைடு தாது ஆகும். அதன் வாய்ப்பாடு Fe3O4
இரும்பின் தாதுக்கள் மூன்று வகைப்படும்.
அவை
ஹேமடைட் (69% இரும்பு),
மேக்னடைட் (724% இரும்பு)
மற்றும் சிடரைட்(48.2% இரும்பு)
இரும்பின் தாதுக்களுள் மேக்னடைட் அதிகமான காந்தப் பண்பினைப் பெற்றுள்ளது.
பைரோடைட் (இரும்பு சல்பைடு), ஃபெர்ரைட், கூலூம்பைட் போன்ற கனிமங்களும் இயற்கைக் காந்தங்களாகும்.
செயற்கைக் காந்தங்கள்
ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்படும் காந்தங்களே செயற்கைக் காந்தங்கள் ஆகும். இவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்கள் எனப்படுகின்றன.
இவை இயற்கைக் காந்தங்களை விட வலிமை வாய்ந்தவை.
செயற்கைக் காந்தங்களை வெவ்வேறு வடிவங்களிலும், பரிமாணங்களிலும் உருவாக்க முடியும்.
சட்டக் காந்தங்கள், U-வடிவ காந்தங்கள், குதிரை லாட வடிவ காந்தங்கள், உருளை வடிவ காந்தங்கள், வட்டு (disc) வடிவ காந்தங்கள், வளைய வடிவ காந்தங்கள் மற்றும் மின்காந்தங்கள் ஆகியவை செயற்கைக் காந்தங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
செயற்கைக் காந்தங்கள் பொதுவாக இரும்பு, நிக்கல், கோபால்ட், எஃகு போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
நியோடினியம் மற்றும் சமாரியம் ஆகிய உலோகங்களின் கலவையைப் பயன்படுத்தியும் செயற்கைக் காந்தங்களை உருவாக்க இயலும்.
இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்கள் வேறுபாடு
இயற்கைக் காந்தங்கள் | செயற்கைக் காந்தங்கள் |
---|---|
இவை இயற்கையில் காணப்படுகின்றன. ஒழுங்கற்ற வடிவம் மற்றும் பரிமாணத்தை இவை கொண்டுள்ளன. | இவை மனிதர்களால் உருவாக்கப்படுபவை. இவை வெவ்வேறு வடிவம் மற்றும் பரிமாணங்களில் உருவாக்கிட முடியும். |
இயற்கைக் காந்தத்தின் வலிமை நிலையானது. அதை மாற்றுவது கடினம். | தேவையான குறிப்பிட்ட வலிமையுடன் செயற்கைக் காந்தங்களை உருவாக்க முடியும் |
இவை நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காதவை. | இவற்றின் பண்புகள் குறிப்பிட்ட கால களவு உடையவை. |
இவை மிகக் குறைந்த பயன்பாடு உடையவை. | இவை அன்றாட வாழ்வில் பெருமளவில் பயன்படக் கூடியவை. |
காந்தம் பற்றிய சில தகவல்கள்
நியோடிமியம் (Neodymium) காந்தங்களே, பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தங்களாகும்.
கால்நடைகள் புல் மேயும்போது கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்களையும் உண்பதால் செரிமானப் பகுதி காயமடைகிறது. அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தங்கள் இத்தகைய பொருள்களைக் கவர்ந்திழுத்து கால்நடைகளைப் பாதுகாக்கின்றன.
அல்நிக்கோ (ALNICO) - அலுமினியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் உலோகக் கலவை
புறாக்கள் அசாதரணமாக நீண்ட தூரம் பயணித்துத் திரும்பும் திறன் கொண்டுள்ளன. இதுவரை சென்றிறாத பகுதிகளில் கொண்டுசென்று விட்டாலும் அவை தங்களது இருப்பிடத்திற்கே வரக்கூடியவை. புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பொருள் அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின் காந்தப்புலத்தை அறியும் ஆற்றலை அவை பெற்றுள்ளன. அத்தகைய காந்த உணர்வு (magneto-reception) காந்த ஏற்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.
ஒரு காந்தத்தின் காந்தப் பண்புகளை கீழ்க்காணும் வழிகளில் நீக்கலாம்.
- ஒரு காந்தத்தினை நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருத்தல்
- காந்தப் பொருள்களைத் தொடர்ந்து அடித்தல்
- உயரமான இடத்திலிருந்து காந்தத்தினைக் கீழே விழச் செய்தல்
- ஒரு காந்தத்தை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்துதல்
- காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச்சுருளில் வேறுபட்ட மின்னோட்டத்தினை பாயச்செய்தல்
- காந்தத்தை முறையாகப் பராமரிக்காமல் இருத்தல்
புவிக் காந்தம்
பால்வழி விண்மீன் திரளில் அமைந்துள்ள மேக்னிட்டார் என்று அழைக்கப்படும் காந்த நியூட்ரான் விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன் மிகுந்த காந்தமாகும். மேக்னிட்டார், 20 கிலோ மீட்டர் விட்டமும், சூரியனைப்போன்று 2 அல்லது 3 மடங்கு நிறையும் கொண்டது. இதன் மிக அதிக காந்தப்புலம் ஊறு விளைவிக்கக் கூடியது. அதன் நிலையிலிருந்து ஓர் உயிரி 1000 கி.மீ. தூரத்தில் இருந்தாலும் கூட அந்த உயிரியின் இரத்த ஓட்டத்திலுள்ள அனைத்து இரும்பு அணுக்களையும் (ஹீமோகுளோபின்) உறிஞ்சும் திறன் கொண்டது.
புவியானது, மிகப்பெரிய இருமுனையினை உடைய காந்தமாக அறிவியல் அறிஞர்களால் கருதப்படுகிறது.
இருந்தபோதிலும், புவிக்காந்த முனைகளின் நிலைகளை தெளிவாக வரையறுக்க அவர்களால் இயலவில்லை.
புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது, புவியியல் வடமுனைக்கு அருகிலும் வடமுனையானது, புவியியல் தென்முனைக்கு அருகிலும் அமைந்துள்ளது. இந்த காந்தத் துருவங்களை இணைக்கும் நேர்க்கோடானது காந்த அச்சு என்று அழைக்கப்படுகிறது.
காந்தத்தின் அச்சானது புவியியல் வடமுனையினைச் சந்திக்கும் புள்ளியானது வட புவிக்காந்த முனை அல்லது காந்த வடமுனை என்றழைக்கப்படுகிறது.
காந்தத்தின் அச்சானது புவியியல் தென் முனையினை சந்திக்கும் புள்ளியானது தென் புவிக்காந்த முனை அல்லது காந்த தென்முனை என்றழைக்கப்படுகிறது.
காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு (சுழல் அச்சு) ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதில்லை.
காந்த அச்சானது புவியின் அச்சிற்கு 10° முதல் 15⁰ வரை சாய்வாக அமைந்துள்ளது.
புவியின் காந்தத்தன்மைக்கான காரணங்கள்
இன்றளவிலும் புவியின் காந்தப் பண்பிற்கான காரணத்தினை மிகச்சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் புவியின் காந்தத்தன்மைக்கான காரணங்கள், சில கீழே தரப்பட்டுள்ளன.
- புவியில் உள்ள காந்தப் பொருள்களின் நிறை
- சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள்
- நிலவின் செயல்திறன்
பூமியின் உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உள்ள உலோகப் பொருள்களின் காரணமாகவே புவிகாந்தப்புலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த உருகிய பொருள்கள் 6400 கிலோ மீட்டர் ஆரம் கொண்ட புவியின் மையத்தில் அமைந்துள்ள 3500 கிலோ மீட்டர் ஆரம் கொண்ட உட்கருவில் காணப்படுகின்றன.
குளிர்பதனிகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தைவிட புவிக்காந்தமானது 20 மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.
காந்தப் பொருள்கள்
காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது வெளிப்படுத்தும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்கானும் முறையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- டயா காந்தப் பொருள்கள்
- பாரா காந்தப் பொருள்கள்
- ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
டயா காந்தப் பொருள்கள்
டயா காந்தப்பொருள்கள் கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றுள்ளன.
- சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது அவை காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்தாக நிற்கின்றன.
- சீரற்ற காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது அவை வலிமைமிகுந்த பகுதியிலிருந்து வலிமை குறைந்த பகுதியை நோக்கிச் செல்கின்றன.
- இவை காந்தப்புலத்திற்கு எதிரான திசையில் காந்தமாகின்றன.
- பிஸ்மத், தாமிரம், பாதரசம், தங்கம், நீர், ஆல்கஹால், காற்று மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை டயா பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடைவதில்லை.
பாரா காந்தப் பொருள்கள்
பாரா காந்தப்பொருள்களின் பண்புகள் பின்வருமாறு.
- சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது அவை காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக நிற்கின்றன.
- சீரற்ற காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது அவை வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி நகர்கின்றன.
- இவை காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தமாகின்றன.
- அலுமினியம், பிளாட்டினம், குரோமியம், ஆக்சிஜன், மாங்கனீஸ் போன்ற உலோகங்களும், நிக்கல் மற்றும் இரும்பின் உப்புக் கரைசல்களும் பாரா காந்தப்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடைகின்றன.
ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
ஃபெர்ரோ காந்தப்பொருள்களின் பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது அவை காந்தப்புலத்தின் திசைக்கு இணையாக வந்து நிற்கின்றன.
- சீரற்ற காந்தப்புலத்தில் தொங்கவிடப்படும்போது வலிமை குறைந்த பகுதியிலிருந்து வலிமை மிகுந்த பகுதியை நோக்கி விரைவாக நகர்கின்றன.
- இவை காந்தப்புலத்தின் திசையிலேயே வலிமையான காந்தமாகின்றன.
- இரும்பு, கோபால்ட், நிக்கல், எஃகு போன்ற உலோகங்களும் இவற்றின் உலோகக் கலவைகளும் ஃபெர்ரோ காந்தப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்
- இவ்வகைப் பொருள்களின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றமடையும். மேலும், இவற்றை வெப்பபடுத்தும் போது பாரா காந்தப்பொருள்களாக மாற்றமடைகின்றன.
கியூரி வெப்பநிலை
எந்த ஒரு வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப்பொருள் பாரா காந்தப் பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை கியூரி வெப்பநிலை என்று அழைக்கப்படுகிறது.
காந்தத்தின் பயன்கள்
அன்றாட வாழ்வில் காந்தங்களோடு நாம் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளோம். அவை பல்வேறு கருவிகளில் அதிக அளவில் பயன்படுகின்றன. அவற்றின் சில பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- முற்காலத்தில் கடலில் பயணம் செய்வோரால் திசையினை அறிவதற்கான 'திசைகாட்டும் கல்லாக' காந்தம் பயன்படுத்தபட்டது.
- தற்காலத்தில் டைனமோக்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு காந்தங்கள் பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள் பல்வேறு வகைகளில் நமது அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
- மின்சார மணிகளிலும் மின்மோட்டார்களிலும் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.
- ஒலிப்பெருக்கிகளிலும், நுண் பேசிகளிலும் (microphones) இவை பயன்படுகின்றன.
- அதிவேகமான மெக்லிவ் தொடர்வண்டியானது. மிகவும் திறன்மிக்க மின்காந்தங்களைப் பயன்படுத்தி தண்டவாளங்களுக்கு மேலே உயர்த்தி இயக்கப்படுகிறது.
- வங்கிக் காசோலைகள் மீது அச்சடிக்கப்பட்ட MCR எண்களை அறிந்து கொள்வதற்கு கணினிகளில் பொருத்தப்பட்டுள்ள காந்தங்கள் பயன்படுகின்றன.
- காந்தப் பொருள்களோடு கலந்திருக்கும் காந்தம் அல்லாத கழிவுக் பொருள்களைப் பிரித்தெடுப்பதற்கு தொழிற்சாலைகளில் 'காந்தக் கடத்துப் பட்டைகள்' (Conveyor belts} பயன்படுகின்றன.
- திருகு ஆணிகளின் (Screw drivers) முனைகளில் சிறிய அளவிலான காந்தம் பொருத்தப்பட்டிருக்கும் இது திருகுகளைப் பிடிக்க உதவுகிறது.
- மருத்துவமனைகளில் காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம் (MRI– Magnetic Resonance Imaging) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பினை ஸ்கேன் (நிழலுரு படம்) செய்கின்றனர். அதில் வலிமையான மின்காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மெக்லிவ் (Magev) தொடர் வண்டிக்கு (காந்த விலக்கத் தொடர்வண்டி) சக்கரங்கள் கிடையாது. கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் மின்காந்தங்கள் மூலம் வலிமையான காந்த விசையானது கொடுக்கப்படுவதால் தண்டவாளங்களுக்கு மேலே இது மிதந்து செல்லும், இது உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும். இது தோராயமாக 500 கிமீ / மணி வேகத்தில் செல்லக்கூடியது.
கடன் அட்டை / பற்று அட்டைகளின் பின்புறத்தில் ஒரு காந்த வரிப் பட்டை உள்ளது. இது பெரும்பாலும் 'மாக்ஸ்ட்ரைப்' என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப் என்பது இரும்பிலிருந்து பெறப்பட்ட காந்தத் துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப் படலம் ஆகும். ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் 20 மில்லியனில் ஒரு பங்கு கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.
காந்தவியல் பற்றிய சில குறிப்புகள்
- காந்தங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை: இயற்கைக் காந்தங்கள் மற்றும் செயற்கைக் காந்தங்கள்.
- காந்தங்கள் காந்தத்தன்மை கொண்ட இரும்பு போன்ற பொருள்களைக் கவரக்கூடியவை.
- காந்தத்தின் முனைப்பகுதிகள் அதிக கவரும் பண்பினை உடையவை.
- தங்குதடையில்லாமல் தொங்கவிடப்பட்ட காந்தமானது எப்பொழுதும் புளியின் வட தென் திசை நோக்கி நிற்கும்.
- காந்தத்தின் ஓரின முனைகள் ஒன்றையொன்று விலக்கும்; வேறினமுனைகள் ஒன்றையொன்று கவரும்.
- காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் 'காந்தப் பொருள்கள்' என்றும், காந்தத்தால் கவரப்படாத பொருள்கள் 'காந்தம் அல்லாத பொருள்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன.
- காந்தப்புலத்தில் வெளிப்படுத்தும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு காந்தப் பொருள்கள் டயா, பாரா, ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- காந்தப் பண்புகளை தக்கவைத்துக் கொள்ளும் பண்பின் அடிப்படையில் செயற்கைக் காந்தங்களை 'நிலையான மற்றும் தற்காலிகக்' காந்தங்கள் என வகைப்படுத்தலாம்.
- புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது, புவியியல் வடமுனைக்கருகிலும், புவிக்காந்தத்தின் வடமுனையானது புவியியல் தென்முனைக்கருகிலும் அமைந்துள்ளது
- பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு திசையினை அறிவதற்கான 'திசைகாட்டும் கல்லாக காந்தங்கள் பயன்படுத்தபட்டன.
- டைனமோக்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய காந்தங்கள் பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள் பல்வேறு வழிகளில் நமது அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
- அவை கணினியில் உள்ள சேமிக்கும் சாதனங்களான நிலைவட்டுக்களிலும் (Hard disks) கடன் அட்டைகளிலும் பயன்படுகின்றன.
அல்நிக்கோ (ALNICO) - அலுமினியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் உலோகக் கலவை
காந்த ஊசி - கிடைமட்ட தளத்தில் எளிதில் சுழலக்கூடிய வகையில் சிறிய காந்ததினைக்கொண்ட குறிமுள் வடிவிலான ஊசி
காந்தம் - இரும்பாலான பொருள்களைக் கவரும் ஒரு சிறிய இரும்பு கலந்த பொருள்
காந்த அச்சு - காந்த முனைகளை இணைக்கும் கோடு
காந்தப்புலம் - ஒரு காந்தத்தைச் சுற்றிலும் குறிப்பிட்ட பகுதியில் காந்த விசையை உணரும் பகுதி
காந்தவியல்- காந்தப் பண்புகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு பிரிவு
காந்தமாக்கம் - புறக்காந்தப்புலத்தால் ஒரு பொருளினை நிலையான அல்லது தற்காலிக காந்தமாக உருவாக்கும் முறை
மேக்னடைட்- காந்தத் தன்மையுள்ள பாறை
காந்தவியல் 8ம் வகுப்பு அறிவியல் - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள்
அ) மரப்பொருள்கள்
ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
இ) தாமிரம்
ஈ) இரும்பு மற்றும் எஃகு
2. கீழ்க்கானும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
அ) மின்காந்தம்
ஆ)முமெட்டல்
இ) தேனிரும்பு
ஈ) நியோடிமியம்
3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும்
அ) ஒன்றையொன்று கவரும்
ஆ) ஒன்றையொன்று விலக்கும்
இ) ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது
ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
அ) U வடிவ காந்தம்
ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
இ) வரிசுருள்
ஈ) சட்டக் காந்தம்
5. MRI என்பதன் விரிவாக்கம்
அ) Magnetic Resonance Imaging
ஆ) Magnetic Running Image
இ) Magnetic Radio Imaging
ஈ) Magnetic Radar Imaging
6. காந்த ஊசி ........பயன்படுகிறது.
அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
இ) கடல் பயணத்திற்கு
ஈ) மேற்காண் அனைத்தும்
கோடிட்ட இடங்களை நிரப்புக,
1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் அதிகம்
2. ஒரு காந்தம் இரு முனைகளைக் கொண்டது.
3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் டைனமோக்கள்
4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது காந்தங்கள்
5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் பூமியின் வட தென்முனைகளை நோக்கி இருக்கும்.
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
மேக்னடைட் - இயற்கைக் காந்தம்
ஒரு சிறு சுழலும் காந்தம் - காந்த ஊசிப்பெட்டி
கோபால்ட் - ஃபெர்ரோ காந்தப்பொருள்கள்
வளைபரப்புகள் - காந்த விசைக்கோடுகள்
பிஸ்மத் - டயா காந்தப் பொருள்கள்
Please share your valuable comments