வெப்பம் அலகு 4 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO

இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல்  அலகு 4 - வெப்பம் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

வெப்பம்

நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப்பொருள்களும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் ஆனவை. இந்த அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் எப்பொழுதும் அதிர்வுறும் இயக்கத்தில் உள்ளன. இதனால் அவை ஒருவகை ஆற்றலைப் பெற்றுள்ளன. அதுவே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. இந்த வெப்ப ஆற்றல் வெப்பமான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு அல்லது ஒரு பொருளின் வெப்பமான பகுதியிலிருந்து குளிர்ச்சியான பகுதிக்குப்பரவுகிறது.

வெப்ப ஆற்றலின் விளைவுகள்

ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும்போது, அது அப்பொருளில் பல மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. வெப்பத்தின் மூன்று முக்கியமான மாற்றங்களை நம் அன்றாட வாழ்வில் நாம் காணலாம். 

அவையாவன:

  • விரிவடைதல் 
  • வெப்பநிலை உயர்வு 
  • நிலை மாற்றம்

விரிவடைதல்

திடப்பொருள்களை வெப்பப்படுத்தும்போது அவை விரிவடைகின்றன. இந்த விரிவு திரவம் மற்றும் வாயுக்களிலும் ஏற்படுகிறது. ஆனால், வாயுக்களில் இது அதிகமாக இருக்கும்,

மின்சாரத்தை நீண்ட தொலைவிற்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்படும் மின்வடக் கம்பிகள் பகல் நேரங்களில் விரிவடைந்து இரவு நேரங்களில் சுருங்குகின்றன. எனவேதான், அவை மிகவும் விரைப்பாக இணைக்கப் படுவதில்லை. விரைப்பாக இணைக்கப்பட்டால் இரவு நேரங்களில் குளிர்ச்சி அடையும் பொழுது அவை அறுந்து விடக்கூடும்.

 

வெப்பநிலை உயர்வு 

முகவையில் உள்ள நீரை வெப்பப்படுத்தும் போது, நீரில் உள்ள அணுக்கள் வெப்ப ஆற்றலைப் பெறுகின்றன. இந்த வெப்ப ஆற்றல் நீர் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. நீர் மூலக்கூறுகள் அதிக ஆற்றலைப் பெறும்பொழுது அவற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதிலிருந்து, வெப்ப ஆற்றல் ஒரு பொருளில் வெப்பநிலை உயர்வை ஏற்படுத்துகிறது என்பதை அறிய முடிகிறது. 

நிலை மாற்றம்

பனிக்கட்டியில் உள்ள நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை அதிகமாக உள்ளது. எனவே, அவை மிகவும் நெருக்கமாக உள்ளன. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை குறைவதால் பனிக்கட்டி உருகி நீராக மாறுகிறது. 

நீரை வெப்பப்படுத்தும்போது நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை மேலும் குறைவதால் அது நீராவியாக மாறுகிறது. நீராவியானது சுற்றுப்புறத்திற்குச் செல்வதால் நீரின் அளவு குறைகிறது. 

இந்த நிகழ்வுகளிலிருந்து ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அப்பொருளின் நிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அப்பொருளில் உள்ள வெப்ப ஆற்றலை நீக்கும்போது, எதிர்த்திசையில் மாற்றம் ஏற்படுகிறது.

வெப்ப ஆற்றல் காரணமாக பொருள்களில் கீழ்க்காணும் மாற்றங்களுள் ஏதாவது ஒரு மாற்றம் எற்படலாம்.

* திடப்பொருள் திரவமாக மாறுதல் (உருகுதல்)

* திரவம் வாயுவாக மாறுதல் (ஆவியாதல்) 

* திடப்பொருள் வாயுவாக மாறுதல் (பதங்கமாதல்)

* வாயு திரவமாக மாறுதல் (குளிர்தல்)

* திரவம் திடப்பொருளாக மாறுதல் (உறைதல்)

* வாயு திடப்பொருளாக மாறுதல் (படிதல்)

இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் நீர் ஆகும்.

 

வெப்பம் அலகு 4 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO


வெப்பப் பரிமாற்றம்

அது ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கும்போது, அப்பொருளின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாற்றம் அடைகிறது. 

ஒரு பொருளின் நிலையைப் பொருத்து வெப்பப் பரிமாற்றம் மூன்று விதங்களில் நடைபெறுகிறது. வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் மூன்று விதங்களாவன:

  • வெப்பக் கடத்தல்
  • வெப்பச் சலனம்
  • வெப்பக் கதிர்வீச்சு

வெப்பக் கடத்தல்

வெப்பக்கடத்தல் நிகழ்வு ஒரு கடத்தியின் இரண்டு முனைகளுக்கிடையே அல்லது வெவ்வேறு வெப்பநிலையில், ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்பிலுள்ள இரண்டு திடப்பொருள்களுக்கிடையே நிகழ்கிறது. திடப்பொருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் என்று வரையறுக்கப்படுகிறது.

உலோகங்கள் அனைத்தும் சிறந்த வெப்பக் கடத்திகளாகும். 

வெப்பத்தை எளிதாகக் கடத்தாத பொருள்கள் வெப்பம் கடத்தாப் பொருள்கள் அல்லது காப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன. மரம், தக்கை, பருத்தி, கம்பளி, கண்ணாடி, இரப்பர் ஆகியவை வெப்பம் கடத்தாப் பொருள்களாகும்.

 

அன்றாட வாழ்வில் வெப்பக்கடத்தல்

உலோகத்தாலான சமையல் பாத்திரத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்ப ஆற்றலானது பாத்திரத்திலிருந்து உணவுப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது.

சலவை செய்யும்போது சலவைப் பெட்டியிலிருந்து வெப்ப ஆற்றல் துணிக்குப் பரவுகிறது. 

சமையல் பாத்திரங்களின் கைப்பிடி பிளாஸ்டிக் அல்லது மரத்தினாலான பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். ஏனெனில்,வெப்பத்தைக் கடத்துவதில்லை.

இக்லூ எனப்படும் பனி வீடுகளில் உள்பகுதியின் வெப்பநிலை சுற்றுப்புறத்தைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், பனிக்கட்டி வெப்பத்தை மிகவும் அரிதாகக் கடத்தக்கூடியது.

வெப்பச் சலனம்

பாத்திரத்திலுள்ள நீரை வெப்பப்படுத்தும்போது, பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள நீர் மூலக்கூறுகள் வெப்ப ஆற்றலைப் பெற்று மேல்நோக்கி நகர்கின்றன. பிறகு, மேற்பகுதியிலுள்ள நீர் மூலக்கூறுகள் கீழே நகர்ந்து வெப்பமடைகின்றன. இந்த விதமான வெட்பக் கடத்தலுக்கு வெப்பச் சலனம் என்று பெயர். 

வளிமண்டலத்திலுள்ள வாயுக்களும் இம்முறையின் மூலமே வெப்பமடைகின்றன. 

ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும் முறைக்கு வெப்பச் சலனம் என்று பெயர். 

வெப்பச் சலனம் திரவங்கள் மற்றும் வாயுக்களில் நடைபெறுகிறது.

அன்றாட வாழ்வில் வெப்பச் சலனம்

நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு வெப்பச் சலனமே காரணம் ஆகும்.

வெப்பச் சலனம் மூலமாகவே காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்கிறது.

குளிர்சாதனப் பெட்டியில், குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இடம்பெயர்ந்து, சூடான காற்றை வெப்பச் சலனம் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

வெப்பக்காற்று பலூன்களில் வெப்பச் சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுவதால் பலூன் மேலே உயர்கிறது.

வெப்பக் கதிர்வீச்சு 

வெப்பக் கதிர்வீச்சு என்பது வெப்ப ஆற்றல் பரவும் மூன்றாவது விதம் ஆகும். 

வெப்ப ஆற்றல்,

  • திடப்பொருளில் வெப்பக் கடத்தல் மூலமாகவும்,
  • திரவம் மற்றும் வாயுக்களில் வெப்பச் சலனம்

மூலமாகவும்  பரவுகிறது. 

ஆனால், வெற்றிடத்தில் வெப்பக் கதிர்வீச்சு மூலம் வெப்ப ஆற்றல் பரவுகிறது. 

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் வெப்பக் கதிர்வீச்சு மூலமே பரவுகின்றது. 

வெப்ப ஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகளாகப் பரவும் முறை வெப்பக் கதிர்வீச்சு என்று வரையறுக்கப்படுகிறது.

அன்றாட வாழ்வில் வெப்பக் கதிர்வீச்சு

சூரியனிடமிருந்து வெப்ப ஆற்றல் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகிறது.

நெருப்பிற்கு அருகில் நிற்கும்போது வெப்பக் கதிர்வீச்சு மூலம் நாம் வெப்பத்தினை உணர்கிறோம்.

கருப்பு மேற்பரப்புடைய பொருள்கள் வெப்பக்கதிர்வீச்சுகளை ஏற்கும் தன்மையுடையதாக உள்ளன. எனவே, சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்புநிற வண்ணம் பூசப்படுகிறது.

வெண்மை நிறமானது வெப்பக் கதிர்வீச்சினை எதிரொளிக்கின்றது. எனவேதான், கோடைகாலங்களில் வெண்மை நிற ஆடைகளை உடுத்துமாறு நாம் அறிவுறுத்தப்படுகிறோம்.

வெப்ப அளவியல்

பொருள்களில் நடைபெறும் இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளில் உள்ள வெப்ப ஆற்றலின் மதிப்பினைக் கணக்கிடும் முறைக்கு வெப்ப அளவியல் என்று பெயர்.

வெப்பநிலை

ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு வெப்பநிலை ஆகும். 

இது வெப்பநிலைமானியைக் கொண்டு அளவிடப்படுகிறது. 

வெப்பநிலையை அளவிட மூன்று விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* செல்சியஸ் அளவுகோல்

* ஃபாரன்ஹீட் அளவுகோல்

* கெல்வின் அளவுகோல்

மேற்கண்ட அளவுகோல்களுள், கெல்வின் அளவுகோலே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

வெப்பத்தின் அலகு

வெப்பம் என்பது ஒரு வகையான ஆற்றல் என்பது நமக்குத் தெரியும்.

ஆற்றலின் SI அலகு ஜூல், எனவே, வெப்பத்தையும் ஜூல் எனும் அலகில் குறிப்பிடலாம். 

இது J என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.

வெப்பத்தை அளவிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு கலோரி ஆகும். 

1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி என வரையறுக்கப்படுகிறது. 

கலோரி மற்றும் ஜூல் ஆகிய அலகுகளுக்கிடையேயான தொடர்பு பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

 1 கலோரி = 4.189 J.

வெப்ப ஏற்புத்திறன் 

ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைவதற்கு அவற்றிற்கு வெவ்வேறு அளவு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.

இது அப்பொருளின் வெப்ப ஏற்புத்திறன் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு அப்பொருளின் வெப்ப ஏற்புத்திறன் என வரையறுக்கப்படுகிறது.

வெப்ப ஏற்புத்திறனின் அலகு கலோரி / °C,

இதன் SI அலகு J/K ஆகும்.

பொதுவாக, பொருள் ஒன்று ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவானது மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

* பொருளின் நிறை

* பொருளின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்

* பொருளின் தன்மை

பிற பொருள்களை விட நீர் அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே நீரானது குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராம் எண்ணையைவிட 100 கிராம் தண்ணீர் அதிக அளவு வெப்பத்தை இழுத்துக் கொள்ள முடியும்.

தன் வெப்ப ஏற்புத்திறன்

ஓரலகு நிறையுடைய பொருளின் வெப்ப ஏற்புத்திறனே அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத்திறன் என அழைக்கப்படுகிறது.

இதன் SI அலகு J / kg K.

வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்)

ஒரு பொருளின் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாதனம் வெப்பக் கட்டுப்படுத்தி (தெர்மோஸ்டாட்) ஆகும்.

 'தெர்மோஸ்டாட்' என்ற சொல், இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் 'தெர்மோ' எனும் சொல் வெப்பம் என்றும், 'ஸ்டாட்' எனும் சொல் அதே நிலையில் இருப்பது என்றும் பொருள்படும். 

வெப்பமூட்டும் அல்லது குளிர்ச்சியூட்டும் உபகரணங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை அடைவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன், அந்த உபகரணத்தை செயல்பட வைக்கின்றன அல்லது நிறுத்திவிடுகின்றன. 

கட்டடங்களிலுள்ள சூடேற்றி, அறைகளின் மைய சூடேற்றி, காற்றுப்பதனாக்கி (Air conditioner), நீர் சூடேற்றி மற்றும் சமையலறையிலுள்ள குளிர்பதனி, நுண்ணலை அடுப்பு ஆகிய அமைப்புகளில் வெப்பக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. 

சில வேளைகளில் உணர்வியாகவும், வெப்பநிலை அமைவுகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப் படுத்தியாகவும் வெப்பக் கட்டுப்படுத்தி செயல்படுகிறது.

வெப்பக் குடுவை (வெற்றிடக் குடுவை) Flask

வெற்றிடக்குடுவை முதன்முதலில் 1892ஆம் ஆண்டு ஸகாட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கவுரவப்படுத்தும் விதமாக இது திவார் குடுவை (Dewar Flask) என்றும் அழைக்கப்படுகிறது. இது திவார் பாட்டில் எனவும் அழைக்கப்படும்.

வெப்பக் குடுவை (வெற்றிடக் குடுவை)  என்பது அதனுள்ளே உள்ள பொருளின் வெப்பநிலையானது சுற்றுப்புறத்தின் வெப்பநிலையைவிட அதிகரித்துவிடாமல் அல்லது குறைந்துவிடாமல் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடிய வெப்பத்தைக் கடத்தாத சேமிப்புக் கலனாகும். 

இதனுள் வைக்கப்பட்டுள்ள திரவத்தின் வெப்பநிலையை இது நீண்ட நேரம் மாறாமல் காப்பதோடு, அதன் சுவையில் எந்தவித மாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

வெப்பக் குடுவை வேலை செய்யும் விதம்

வெற்றிடக் குடுவை இரண்டு சுவர்களைக் கொண்ட ஒரு கலனாகும். 

அதன் உட்புறமானது சில்வரால் ஆனது. 

இரண்டு சுவர்களுக்கும் இடையே வெற்றிடம் ஒன்று உள்ளது. அது, வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் வெளியே பரவாமல் இருக்க உதவுகிறது. 

சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும், உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை. 

குடுவையின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் மட்டுமே வெப்பக்கடத்தல் மூலம் வெப்பமானது கடத்தப்படமுடியும். 

குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக் கதிர்வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கே அனுப்புவதால் நீண்ட நேரம் திரவம் சூடாக இருக்கிறது.

TNPSC முக்கிய கேள்விகள் 

1. திரவம் வாயுவாக மாறுதல் 

(ஆவியாதல்) 

2. திடப்பொருள் வாயுவாக மாறுதல்

 (பதங்கமாதல்)

3.  வாயு திரவமாக மாறுதல்

 (குளிர்தல்)

4. திரவம் திடப்பொருளாக மாறுதல்

 (உறைதல்)

5. வாயு திடப்பொருளாக மாறுதல் 

(படிதல்)

6. இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்ற ஒரே பருப்பொருள் 

நீர்

7. திடப்பொருள் திரவமாக மாறுதல்

 (உருகுதல்)

8. பனிக்கட்டி வெப்பத்தை ....... கடத்தக்கூடியது.

மிகவும் அரிதாகக்

9. வளிமண்டலத்திலுள்ள வாயுக்களும் இம்முறையின் மூலமே வெப்பமடைகின்றன. 

வெப்பச் சலனம் 

10. ....... திரவங்கள் மற்றும் வாயுக்களில் நடைபெறுகிறது.

வெப்பச் சலனம் 

11. நிலக்காற்று மற்றும் கடல் காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாவதற்கு காரணம்

வெப்பச் சலனம் 

12. ...........மூலமாகவே காற்றானது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்கிறது.

வெப்பச் சலனம் 

13. குளிர்சாதனப் பெட்டியில், குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இடம்பெயர்ந்து, சூடான காற்றை ...........மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

வெப்பச் சலனம் 

14. வெப்பக்காற்று பலூன்களில் ......... மூலம் வெப்பம் கடத்தப்படுவதால் பலூன் மேலே உயர்கிறது.

வெப்பச் சலனம் 

15. வெப்ப ஆற்றல், திடப்பொருளில் ......... மூலமாக பரவுகிறது

வெப்பக் கடத்தல் 

16. வெப்ப ஆற்றல், திரவம் மற்றும் வாயுக்களில் ........... மூலமாக பரவுகிறது. 

வெப்பச் சலனம்

17. வெற்றிடத்தில் ..... மூலம் வெப்ப ஆற்றல் பரவுகிறது. 

வெப்பக் கதிர்வீச்சு

18. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் ........ மூலமே பரவுகின்றது. 

வெப்பக் கதிர்வீச்சு

19. வெப்ப ஆற்றலானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ....... அலைகளாகப் பரவும் முறை வெப்பக் கதிர்வீச்சு என்று வரையறுக்கப்படுகிறது.

மின்காந்த அலை

20. நெருப்பிற்கு அருகில் நிற்கும்போது ......... மூலம் நாம் வெப்பத்தினை உணர்கிறோம்.

வெப்பக் கதிர்வீச்சு 

21. கருப்பு மேற்பரப்புடைய பொருள்கள் வெப்பக்கதிர்வீச்சுகளை .... தன்மையுடையதாக உள்ளன. 

ஏற்கும்

22. வெண்மை நிறமானது வெப்பக் கதிர்வீச்சினை ......... 

எதிரொளிக்கின்றது. 

23. பிற பொருள்களை விட ....... அதிக அளவு வெப்ப ஏற்புத் திறனைப் பெற்றுள்ளது.

நீர்

24.  வெப்பம் என்பது ஒரு வகையான

அ) மின்னாற்றல்

ஆ) ஈர்ப்பு ஆற்றல்

இ) வெப்ப ஆற்றல்

ஈ) எதுமில்லை

25. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம்........ல் நடைபெறும்

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

26. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

அ) விரிவடைதல்

ஆ) வெப்பநிலை உயர்வு

இ) நிலைமாற்றம்

ஈ) அனைத்தும்

27. கலோரிமீட்டர் என்ற சாதனம் ..........அளக்கப் பயன்படுகிறது.

வெப்பத்தை

28. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு .......... எனப்படும்.

கலோரி 

29. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது .........ஐ மாறாமல் வைத்திருக்கிறது.

வெப்பநிலை

30. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு ...... என்று பெயர்.

படிதல் 

31. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது? 

அ) திடப்பொருள் 

ஆ) திரவப்பொருள் 

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

32. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

அ) திடப்பொருள் 

ஆ) திரவப்பொருள் 

இ) வாயுப்பொருள்

 ஈ) அனைத்தும்

33. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை

அதிகரிக்கும் 

34.  ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு

விரிவடையும் 

35. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ...... என்று பெயர்.

அ) பதங்கமாதல் 

ஆ) குளிர்வித்தல்

இ) உறைதல் 

ஈ) படிதல்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad