இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும். பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும். அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர். அவரின் அறவுரையை அறிவோம் வாருங்கள்.
பாடத்தலைப்புகள்(toc)
தேசிக விநாயகனார் பிள்ளை ஆசிரியர் குறிப்பு
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
பிறந்த இடம்
தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் - அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.
பெற்றோர்
சிவதாணு, ஆதி லட்சுமி
சிறப்புகள்
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
சிறப்பு பெயர்கள்
கவிமணி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
நூல்கள்
- பசுவும் கன்றும் -தோட்டத்தில் மேயுது
- மலரும் மாலையும்
- காந்தரூள் சாலை
- அழகம்மை ஆசிரிய விருத்தம்
- குழந்தைச் செல்வம்
- மருமக்கள் வழி மான்யம்
- உமர் கய்யாம் பாடல்கள்
- ஆசிய ஜோதி
ஆசியஜோதி
முன்கதைச் சுருக்கம்
அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.
பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.
நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன்
நேரிலே நிற்கவும் அஞ்சினாரே;
துன்று கருணை நிறைந்த வள்ளல் - அங்கு
சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!
வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!
யாரும் விரும்புவது இன்னுயிராம் - அவர்
என்றுமே காப்பதும் அன்னதேயாம்;
பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்
பாடு முழுதும் அறிந்திலீரோ?
நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்;
பாரினில் மாரி பொழிந்திடவே - வயல்
பக்குவ மாவது அறிந்திலீரோ?
காட்டும் கருணை உடையவரே - என்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த
மர்மம் அறியாத மூடரையா!
காடு மலையெலாம் மேய்ந்துவந்து - ஆடுதன்
கன்று வருந்திடப் பாலையெல்லாம்
தேடிஉம் மக்களை ஊட்டுவதும் - ஒரு
தீய செயலென எண்ணினீரோ?
அம்புவி மீதில்இவ் ஆடுகளும் - உம்மை
அண்டிப் பிழைக்கும் உயிரலவோ?
நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா?
ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?
தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லைஐயா!
ஆதலால் தீவினை செய்யவேண்டா - ஏழை
ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா;
பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும் ஐயா!
- கவிமணி தேசிக விநாயகனார்(code-box)
சொல்லும் பொருளும்
அஞ்சினர்- பயந்தனர்
கருணை- இரக்கம்
வீழும்- விழும்
ஆகாது- முடியாது
நீள்நிலம்- பரந்த உலகம்
முற்றும்- முழுவதும்
மாரி- மழை
கும்பி- வயிறு
பூதலம்- பூமி
பார்- உலகம்
பாடலின் பொருள்
யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள்.
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.
எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ?
நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ?
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.
காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா?
ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.
ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.
நூல் வெளி
ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Lght of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் கீழ் 1. கவிமணி தேசிக விநாயகனார் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - ஆசியஜோதி மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி
2. நேர்மையான வாழ்வை வாழ்பவர்.
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
3. ஒருவர் செய்யக் கூடாதது
அ) நல்வினை
ஆ) தீவினை
இ) பிறவினை
ஈ) தன்வினை
4. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
5. 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்
6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
ஆ) இனியஉயிர்
அ) இன்உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
7.மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
இ) மலையெல்லாம்
அ) மலை எலாம்
ஆ)மலையெலாம்
ஈ) மலைஎல்லாம்
குறுவினா
1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல்.
2. எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?
எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது.
3. ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?
ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் விட்டுச் செல்லாது.
4. உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?
நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆளமுடியும்.
சிறுவினா
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?
- எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள்:
- தீய செயல்களைச் செய்யாதீர்கள்.
- பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.
- இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள்.
- இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்
சிந்தனை வினா
பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் வேண்டும்?
பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில்,
- நாம் காடுகளை அழிக்க கூடாது.
- வனபரப்பை அதிகரிக்க வேண்டும்.
- பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாட கூடாது.
- பறவைகளும், விலங்குகளும் கிடைக்கும் நீர்நிலைகளை அழிக்க கூடாது.
- பறவைகளின் வாழ்விடங்களான மரங்களைப் பாதுகாப்பதே அவற்றுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.
கவிதைகள்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.- கவிமணி தேசிக விநாயகனார்
இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். இதில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.
கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;
காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன் - அதில்
கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்!
ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன் - அங்கென்
ஆசை தீரவிளை யாடிவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் -பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
- கவிமணி
Tnpsc previous year question
1. "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலை எழுதியவர்
கவிமணி தேசிக விநாயகனார்
2. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி
3. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது
லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)
4. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற ஆங்கில நூலை எழுதியவர்
எட்வின் அர்னால்டு
5. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்
புத்தர்
6. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூலான ஆசிய ஜோதியை எழுதியவர்
கவிமணி தேசிக விநாயகனார்
7. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
நீள்நிலம்- பரந்த உலகம்
கும்பி- வயிறு
பூதலம்- பூமி
பார்- உலகம்
8. பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக நடத்தப்பட்ட உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தியவர்
புத்தர்
9. தேசிக விநாயகனார் நூல்களில் பொருந்தாதது
காந்தரூள் சாலை
அழகம்மை ஆசிரிய விருத்தம்
முள்ளும் மாலையும் (சரி- மலரும் மாலையும்)
மருமக்கள் வழி மான்யம்
10. எந்த மன்னனின் யாகத்துக்காக நடத்தப்பட்ட உயிர்க்கொலையை புத்தர் தடுத்து நிறுத்தினார்
பிம்பிசாரர்
11. கவிமணி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
தேசிக விநாயகனார்
12. தேசிக விநாயகனார் பிறந்து வளர்ந்த இடம்
கன்னியாகுமரிப் பக்கம் - அதாவது நாஞ்சில் நாட்டில்
13. தேசிக விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம்
திருநெல்வேலி
14. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்
தேசிக விநாயகனார்
Please share your valuable comments