ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள். இப்பகுதியில் கடுவெளிச்சித்தர் பாடல் இடம் பெற்றுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
கடுவெளிச்சித்தர் குறிப்பு
- நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.
- இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்;
- எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.
கடுவெளிச்சித்தர் பாடல்கள் விளக்கம்
வைதோரைக் கூட வையாதே - இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!
பாம்பினைப் பற்றி ஆட்டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!
வேம்பினை உலகில் ஊட்டாதே - உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!
போற்றும் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!
சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே - பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!
கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையிலே உன்கடம் நனையாதே!
கொள்ளை கொள்ள நினையாதே - நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே!
- கடுவெளிச் சித்தர்(code-box)
பாடல்பொருள்
உன்னை வைதவரைக்கூட நீ வையாதே;
இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே;
பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே;
கல்லெறிந்து பறவைகளைத் துன்புறுத்தாதே!
பாம்போடு விளையாடாதே!
பெண்களைப் பழித்துப் பேசாதே !
பிறரிடம் கசப்பான சொற்களைப் பேசாதே!
உன் இறுமாப்பைப் பிறர்க்குக் காட்டாதே!
பிறர் கொண்டாடிச் செய்யும் சடங்குகளை நீயும் செய்யாதே!
உன்னைப் புகழ்ந்து பேச, பிறர் வீடுகளுக்குச் செல்லாதே;
உன் வாழ்வைப் போற்றி நீ பெரிதாக எண்ணாதே!
பிறருக்கு இழிவை உண்டாக்கும் தாழ்வான செயல்களைச் செய்யாதே!
போலி வேடங்களைப் போடாதே!
புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே!
யாருடைய பொருளையும் திருட நினைக்காதே!
ஒருவனோடு நட்புக்கொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!
சொல்பொருள்
வெய்யவினை - துன்பம் தரும் செயல்
வேம்பு - கசப்பான சொற்கள்
விறாப்பு - இறுமாப்பு
பலரில் - பலர் + இல், பலருடைய வீடுகள்
புகலல் ஒண்ணாதே - செல்லாதே
சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
கடம் - உடம்பு
நினைவு கூர்க
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 9. சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்டவர் கடுவெளிச் சித்தர்
ஓரிரு சொற்களில் விடை தருக.
அ. கடம் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
கடம் என்னும் சொல்லின் பொருள் உடம்பு
ஓரிரு தொடர்களில் விடை தருக.
அ. கல்லெறிந்து துன்புறுத்தக் கூடாதது எது ?
கல்லெறிந்து துன்புறுத்தக் கூடாதது பறவைகள்.
ஆ. கையில் எடுத்து விளையாடக் கூடாதது எது ?
கையில் எடுத்து விளையாடக் கூடாதது பாம்புகள்.
நான்கு வரிகளுக்கு மிகாமல் விடை தருக.
அ. கடுவெளிச் சித்தர் கூறும் அறிவுரைகளில் சிறப்பான மூன்றனைக் கூறுக.
கடுவெளிச் சித்தர் கூறும் அறிவுரைகளில் சிறப்பான மூன்று
- பாம்போடு விளையாடாதே!
- பெண்களைப் பழித்துப் பேசாதே !
- பிறரிடம் கசப்பான சொற்களைப் பேசாதே!
TNPSC previous year question
1. கடுவெளிச் சித்தர் என்பது எவ்வகை பெயர்?
காரணப் பெயர்கள்
2. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்?
கடுவெளிச் சித்தர்
3. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே
காரணப் பெயர்கள்
4. கடம் என்னும் சொல்லின் பொருள்
உடம்பு
5. "வைதோரைக் கூட வையாதே - இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!" என்றவர்
கடுவெளிச் சித்தர்
6. ஏறத்தாழ ....... ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
நானூறு
7. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறிய சித்தர்
கடுவெளிச் சித்தர்
8. வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்
கமனசித்தர்
9. சித்தர் பாடல்கள் என்னும் நூலை எழுதியவர்
அயோத்திதாசப் பண்டிதர்
10. விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர்
பெரியாழ்வார்
11. ......... சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவமாயிற்று.
பதினெண்
11. மருத்துவ நூல்கள் எழுதிய சித்தர்களில் பொருந்தாதது
அகத்தியர்
தேரையர்
போகர்
பாணியார் (சரி - புலிப்பாணி)
12. முதற்சித்தர் என்று அழைக்கப்படுபவர்
திருமூலர்
Please share your valuable comments