'தேவனாம்பியாச பிரியதர்ஷன்'அசோகர் - மௌரியப் பேரரசு - Empire Tamil

வெற்றிக்கு பின் போரை துறந்த மௌரிய அரசரை பற்றி தெரியுமா? ஆம்.அவர்தான் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர் அசோகர்.

'தேவனாம்பியாச பிரியதர்ஷன்'அசோகர் - Ashoka The Great - Former Emperor of Maurya Empire -Tamil

  • இந்தியா வரலாற்றில் தற்போதுள்ள மிகப் பழைமையான எழுதப்பட்ட ஆதாரம் அசோகரின் கல்வெட்டுகள்ஆகும்.

முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர். அவர் தலைமையிலான மௌரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: "உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று".

அவர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார். அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர். பெருமளவில் உயிர்கள் மாண்டதனை கண்ட பேரரசர் அசோகரின் மனதை அது பெரிதும் பாதித்தது. கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். 

மௌரியர்களின் அரசியல் வரலாறு - Political History of the Mauryas in Tamil

சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 322 - கி.மு.298) 

  • மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்

அவர் தனது இருபத்தி ஐந்தாவது வயதில் நந்தவம்சத்தின் கடைசி அரசன் தனநந்தனிடமிருந்து பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றினார். தனநந்தனைத் தோற்கடித்து மன்னனான சந்திரகுப்த மௌரியன் அலெக்ஸாண்டர் பஞ்சாபில் விட்டுச்சென்ற படையைத் துரத்திப் பிடித்து பஞ்சாபையும் சிந்து மாகாணத்தையும் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். 

சந்திரகுப்தனுடைய இராஜ்யம் 

  • மாளவம், குஜராத் உட்பட வட இந்தியா முழுமையும் இருந்தது.

சந்திரகுப்த மௌரியர் வடமேற்கில் படையெடுத்துச் சென்று சிந்து நதி வரையிலான பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் மத்திய இந்தியாவில் நர்மதை நதிக்கு வடக்கிலிருந்த பகுதிகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டார். 

கி.மு. 305 ஆம் ஆண்டு வடமேற்கு இந்தியாவை ஆட்சிபுரிந்த அலெக்ஸாண்டரின் படைத் தளபதியான செலூகஸ் நிகேடருக்கு எதிராக படையெடுத்தார். அவரை முறியடித்த சந்திரகுப்த மெளரியர், அவரோடு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார். அதன்படி, செலூகஸ் நிகேடர் சிந்துநதிக்கு அப்பாலிருந்த பகுதிகளான அரியா, அரகோஷியா, கெட்ரோஷியா போன்றவற்றை மௌரியப் பேரரசுடன் இணைத்துக்கொள்ள சம்மதித்தார். தனது மகளையும் மௌரிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். சந்திரகுப்த மௌரியரும் செலூகஸ் நிகேடருக்கு பரிசாக 500 யானைகளை அளித்தார். கிரேக்க நாட்டின் தூதராக மெகஸ்தனிஸ் மௌரிய அரசவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மெகஸ்கனிஸ்  

செல்யூக்கஸ் நிகேடார் தன் மகளைச் சந்திரகுப்தனுக்கு மணமுடித்து மெகஸ்கனிஸ் என்ற  தனது தூதனையும் பாடலிபுத்திரத்தில் விட்டுச் சென்றான்.

  • மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா', 
  • கௌடில்யர் எழுதிய ‘அர்த்தசாஸ்திரம்
  • மற்றும விசாகதத்தர் எழுதிய 'முத்ரா ராக்ஷகம்' என்ற நாடகம் 

இவை மூன்றும் மௌரியர் ஆட்சிமுறை, கலாச்சாரம், மௌரியர் வரலாறு பற்றிய பல செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.

சந்திரகுப்த மௌரியர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சமண சமயத்தை தழுவினார். தனது மகன் பிந்துசாரனுக்காக அரியணையைத் துறந்த அவர், பத்ரபாகு தலைமையிலான சமணத்துறவிகள் புடைசூழ மைசூருக்கு அருகிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தார். அங்கு உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். 

பிந்துசாரன் (கி.மு. 298 கி.மு.273) 

  • கிரேக்க நாட்டு ஆசிரியர்களால் 'அமித்ரகாதன்' என்று குறிக்கப்படுபவர் பிந்துசாரன். இதற்கு எதிரிகளை அழிப்பவன் என்று பொருள். 

அவர் மைசூர்வரை படையெடுத்து சென்று தக்காணத்தை கைப்பற்றினார். இரண்டு கடல்களுக்கும் இடையிலிருந்த பதினாறு நாடுகளை பிந்துசாரன் கைப்பற்றியதாக திபெத் அறிஞர் தாரநாதர் குறிப்பிட்டுள்ளார். 

சங்க காலத்து தமிழ் இலக்கியங்களும் மௌரியர்களின் தெற்கத்திய படையெடுப்பு பற்றி குறிப்பிடுகின்றன. எனவே, பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேரரசு மைசூர் வரை பரவியிருந்தது என்று கூறலாம். 

சிரியா நாட்டு அரசன் முதலாம் ஆன்டியோகஸ் தனது தூதுவராக டைமக்கஸ் என்பவரை பிந்துசாரன் அவைக்கு அனுப்பிவைத்தார். பிந்துசாரன், முதலாம் ஆன்டியோகசிடம், இனிப்பான மது, உலர்ந்த அத்திப்பழம், போன்றவற்றையும் ஒரு தத்துவ ஞானியையும் அனுப்பி வைக்குமாறு கோரினார். பொருட்களை அனுப்பிவைத்த சிரியா அரசன், கிரேக்க நாட்டு சட்டப்படி தத்துவஞானியை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்தான். 

அஜிவிகர்கள் என்ற சமயப் பிரிவினரை பிந்துசாரன் ஆதரித்தார். தனது மகன் அசோகரை உஜ்ஜயினியின் ஆளுநராக பிந்துசாரன் நியமித்தார்.

மகா அசோகர் (கி.மு. 273 - கி.மு. 232) 

  • அசோகர் என்றால் ’வலிகள் இல்லாத’ , ‘துன்பம் அற்ற’ என்பது பொருள்.
  • அசோகருக்கு தேவநாமப்பிரியன் என்ற பட்டப் பெயரும் உண்டு.

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார். தேவனாம்பிரியர் என்றால் ’கடவுளை விரும்புபவன்’ என்பது பொருள். பிரியதர்ஷன் என்றால் 'அனைவரையும் விரும்புபவன்' என்பது பொருள். அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது.

அசோகர் வாழ்க்கை வரலாறு

இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.

சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில், அசோகச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரையின் உருவங்களை கொண்டது அசோகத் தூண். அசோக தூணில் உள்ள சிங்கத்தின் முகம் இன்றுவரை இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளது.அதேபோல் அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் இந்தியாவின் தேசிய கொடியில் உள்ளது.முண்டக உபநிடத்திலிருந்து எடுக்கப்பட்ட, “வாய்மையே வெல்லும்” என்னும் பொருள்படும் 'ஸத்யமேவ ஜயதே' என்ற சமக்கிருதச் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய அரசின் இலச்சினையாகவும் உள்ளது.

அசோகரின் இளமைக்காலம் பற்றி சொற்ப செய்திகளே உள்ளன. தனது தந்தை பிந்துசாரன் ஆட்சிகாலத்தில் உஜ்ஜயினியின் ஆளுநராக அசோகர் பணியாற்றினார். தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார். அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிற்கும் (கி.மு. 273) முடிசூட்டிக் கொண்டதற்கும் (கி.மு. 269) இடையே நான்கு ஆண்டுகள் இடை வெளியிருந்தது. எனவே, பிந்துசாரனின் மறைவுக்குப்பின் அரியணைக்குப் போட்டி இருந்திருக்கும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. 

இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அசோகர் தனது மூத்த சகோதரர் சுசிமா உள்ளிட்ட தொண்ணூற்று ஒன்பது சகோதரர்களை கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகக் கூறுகின்றன. இளைய சகோதரன் திசா மட்டும் உயிரோடு விடப்பட்டான். ஆனால் திபெத் அறிஞர் தாரநாதர் அசோகர் தனது ஆறு சகோதரர்களை மட்டுமே கொன்றதாகக் கூறுகிறார். அசோகரது சகோதரர்கள் பலர் ஆட்சித் துறையில் பணியாற்றியதாக அவரது கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. எப்படியிருப்பினும், அசோகர் ஆட்சிக்கு வந்தபோது அரியணைக்குப் போட்டி இருந்தது தெளிவாகிறது. 



கலிங்கப்போர்

அசோகரது ஆட்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு கி.மு. 261 ஆம் ஆண்டு அவர் கலிங்கப்போரில் பெற்ற வெற்றியாகும். அப்போரின் காரணம் மற்றும் போக்கு பற்றி விவரங்கள் இல்லையென்றாலும் விளைவுகள் பற்றி அசோகர் தாம் வெளியிட்ட பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். "ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதைப்போல் பன்மடங்கு மக்கள் துன்புற்றனர்" போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். 

கலிங்கப்போரின் மற்றொரு முக்கிய விளைவு அசோகர் புத்த சமயத்தை தழுவியதாகும்புத்தபிக்கு உபகுப்தர் அவரை மனமாற்றம் செய்து புத்தசமயத்தை தழுவச் செய்தார். 

அசோகரும் புத்த சமயமும் 

சில அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் உடனடியாக புத்த சமயத்துக்கு மாறிவிடவில்லை என்றும் படிப்படியாகவே புத்த சமயத்தை தழுவினார் என்றும் கருதுகின்றனர். 

போருக்குப்பின் அவர் ஒரு சாக்கிய உபாசகரானார் (சாதாரண சீடர்). இரண்டரை ஆண்டுகள் கழித்து ஒரு புத்தபிக்கு (துறவி)வாக மாறினார். பின்னர் வேட்டையாடுதலை கைவிட்டார். புத்தகயாவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக தூதுக்குழுக்களை அனுப்பினார். 

தர்மத்தை விரைவாக பரப்பும் பொருட்டு தர்ம மகாமாத்திரர்கள் என்ற சிறப்பு அலுவலர்களை நியமித்தார். கி.மு. 241 ஆம் ஆண்டு புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள லும்பினி வனத்திற்கு பயணம் மேற்கொண்டார். மேலும், புத்தசமய புனித இடங்களான சாரநாத், ஸ்ராவஸ்தி, குசிநகரம் போன்ற இடங்களுக்கும் சென்றார். தனது மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரை ஆகியோரின் தலைமையில் சமயப் பரப்புக்குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் அங்கு போதிமரத்தின் கிளையை நட்டனர். புத்த சங்கத்தை வலிமைப்படுத்துவதற்காக அசோகர் கி.மு. 240 ஆம் ஆண்டு பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாட்டைக் கூட்டினார். மொக்கலிபுத்த திசா அம்மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

அசோகரது பேரரசு பரப்பு 

சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகியோர் எல்லைப்புறத்திலிருந்த தென்னிந்திய அரசுகள் என அசோகரது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே, இவை மௌரியப் பேரரசுக்கு வெளியே அமைந்திருந்தன என்பது தெளிவாகிறது. 

  • காஷ்மீர் மௌரியப் பேரரசுக்கு உட்பட்டது என ராஜதரங்கிணி குறிப்பிடுகிறது. நேபாளமும் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லையை ஏற்கனவே சந்திரகுப்த மௌரியர் நிர்ணயம் செய்திருந்தார். 
மௌரியப் பேரரசு -Mauryan Empire map

 அசோகரது தர்மம் 

அசோகர் புத்த சமயத்தை தழுவி, அதனைப் பரப்புவதற்கு முயற்சிகளை எடுத்தபோதிலும், அவரது தர்மக் கொள்கை மேலும் உயரிய கருத்தாகும். அது ஒரு வாழ்க்கை நெறி, ஒழுக்க விதி; அனைத்து மக்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய கோட்பாடுகள் என்று கூறலாம். அசோகரது தர்மக் கோட்பாடுகள் அவரது கல்வெட்டுக்களில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொதுவான சிறப்புக்கூறுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 

  • தாய், தந்தைக்குப் பணிவிடை செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப் போற்றுதல் மற்றும் உறவினரை நன்றாக நடத்துதல். 
  • திருவிழாக் கூட்டங்களையும் விலங்குகளை பலியிடுதலையும் தடை செய்தல்; பொருட் செலவுமிக்க மற்றும் பொருளற்ற சடங்குகளையும் வழக்கங்களையும் தவிர்த்தல். 
  • சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சிமுறையை செம்மையாக திறம்பட சீரமைத்தல்; மக்களுடன் நேரடித் தொடர்பை எப்போதும் வைத்திருக்கும் பொருட்டு தர்ம யாத்திரைகளை மேற்கொள்ளுதல். 
  • பணியாளர்களை எஜமானர்களும், கைதிகளை அரசாங்க அதிகாரிகளும் மனித நேயத்துடன் நடத்துதல். 
  • விலங்குகள் மீது கருணைகாட்டி அஹிம்சையைக் கடைப்பிடித்தல்; உறவினரை மதித்தல்; பிராமணர்களுக்கு கொடையளித்தல். 
  • அனைத்து சமயப் பிரிவுகளுக்கிடையே சகிப்புத் தன்மையை வலியுறுத்தல். 
  • போர் செய்வதை தவிர்த்து தர்மத்தின் வழி வெற்றி கொள்ளுதல். 

அஹிம்சை கோட்பாடும், அசோகரது தர்ம கருத்துக்களும் புத்தரின் போதனைகளை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனால் அசோகர் தனது தர்மக்கோட்பாடுகளை புத்தரின் போதனைகளுடன் தொடர்புப்படுத்தவில்லை. புத்த சமயம் அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகும். அவர் கூறிய தர்மம் ஒரு பொதுவான ஒழுக்கநெறியாகும். சமூகத்தின் அனைத்து தரப்பிற்கும் தனது தர்மக்கோட்பாடுகள் சென்றடைய வேண்டும் என அசோகர் விரும்பினார். 

அசோகர் பற்றிய ஒரு மதிப்பீடு : அசோகர் ''அரசர்களிலேயே தலைசிறந்தவராக" விளங்கினார். மகா அலெக்சாந்தர், ஜீலியஸ் சீசர் போன்ற உலகின் தலைசிறந்த பேரரசர்களையும் அசோகர் விஞ்சி நின்றார். எச்.ஜி. வெல்ஸ் என்பவரது கூற்றுப்படி: "வரலாற்றின் பட்டியலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான அரசர்களில் அசோகரின் பெயர் மட்டும் தன்னந்தனி நட்சத்திரமாக ஒளிவீசுகிறது." 

தமது கோட்பாடுகளுக்கு உண்மையானவராகத் திகழ்ந்து அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகினார். அவர் கனவு காண்பவரல்ல; மாறாக ஒரு நடைமுறை மேதை. அவரது தர்மக் கொள்கை உலகம் அனைத்திற்கும் பொதுவானது. மனித குலமனைத்திற்கும் இன்றைக்கும் பொருந்தவல்லது. கருணைமிக்க ஆட்சிக்கும், போரில் வெற்றி பெற்ற பிறகும் போரைத் துறந்து அமைதிக்கொள்கையைக் கடைப்பிடித்தமைக்கும் அசோகர் வரலாற்றில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று கூறலாம். அவரது கோட்பாட்டின் மையக்கருத்து மனித குலத்தின் நலனையே வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. 

பிற்கால மௌரியர்கள் 

கி.மு. 232ம் ஆண்டு அசோகர் மறைந்தபின் மௌரியப் பேரரசு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. 

  • மேற்குப் பகுதியில் அசோகரின் புதல்வர் குணாளன் ஆட்சிபுரிந்தார். 
  • கிழக்குப் பகுதியில் அசோகரது பேரன்களில் ஒருவரான தசரதன் அரசராக இருந்தார். 

பாக்டிரிய படையெடுப்புகளின் விளைவாக பேரரசின் மேற்குப் பகுதி சீர்குலைந்தது. தசரதனின் புதல்வர் சாம்பிரதி என்பவரது ஆட்சியில் கிழக்குப் பகுதி மட்டும் கட்டுக்கோப்பாக இருந்தது. 

மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்ரதன் என்பவரை அவரது படைத்தளபதி புஷ்யமித்திர சுங்கன் படுகொலை செய்தார்.  

மௌரியர் ஆட்சிமுறை - Mauryan rule

மௌரியப் பேரரசு 4 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

  • வடமேற்கு மாநிலம் தக்ஷசீலத்தைத் தலைமையிடமாகக் கொண்டது 
  • கீழ்த்திசை மாநிலமாகிய கலிங்கம் கோசலியைத் தலைமையிடமாகக் கொண்டது . 
  • மேற்றிசை மாநிலமாகிய குஜாராத் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டது. 
  • தென் மாநிலமாகிய ஐதராபாத் மற்றும் மைசூர் சுவர்ணகிரியைத் தலைநகர தொண்டது. 

இவற்றை அரச குடும்பத்தைச் சார்ந்தோர் இராஜப்பிரதிநிதியாக இருந்து ஆட்சி புரிந்தனர். 

  • மையப் பகுதியாகிய பீகார், உத்திரப்பிரதேசம் மன்னரின் நேரடி ஆட்சியில் இருந்தது.  

மன்னர் நன்மனம் கொண்ட சர்வாதிகாரியாக இருந்தார். அவர் அதிகாரத்தை எந்த அரசியல் சட்டமும் தட்டிக் கேட்க முடியாது. எனினும், தர்ம சாஸ்திரப்படியே நாட்டை ஆண்டார். தேசத் துரோகிகளை அறிய ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒற்றர் படை இருந்தது. பொது மகளிர் பெரும்பாலும் அரசாங்க ஒற்றர்களாக இருந்தனர்.

மத்திய அரசாங்கம்

மௌரியர் ஆட்சி தொடங்கி இந்தியாவில் முடியாட்சி முறை பெரும் வெற்றிபெற்றது. மௌரியருக்கு முந்தைய கால இந்தியாவிலிருந்த குடியரசு மற்றும் சிறுகுழு ஆட்சிமுறைகள் சீர்குலைந்தன. பண்டைய இந்தியாவின் முதன்மை அரசியல் கோட்பாட்டாளராக விளங்கிய கௌடில்யர் முடியாட்சி முறையை ஆதரித்தபோதிலும், வரம்பற்ற முடியாட்சியை அவர் விரும்பவில்லை. 

அரசன் தனது நிர்வாகத்தை செம்மையாக நடத்துவதற்கு அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

  • எனவே, அரசனது ஆட்சிக்கு உதவியாக மந்திரி பரிஷத் என்ற அமைச்சரவை செயல்பட்டது. 
  • அதில் புரோகிதர், மகாமந்திரி, சேனாபதி, யுவராஜன் ஆகியோர் இருந்தனர். 
  • அன்றாட அலுவல்களை நிறைவேற்ற அமாத்தியர்கள் என்றழைக்கப்பட்ட சிவில் பணியாளர்கள் இருந்தனர். இவர்களை தற்கால இந்தியாவில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளோடு ஒப்பிடலாம். அமாத்தியர்களை தேர்வு செய்யும் முறை குறித்து கௌடில்யர் விவரமாகக் கூறியுள்ளார். 
  • தர்மக் கோட்பாடுகளைப் பரப்புவதற்காக அசோகர் தர்மமகாமாத்திரர்களை நியமித்தார். 
  • மௌரியர் ஆட்சியில் நன்கு சீரமைக்கப்பட்ட ஆட்சித்துறை செயல்பட்டது. 

 வருவாய் நிர்வாகம் 

பேரரசின் அனைத்துவகை வருவாய்களையும்  வசூலிக்கும் துறையான வருவாய்த்துறையின் தலைவர் சம்ஹர்த்தர் என்று அழைக்கப்பட்டார். 

  • நிலவரி, நீர்ப்பாசனவரி, சுங்கவரி, வணிகவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி, புல்வெளிக்கான வரி, தொழில் வரி, நீதிமன்றங்களில் விதிக்கப்படும் தண்டனைக் கீடான கட்டணம் என பல்வகை வருவாய் அரசுக்குக் கிடைத்தது. 
  • பொதுவாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. 
  • அரசரது அவை மற்றும் அவரது குடும்பச்செலவுகள், ராணுவம், அரசுப் பணியாளர்கள், பொதுப் பணிகள், ஏழைகளுக்கு நிவாரணம், சமயம் சார்ந்த செலவுகள் என்பன அரசாங்க செலவினங்களில் குறிப்பிடத்தக்கவை.

ராணுவம் 

நன்கு சீரமைக்கப்பட்டிருந்த மௌரிய ராணுவத்துக்கு தலைவராக சேனாபதி இருந்தார். வீரர்களுக்கு ஊதியம் பணமாக வழங்கப்பட்டது. ராணுவத்தின் பல்வேறு நிலையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கான ஊதிய விகிதம் குறித்து கௌடில்யர் கூறுகிறார். 

கிரேக்க நாட்டு அறிஞர் பிளினி என்பவரது கூற்றுப்படி, 

  • மெளரியரது படையில் ஆறு லட்சம் காலாட்படை வீரர்களும், 
  • முப்பதாயிரம் குதிரைப்படை வீரர்களும், 
  • ஒன்பதாயிரம் யானைகளும், 
  • எட்டாயிரம் தேர்களும் இருந்தன என்பது தெரிகிறது. 

இந்த நான்கு பிரிவுகளைத் தவிர, 

  • கடற்படை மற்றும் போக்குவரத்து பிரிவுகளும் ராணுவத்தில் இருந்தன. 

ஒவ்வொரு பிரிவும் அத்யட்சகர்கள் என்ற மேற்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் அடங்கிய படைவாரியம் படைநிர்வாகத்தை மேற்கொண்டதாக மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார். 

வாணிகம் மற்றும் தொழில்துறை 

இத்துறையின் அலுவலர்கள் அத்யட்சகர்கள் எனப்பட்டனர். பொருட்களின் சில்லரை மற்றும் மொத்த விலைகளைக் கட்டுப்படுத்துவதும். தொடர்ந்து பொருட்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதும் இந்த துறையின் பொறுப்பாகும். எடைகள், அளவுகள் ஆகியன முறைப்படுத்தப்பட்டன. சுங்க வரிகளை விதிப்பதும் அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்துவதும் இதன் ஏனைய பணிகளாகும். 

நீதி மற்றும் காவல் துறை நிர்வாகம்

உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டதை கௌடில்யர் விவரித்துள்ளார். தலைநகரிலிருந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தர்மாதிகாரி என்று அழைக்கப்பட்டார். மாகாணத் தலைநகரங்களிலும், மாவட்டங்களிலும் அமாத்தியர்கள் தலைமையிலான துணைநீதி மன்றங்கள் இருந்தன. அபராதம் விதித்தல், சிறைவாசம், உறுப்புகளை சிதைத்தல், மரண தண்டனை போன்ற பல்வேறு தண்டனை முறைகள் வழக்கிலிருந்தன. உண்மையை வரவழைக்க சித்ரவதை செய்யும் வழக்கமும் இருந்தது. முக்கிய மையங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறைகள், சிறை அதிகாரிகள் பற்றி கௌடில்யரது நூலும் அசோகரது கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன. முறைகேடாக சிறைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அசோகர் தர்மமகாமாத்திரர்களுக்கு ஆணையிட்டார். தண்டனைகள் குறைக்கப்பட்டது பற்றியும் அசோகரது கல்வெட்டுகள் கூறுகின்றன. 

நிதி நிர்வாகம்

நிலவரி, வருவாயில் 1/ 6 பங்கு வசூலிக்கப்பட்டது. சுங்க வரி, தண்ட வரி, உரிம வரி,  தொழில் வரி, மதுபான வரி, சுரங்கம், காடுகள், அரசு சொத்துக்களிலிருந்து வருமானம், அரண்மனை, படை, பஞ்ச நிவாரணம், நீர்ப்பாசனம் முக்கிய செலவினங்களாக இருந்தன. சந்திரகுப்தா் குஜராத் மாவட்டத்தில் கிர்னார் எனும் இடத்தில் சுதிர்சன ஏரியை வெட்டினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 

மௌரியர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தவறாமல் பின்பற்றப்பட்டது. மக்களின் எண்ணிக்கை, அவர்களது ஜாதி, தொழில் போன்ற விவரங்களை கிராம அதிகாரிகள் சேகரித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் இருந்த பிராணிகளும் கணக்கில் கொண்டு வரப்பட்டன. நகரங்களில் உள்நாட்டு, அயல்நாட்டு மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் ஒற்றர்கள் தரும் விவரங்களோடு சரிபார்க்கப்பட்டன. மௌரியர் ஆட்சி முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு நிரந்தர நிறுவனமாக இருந்ததாகத் தெரிகிறது.

  • மௌரிய நிர்வாகத்தின் முக்கிய அம்சம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. இப்போது உள்ளதுபோல் அது ஒரு பத்தாண்டு விஷயமாக இல்லை. ஆண்டுதோறும் எடுக்கப்படும் நிரந்தரப்பணியாக இருந்தது.

மாகாண, உள்ளாட்சி நிர்வாகம் 

தட்சசீலம், உஜ்ஜயினி, சுவர்ணகிரி, கலிங்கம் என்ற தலைநகரங்களைக் கொண்ட நான்கு மாகாணங்களாக மௌரியப் பேரரசு பிரிக்கப்பட்டிருந்தது. மாகாண ஆளுநர்கள் பெரும்பாலும் அரச குடும்பத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கை பராமரித்தல், வருவாய் வசூலிப்பது போன்றவை அவர்களது முக்கிய கடமைகளாகும். 

ராஜீகர்கள் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் மாவட்ட நிர்வாகம் இருந்தது. அவர்களது நிலை மற்றும் அதிகாரம் தற்கால மாவட்ட ஆட்சித் தலைவர்களையே ஒத்திருந்தது எனலாம். அவர்களுக்கு உதவியாக யுக்தர்கள் என்ற துணை அதிகாரிகள் இருந்தனர். கிராமணி என்ற அதிகாரியின் கீழ் கிராம நிர்வாகம் இருந்தது. பத்து அல்லது பதினைந்து கிராமங்களுக்கு உயர் அதிகாரியாக கோபன் என்ற அதிகாரி செயல்பட்டார். நகர நிர்வாகம் குறித்து கௌடில்யரும், மெகஸ்தனிசும் விவரமாகக் குறிப்பிட்டுள்ளனர். நகரிகா என்ற நகர மேற்பார்வையாளரின் பணி பற்றி அர்த்த சாஸ்திரத்தில் ஒரு முழு அத்தியாயமே உள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதே அவரது தலையாய பணியாகும். 

மௌரிய ஆட்சிமுறையின் மிகச் சிறந்த பகுதி நகராட்சி நிர்வாகம் ஆகும். நகரத்தைச் சுற்றி மதிற்சுவரும் நுழைவு வாயில்களும் இருந்தன. பாடலிபுத்திரம் 64 நுழைவு வாயில்களை உடைய மரத்தாலான மதிலால் சூழப்பட்டது. இதில் 570 கோபுரங்கள் இருந்தன. சுற்றிலும் அகழி இருந்தது. நகர மன்றத்தால் நகராட்சி நிர்வகிக்கப்பட்டது. 

தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் பாடலிபுத்திர நகர நிர்வாகத்தை நடத்தியதாக மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார். 

இக் குழுக்களின் பணிகள் வருமாறு : 

  • தொழிற்சாலைகள் - ஒரு குழு கைவினைஞர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் சம்பளத்தை நிர்ணயித்தது
  • அயல்நாட்டவர்கள் - மற்றொன்று அயல் நாட்டினரைக் கவனித்தது
  • பிறப்பு, இறப்பு பதிவு - மூன்றாவது குழு பிறப்பு இறப்பைப் பதிவு செய்தது
  • வாணிகம் - நான்காவது குழு சில்லறை வியாபாரம், எடைகள், அளவுகளைக் கண்காணித்தது
  • பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை - ஐந்தாவது குழு உற்பத்தியையும், விற்பனையையும் கண்காணித்தது
  • விற்பனை வரி வசூல் - ஆறாவது குழு வரி வசூலிப்பை முக்கியமாக விற்பனையான பண்டங்களின் மதிப்பில் 1/10 பாகத்தை வரியாக வசூலித்தது. எனவே விற்பனை வரி இந்தியாவில் கி.மு. 4-ஆம் நூற்றாண்டிலே இருந்தது அறியப்படும்.

 மௌரியர் கால கலைகள், கட்டிடக்கலை - Mauryan Art and Architecture

அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் அனைத்தும் மரங்களால் ஆனதால் பெரும்பாலும் அவை அழிந்துவிட்டன. 

அசோகர் காலத்தில்தான் பாறைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலும்கூட ஒரு சில மட்டும் எஞ்சியுள்ளன. அவரது அரண்மனை, மடாலயங்கள் மற்றும் ஸ்தூபிகள் பல மறைந்துவிட்டன. 

  • சாஞ்சி ஸ்தூபி மட்டுமே எஞ்சியுள்ளது. 

மௌரியர் காலத்திய எஞ்சியுள்ள கலைச்சின்னங்களை பின்வரும் தலைப்புகளில் காணலாம். 

தூண்கள் - Mauryan Pillar

அசோகரால் நிறுவப்பட்ட கற்றூண்கள் மௌரியர் காலக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகும். டெல்லி, அகமதாபாத், ரும்மிந்தை, சாஞ்சி, சாரநாத் போன்ற இடங்களில் பொறிப்புகளுடன் கூடிய அசோகர் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன. தூண்களின் உச்சியில் சிங்கம், யானை, எருது போன்ற விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

  • சாரநாத் கற்றூணில் காணப்படும் நான்கு சிங்க உருவங்கள் மிகவும் கலை நயமிக்கவை. 

இந்திய அரசாங்கம் இந்த சின்னத்தை ஒரு சில மாறுதல்கள் செய்து அரச முத்திரையாக ஏற்றுக் கொண்டுள்ளது.


மௌரியப் பேரரசுமௌரியப் பேரரசுமௌரியப் பேரரசு

 ஸ்தூபிகள் 

அசோகர் தனது பேரரசு முழுவதிலும் பல ஸ்தூபிகளை எழுப்பியிருந்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை அயலவர் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டுவிட்டன. ஒருசில ஸ்தூபிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. 

  • மிகவும் பிரம்மாண்டமான தோற்றப் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சாஞ்சி ஸ்தூபி அசோகரது ஸ்தூபிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். முதலில் அது செங்கற்களால் உருவாக்கப்பட்டு, அசோகரது காலத்திற்குப்பின் விரிவுபடுத்தப்பட்டது. 

குகைகள் 

அசோகர் மற்றும் அவரது புதல்வர் தசரதன் ஆகியோரால் அஜீவிகர்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட குகைகள்  மௌரியர்களின் முக்கிய பாரம்பரிய சின்னங்களாகத் திகழ்கின்றன. அவற்றின் உட்புறச்சுவர்கள் கண்ணாடிபோல மெருகூட்டப்பட்டுள்ளன. துறவிகள் தங்கி வாழும் வகையில் அவை அமைக்கப்பட்டிருந்தன. 

  • புத்த கயாவுக்கு அருகிலுள்ள பாராபார் குன்றுகளிலுள்ள குகைகள் மௌரியர் கட்டிடக் கலைக்கு உன்னத சான்றுகளாகும். 

மௌரியர் வீழ்ச்சிக்கான காரணங்கள் 

மௌரியர் வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி அறிஞர்களிடையே விரிவான விவாதம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அசோகரது கொள்கைகளும் அவருக்கும்பின் வந்த வலிமையற்ற பின்தோன்றல்களும் மௌரியர் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்ற கருத்து பழமையான கருத்தாகும். மற்றொரு கருத்து, பரந்த பேரரசுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசியல், பொருளாதார நிறுவனங்கள் வளர்ச்சியடையவில்லை என்பதாகும். அசோகரது புத்தசமய ஆதரவுக் கொள்கைகளினால் வெறுப்புற்ற பிராமணர்கள் புஷ்யமித்திரசுங்கன் தலைமையில் ஒரு புரட்சியை நடத்தினார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அசோகர் ஒருபோதும் பிராமணர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. அசோகரது அகிம்சைக் கொள்கை படைவீரர்களின் போரிடும் உணர்வை பாதித்தது என்பது அசோகர்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டாகும். ஆனால், அசோகர் அமைதிக்கொள்கையைப் பின்பற்றினாரே தவிர பேரரசின் மீதுள்ள தமது கட்டுப்பாட்டை எப்போதும் தளர்த்தியதில்லை. எனவே, மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு அசோகரை குற்றம் சுமத்துவது பொருத்தமற்றதாகும். அசோகரை ஒரு கொள்கைவாதி என்பதைவிட நடைமுறைவாதி என்றே கூறுலாம். திறமையற்ற பின்தோன்றல்கள், பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டது, அசோகரது காலத்துக்குப் பின்னர் நேர்ந்த ஆட்சித்துறை முறைகேடுகள் போன்ற பல்வேறு காரணங்களாலேயே மௌரியப் பேரரசு சிதைந்தது. இவையனைத்தும் ஒன்று சேர்ந்துதான் மௌரியப் பேரரசின் சீர்குலைவை விரைவுபடுத்தின. 

மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் பிருஹத்ரகன்

இந்நிலையில் கடைசி மௌரிய மன்னன் பிருஹத்ரகனை கி.மு. 185-இல் ராணுவ அணிவகுப்பின்போது புஸ்யமித்ரசுங்கன் கொலை செய்தான். இத்துடன் மௌரியர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

  • இறுதியில் மௌரியரை விரட்டிவிட்டு புஷ்யமித்ர சுங்கன் சுங்கவம்ச ஆட்சியை நிறுவினான்.

மெளரியர் வரலாற்றுக்கான இலக்கிய சான்றுகள் - Literary Evidence for the History of Mauryas

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்

வடமொழி நூலான அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் கௌடில்யர். இவர் சந்திரகுப்த மௌரியரின் சம காலத்தவர். 

  • கௌடில்யர் 'இந்திய மாக்கியவல்லி' என்றும் அழைக்கப்படுகிறார். 
  • கௌடில்யரை சாணக்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைப்பர். 

1904 ஆம் ஆண்டுதான் ஆர். சாமாசாஸ்திரி என்பவரால் அர்த்த சாஸ்திரத்தின் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. 

அர்த்த சாஸ்திரம் 15 புத்தகங்களையும் 180 அத்தியாயங்களையும் கொண்டது. இதனை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 

  • முதல் பகுதி அரசன், அரசவை, அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் பற்றிக் கூறுகிறது. 
  • இரண்டாம் பகுதி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களையும், 
  • மூன்றாம் பகுதி அரசியல் வெல்திறன், போர் ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது. 

மௌரியர் வரலாற்றுக்கு முக்கிய இலக்கிய சான்றாக இந்த நூல் திகழ்கிறது.  

விசாகதத்தரின் முத்ராராட்சசம் 

விசாகதத்தரால் இயற்றப்பட்ட முத்ராராட்சசம் ஒரு வடமொழி நாடக நூலாகும். குப்தர் காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டாலும், கௌடில்யரின் துணையோடு சந்திரகுப்தன் நந்தர்களை முறியடித்து மௌரிய ஆட்சியை எப்படி நிறுவினான் என்பதை இது விவரிக்கிறது. மௌரியர்கால சமூக, பொருளாதார நிலைமைகளையும் எடுத்துக் கூறுகிறது. 

மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா 

சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் மெகஸ்தனிஸ். அவர் எழுதிய நூலான இண்டிகா முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும், மௌரியர் ஆட்சிமுறை, குறிப்பாக பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை இந்த நூல் தருகிறது. 

மௌரியர்கால சமூகம் குறித்த அவரது வர்ணனை குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் ஒரு சில நம்ப இயலாத தகவல்களை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கணக்கில் கொள்ள வேண்டும். 

பிற இலக்கியங்கள் 

மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, புராணங்களும் ஜாதகக் கதைகள் போன்ற புத்த சமய இலக்கியங்களும் மௌரியர் வரலாறு குறித்த தகவல்களைத் தருகின்றன. 

  • இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் இரண்டும் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகின்றன. 

தொல்லியல் சான்றுகள் 

அசோகரது ஆணைகள் 

1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன. பாலி மொழியிலும், ஒருசில இடங்களில் பிராகிருத மொழியிலும் அவை எழுதப்பட்டுள்ளன. பிரம்மி வரி வடிவத்தில் அவை அமைந்துள்ளன. 

வடமேற்கு இந்தியாவிலுள்ள அசோகரது கல்வெட்டுக்கள் கரோஷ்தி வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம் பதினான்கு பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவரால் புதியதாக கைப்பற்றப்பட்ட பகுதியில் இரண்டு கலிங்கக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. 

முக்கிய நகரங்களில் பெரிய தூண் கல்வெட்டுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, சிறிய பாறை மற்றும் தூண் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அசோகரது ஆணைகளான இவையனைத்தும் அசோகரின் தர்மம் பற்றியும், தனது அதிகாரிகளுக்கு அசோகர் பிறப்பித்த ஆணைகள் பற்றியும் கூறுகின்றன. 

பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு அசோகரது கலிங்கப் போரைப்பற்றி குறிப்பிடுகிறது. தனது பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட முயற்சிகளை ஏழாவது தூண் கல்வெட்டு விவரிக்கிறது. 

நினைவுகூர்க

மௌரியப் பேரரசு நிறுவப்பட்டதிலிருந்து இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. முதன்முறையாக, இந்தியாவில் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. வரலாற்றுக்கான சான்றுகளும் காலக்கணிப்பும் துல்லியமாக இருப்பதால் வரலாறு எழுதுவதிலும் தெளிவு பிறந்தது. ஏராளமான உள்நாட்டு, அயல்நாட்டு இலக்கிய ஆதாரங்களோடு, கல்வெட்டு தகவல்களும் இக்காலத்திய வரலாற்றை எழுதுவதற்கு பயன்படுகின்றன. எனவே, அசோகரது கல்வெட்டுக்கள் அசோகரைப் பற்றியும், மௌரியப் பேரரசு குறித்தும் அறிந்து கொள்ள முக்கிய சான்றுகளாகப் பயன்படுகின்றன.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad