நாம், தமிழில் திருத்தமாகப் பேசுவதற்கும் படிப்பதற்கும் பிழையின்றி எழுதுவதற்கும் அதன் இலக்கணத்தை நன்கு கற்றுக்கொள்ளல் வேண்டும்.ஒரு மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் துணை செய்வது இலக்கணம். ஆழ்ந்த இலக்கண அறிவு பெற்றிருந்தால்தான், இலக்கியத்தின் பல நுட்பமான கருத்துகளைக் கூர்ந்து, உணர்ந்து சுவைக்க முடியும். ஆகவே, இலக்கணம் என்பது, ஒரு மொழியின் கண்ணாகும்.
தமிழ் இலக்கண நூல்கள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம்பாடத்தலைப்புகள்(toc)
தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பு
ஒரு மொழியின் இயல்பு, மரபு, அம்மொழி வழங்கும் முறை முதலானவற்றை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். உலகில் வாழும் எந்த மாந்தரும் தம் தாய் மொழியைத் தாய் தந்தையரிடமிருந்தும் சுற்றி வாழும் அம்மொழி பேசும் மக்களிடமிருந்தும் தம் குழந்தைப் பருவம் முதலே இயல்பாகக் கற்றுக கொள்கிறார். ஆனால் அம்மாந்தருக்குத் தாம் பேசும் மொழியின் இலக்கணம் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும்,மொழியின் இலக்கணத்தை அறியாத ஒருவரை விட இலக்கணம் அறிந்த ஒருவர் மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்; தம் மொழித் திறன்களை மேலும் வளப்படுத்திக் கொள்ளமுடியும். அதற்கான மொழிக் கல்வியே இலக்கணம், இலக்கணம் என்பது மொழியைப் பற்றிய அறிவியல் ஆகும்.
இலக்கணத்தின் இன்றியமையாமை
இலக்கணம், பழங்காலந்தொட்டே நம் தமிழ்மொழியின் அமைப்பையும் இலக்கிய மரபையும் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, காலந்தோறும் மொழியில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கவும் அவற்றை எதிர்கொள்ளவும் செய்வதில் இலக்கணத்தின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.
இலக்கண நூல்களின் தோற்றம்
இலக்கியங்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியபோது, மொழியின் பொதுத்தன்மைகளைத் தொகுத்துப் பிறருக்கு உணர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இலக்கண நூல் எழுத விழைந்தவர்கள், தாம் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து, வகைப்படுத்திக்கூற முயற்சி மேற்கொண்டனர். இலக்கணத் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
தொல்காப்பியப் பாயிரத்தில், 'முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி' எனக் கூறப்பட்டுள்ளமையும்,நூலினுள் "என்ப, என்மனார் புலவர், மொழிப,மொழிமனார்" எனக் குறிப்பிட்டுள்ளமையும் தொல்காப்பியத்திற்குமுன் இலக்கண நூல்கள் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன. எனவே, பல நூல்கள் எழுதப்பட்ட பின்னர், நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் எழுதப்பட்டன.
இலக்கணத் தோற்றம், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், வழக்குமொழியின் வாழ்வையும் வளத்தையும் போற்றுவதாகவும் அமைந்தது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், "வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித் தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது" என எடுத்துரைக்கின்றது.
இலக்கியங்கள் தோன்றிய பின்பே இலக்கணங்கள் தோன்றுகின்றன என்பதனை உணர்த்தும்வகையில்,
"எள்ளினின் றெண்ணெய் எடுபடுவது போல;
இலக்கியத் தினின்றும் எடுபடுவது
இலக்கணம்"
என்னும் பழைய வழக்குத்தொடரும் உள்ளது.
(* Amazon Affiliate pay for good purchase )
Buy the Best selling TNPSC books on Amazon:
Tnpsc Group 4 and VAO books : https://amzn.to/3P7eDAa
Tnpsc group 4 and VAO book 2023 tamil medium : https://amzn.to/460jCcA
tnpsc group 2 books : https://amzn.to/3r1kSh5
Tnpsc group 2 books tamil : https://amzn.to/48cgQTu
Tnpsc current affairs book 2023 : https://amzn.to/3Pz6INC
Buy Kitchen Appliances | Kitchen & Housewares : https://amzn.to/3Rjqxto
Buy Grocery : https://amzn.to/3PzP8J2
Buy Books : https://amzn.to/45MC48T
Buy Mobile Phone: https://amzn.to/3ZglcVF
Buy Amazon Fresh : https://amzn.to/3Lki4Cp
Amazon Bestsellers : https://amzn.to/44NiEzm
இலக்கண நூல்களின் வளர்ச்சி
- தமிழில் இலக்கணநூல்கள் செய்யுள் வடிவத்தையும் உரைநடை வடிவத்தையும் கொண்டுள்ளன.
- பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், செய்யுள் வடிவில் இயற்றப்பெற்ற நூல். இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகின்றது.
தொல்காப்பியத்தைப் பின்பற்றிப் பல இலக்கண நூல்கள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளன. அவை, தொல்காப்பியத்தில் அமைந்துள்ள இயல்களை அடியொற்றித் தனித்தனிப் பகுதி இலக்கணநூலாகத் தோன்றியுள்ளன.இவற்றுள் சில இலக்கண நூல்கள், தொல்காப்பிய மரபை மட்டுமல்லாமல், வடமொழி இலக்கண மரபுகளைத் தமிழுக்குள் கொண்டுவரவும் முயன்றுள்ளன.
தமிழ் இலக்கண நூல்கள் யாவை?
தமிழ் இலக்கணம் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் முதலானவையாகும்.
இலக்கண நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்
- அகத்தியம் - அகத்தியர்
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- யாப்பருங்காலம் - அமிதசாகரர்
- வீரசோழியம் - புத்தமித்திரர்
- நன்னூல்- பவணந்தி முனிவர்
- நேமி நாதம் - குணவீர பண்டிதர்
- தண்டியலங்காரம் - தண்டி
- இலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்
- இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
- புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்
- மாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
எழுத்து, சொல் இலக்கண நூல்கள்
தொல்காப்பிய எழுத்து , சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாகக்கொண்டு, நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.
சொல் இலக்கண நூல்கள்
சொல்லதிகாரம் மட்டும் அமைந்த இலக்கண நூல்கள் பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து என்பனவாகும்.
பொருள் இலக்கண நூல்கள்
பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இயல்களுள் அகத்திணையியல் சார்ந்து இறையனாரகப்பொருள், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின.
தொல்காப்பியப் புறத்திணையியல் சார்ந்து, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.
செய்யுளியல் - யாப்பிலக்கணம் நூல்கள்
செய்யுளியல் சார்ந்து யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலிய யாப்பிலக்கண நூல்களும்,
உவமவியல்- அணியிலக்கணம் நூல்கள்
உவமவியல் சார்ந்து தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய
அணியிலக்கண
நூல்களும் எழுதப்பட்டன.
உரைநடை வடிவில் இலக்கண நூல்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர், உரைநடை வடிவில் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இலக்கணச் சுருக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை முதலான நூல்கள் உரைவடிவில் அமைந்தவை. கால்டுவெல்லின் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல், தமிழின் தனிச்சிறப்புகளைத் தமிழறியாத மேனாட்டினருக்கும் எடுத்துக்காட்டி. விளக்கியுள்ளது.
தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
தொல்காப்பியம்
- தொல்காப்பியம், ஐந்திலக்கணம் கொண்டு விளங்குகிறது.
- எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்கள் உள்ளன.
- ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல், எழுத்துகளாலும் சொற்களாலும் உருவாக்கப்படும் செய்யுளுக்கும் அதில் இடம்பெறும் பொருளுக்கும் இலக்கண வரையறைகளைத் தந்துள்ளது.
தொல்காப்பியம் | |||
---|---|---|---|
வ.எண் |
எழுத்ததிகாரம் | சொல்லதிகாரம் | பொருளதிகாரம் |
1 | நூல் மரபு | கிளவியாக்கம் | அகத்திணையியல் |
2 | மொழி மரபு | வேற்றுமையியல் | புறத்திணையியல் |
3 | பிறப்பியல் | வேற்றுமை மயங்கியல் | களவியல் |
4 | புணரியல் | விளிமரபு | கற்பியல் |
5 | தொகைமரபு | பெயரியல் | பொருளியல் |
6 | உருபியல் | வினையியல் | மெய்ப்பாட்டியல் |
7 | உயிர்மயங்கியல் | இடையியல் | உவமவியல் |
8 | புள்ளி மயங்கியல் | உரியியல் | செய்யுளியல் |
9 | குற்றியலுகரப்புணரியல் | எச்சவியல் | மரபியல் |
தொல்காப்பியப் பொருளதிகாரம்
பழந்தமிழரின் நாகரிகத்தையும் அவர்தம் வாழ்வியல் நடைமுறைகளையும் எடுத்தியம்புகிறது. இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களிலிருந்து இயற்கை, சுற்றுப்புறச்சூழல், அக்கால மக்களின் அகவுணர்வுகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடிகிறது.
- போர் நெறிகள் குறித்த செய்திகளைப் புறப்பொருள் பற்றிய இயலிலும்,
- அன்பின் ஐந்திணை அவற்றின் முதல், கரு, உரிப்பொருள் ஆகியவற்றை அகப்பொருள் பற்றிய இயல்களிலும் அறியமுடிகிறது.
தொல்காப்பியப் உரை
இந்நூலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலானோர் உரை எழுதியுள்ளனர்.
இறையனார் அகப்பொருள்
இறையனார் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இந்நூல், அகப்பொருள் சார்ந்தது;
- களவியல் என்ற பெயராலும் வழங்கப்படுகிறது.
- அகம் என்பதனைக் களவு, கற்பு என்று இரண்டாகப் பிரிக்கிறது.
இந்நூலுக்கான மூலம், நமக்குக் கிடைக்கவில்லை; எனினும், நூலுக்குரிய முழுமையான உரைப்பகுதி கிடைத்துள்ளது.
இறையனாரகப் பொருள் உரையே தமிழில் தோன்றிய முதல் உரை நூல் என்பர்.
புறப்பொருள் வெண்பாமாலை
- புறப்பொருளைப்பற்றி வெண்பா யாப்பில் கூறும் நூல் புறப்பொருள் வெண்பா மாலை.
- இது புறப்பொருளுக்குரிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
- இதனை இயற்றியவர் ஐயனாரிதனார்.
- போர் பற்றிய செய்திகளை இந்நூலில் அறியமுடிகிறது.
தொல்காப்பியம், புறத்திணைகளின் எண்ணிக்கையை 7 எனக் குறிப்பிட புறப்பொருள் வெண்பாமாலை 12 எனக் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையிலேயே புறநானூற்றுக்குத் திணை, துறை வருக்கப்பட்டுள்ளன;
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய பன்னிரு திணைகளின் இலக்கணத்தைத் துறைவகையோடு புறப்பொருள் வெண்பாமாலை விளக்குகின்றது.
திணைகள் | பொருள் விளக்கம் |
---|---|
வெட்சி | பகைவரது ஆநிரை கவர்தல் |
கரந்தை | பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல் |
வஞ்சி | பகை நாட்டின் மீது போர் தொடுத்தல் |
காஞ்சி | பகைவரை எதிர்த்துப் போரிடுதல் |
நொச்சி | பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல் |
உழிஞை | பகைவர் மதிலைச் சுற்றி வளைத்தல் |
தும்பை | பகை மன்னர் இருவரும் போரிடுதல் |
வாகை | போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல் |
பாடாண்திணை | ஒருவனுடைய கல்வி, புகழ், வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல் |
பொதுவியல் | வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல் |
கைக்கிளை | ஒருதலைக் காமம்.இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும். |
பெருந்திணை | பொருந்தாக் காமம்.இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும். |
யாப்பருங்கலக்காரிகை
யாப்பிலக்கணம் கற்பாருக்கு உறுதுணையாக அமைவது யாப்பருங்கலக் காரிகை.
- காரிகை என்பதற்குப் பெண் எனவும் பொருள் உண்டு.
- இந்நூலை அமிர்தசாகரர் இயற்றினார்.
- இந்நூலுள் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் இயல்கள் அமைந்துள்ளன.
'காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்' என்னும் கூற்று.
யாப்பருங்கலக் காரிகையின் பெருமையையும் அதன் யாப்பைக் கற்பதின் கடினத்தையும் உணர்த்தும். இந்நூலாசிரியர், யாப்பருங்கலம் என்னும் மற்றோர் இலக்கண நூலையும் படைத்துள்ளார்.
யாப்பருங்கலக்காரிகை உரை எழுதியவர் குணசாகரர்.
வீரசோழியம்
- தொல்காப்பியத்திற்குப் பின்னர், ஐந்திலக்கண அமைப்பிலமைந்த நூல், வீரசோழியம்.
- இந்நூல், ஐந்து அதிகாரத்தையும் பத்துப் படலத்தையும் கொண்டுள்ளது.
- அதன் ஆசிரியர் புத்தமித்திரர்.
- இந்நூல் வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டுக்கும் இலக்கணம் கூற முற்படுகிறது.
தண்டியலங்காரம்
- 'தமிழில்' அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும்.
- தண்டி என்பவரால் வடமொழியிலுள்ள "காவ்யதர்சம்" என்னும் நூலைக்கழுவி, இந்நூல் எழுதப்பெற்றது.
- இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டுள்ளது.
- பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
- பொருளணியியவில், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன:
- சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
- பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுன் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாறனலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.
நேமிநாதம்
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மற்றொரு நூல் நேமிநாதம்.
இந்நூல், தொல்காப்பிய எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் சுருக்கமாகக் கூறுவதனால் 'சின்னூல்' என்று அழைக்கப்படுகிறது.
வெண்பாவால் அமைந்த நேமிநாதம் நூலைக் கற்றபின்னரே, தொல்காப்பியத்தைக் கற்கும் நடைமுறை இருந்தமை இந்நூலின் சிறப்பைப் புலப்படுத்தும்.
இதனை எழுதியவர் குணவீரபண்டிதர் ஆவார். இவர், 'வச்சணந்தி மாலை' என்றழைக்கப்படும் வெண்பாப் பாட்டியல் நூலையும் இயற்றியுள்ளார்.
நன்னூல்
தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும்,இலக்கண நூல், நன்னூல். தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும்கொண்டு விளங்குகிறது.
- நன்னூல் என்பது நன்மை + நூல்.
- இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவது எனச் சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகிறது.
- ஆனால் இன்று கிடைத்துள்ளவை எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்கள் மட்டுமே.
- இந்த இலக்கண நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார்.
நன்னூலில் எழுத்ததிகாரமும்,சொல்லதிகாரமும் உள்ளன. இந்நூலுள் அமைந்துள்ள பொதுப் பாயிரம் (முகவுரை) நல்ல நூலுக்குரிய இலக்கணம், பத்து அழகு, பத்துக்குற்றம், நல்லாசிரியர், ஆசிரியர் ஆகாதவர் ஆகியோரது இலக்கணம், நல்ல மாணாக்கர், மாணாக்கர் ஆகாதவரின் இயல்புகள், பாடங்கற்பிக்கும் முறை, கற்கும் முறை ஆகியன குறித்து விரிவாகக் கூறியுள்ளது. தொல்காப்பியத்தின் பாயிர உரை மேற்கோள்கள், இந்நூலில் இலக்கணச் குத்திரங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
நன்னூலின் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல், தொல்காப்பியத்தின் வளர்நிலையாக அமைந்துள்ளது. இவ்வியல், சொற்களின் கட்டமைப்பைத் தெளிவாக விளக்குகிறது; பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனச் சொற்களைப் பகுத்து விளக்குகிறது.
இந்நூலின் சொல்லதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்றுள்ள, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்னும் நூற்பா. வழக்கிழந்த இலக்கணக் கருத்துகளை நீக்குவதும் புதிய வழக்குகள் சிலவற்றை ஏற்றுக்கொள்வதும் தவறல்ல; காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்குப்பட்டதே இலக்கணம் எனக்கூறி அமைகிறது.
இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கா நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் முதலானோர் உரை கண்டுள்ளனர்.
நம்பியகப்பொருள்
- தம்பி என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் அகப்பொருள் சார்ந்தது.
- இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தியலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம், அகப்பொருள் இலக்கணத்தைத் கதை மாந்தர்களின் கூற்றுவகையாகக் கூற நம்பியகப்பொருள் அகப்பொருள் இலக்கணத்தைத் துறைவகையாக விளக்கிக் கூறுகிறது. அக இலக்கிய நூல்களுக்கு இதன் அடிப்படையிலேயே துறை வகுக்கப்பட்டுள்ளது.
இலக்கண விளக்கம்
இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூவதிகாரமாகப் பகுக்கப்பட்டு, ஐந்திலக்கணமும் கூறுகிறது.
- தொல்காப்பியத்தைப் பின்பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பதால் இந்நூலைக் 'குட்டித்தொல்காப்பியம்' என்றும் அழைப்பர்.
- இந்நூலை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர் ஆவார்.
தொன்னூல் விளக்கம்
- இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவரால் தமிழில் எழுதப்பட்ட இலக்கணநூல் தொன்னூல் விளக்கம்.
- இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணத்தை உடையதாகும்.
இந்நூலாசிரியர், தம்நூலில் நன்னூல் கருத்துகளையே பெரும்பான்மையாக எடுத்தாண்டுள்ளார்.
பாட்டியல் இலக்கண நூல்கள்
சிற்றிலக்கியங்களின் அமைப்பு முதலானவற்றை விளக்க, பாட்டியல் நூல்கள் தோன்றின.
- பாட்டியல் நூல்களுள் முதன்மையானதாகக் கருதப்பெறுவது 'பன்னிரு பாட்டியல்'.
- இஃது எழுத்தியல், சொல்லியல், இனவியல் என மூவியலாக அமைந்துள்ளது.
'வச்சணந்தி மாலை' என்னும் வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் இறையனார் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன, பாட்டியல் நூல்களுள் சிலவாகும்.
தமிழ் இலக்கணம் வகைகள்
உயர்தனிச் செம்மொழியாக தமிழ்மொழி இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
1.எழுத்து 2.சொல் 3.பொருள் 4. யாப்பு 5. அணிஎழுத்து இலக்கணம்
எழுத்துக்களின் பிறப்பு, வகை, தொகை, அவை சொற்களில் இடம் பெறும் முறை முதலானவற்றைக் விளக்கங்களையும் கூறுவது எழுத்து இலக்கணம்.
ஒலி வேறுபாடுகளே வெவ்வேறு எழுத்துகள் தோன்றக் காரணம். மொழிக்கு ஒலி, வரி ஆகிய இரு வடிவங்கள் உள்ளன.ஒலி வடிவம் என்பது பேச்சு மொழியாகும்.வரி வடிவம் அல்லது உருவம் என்பது எழுத்து மொழியாகும்.
எழுத்து இலக்கணம் பிரிவுகள் விரிவாக
சொல் இலக்கணம்
சொல் என்றால் என்ன என்பதையும், அச்சொல்லின் வகை பற்றிய விளக்கங்களையும் கூறுவது சொல்லிலக்கணம்.
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
சொல் இலக்கணம் பிரிவுகள் விரிவாக
பொருள் இலக்கணம்
மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் வகுத்துக்காட்டி விளக்குவது பொருள் இலக்கணம்.
அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர். பொருள் என்பது ஒழுக்கமுறை.
பொருள் இலக்கணம் பிரிவுகள் விரிவாக
யாப்பு இலக்கணம்
தமிழ்ச் செய்யுள்களின் வகைகள் அவற்றை இயற்றும் முறைகள் பற்றி விளக்குவது யாப்பிலக்கணம்.
நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்பர். அதுபோல் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புக்களால் கட்டப்படுவதால் பாடல் யாப்பு எனப்படும்.
யாப்பு இலக்கணம் பிரிவுகள் விரிவாக
அணி இலக்கணம்
செய்யுள் அமைந்திருக்கும் அழகை விளக்குவது அணியிலக்கணம்.
இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.
அணி இலக்கணம் பிரிவுகள் விரிவாக
நினைவுகூர்க
இன்றைக்காலத்தில் செய்யுள் வடிவில் இலக்கண நூல்கள் இயற்றப்பெறவில்லையாயினும் உரைநடை வடிவில் எழுதப்பட்டு வருகின்றன. காலந்தோறும் இலக்கியங்கள் புதுப்புது வடிவங்களில் மாற்றம் பெறும்போது. அவற்றிற்கான இலக்கணங்களும் தோன்றத் தொடங்கியுள்ளன. ஆகவே, இலக்கணத்தின் இன்றியமையாமையை உணர்ந்து, தமிழ்மொழியை வளம்பெறச் செய்வது நம் கடமையாகும் என்பதை நினைவுகூர்க.
TNPSC- ல் கேட்கப்பட்ட கேள்வி
1. வீரமாமுனிவரால் தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூலின் பெயர் என்ன ?
2. வீரசோழியம் ஆசிரியர் பெயர் என்ன ?
3. குட்டித்தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூலின் பெயர் என்ன ?
4. நேமிநாதம் ஆசிரியர் பெயர் என்ன?
Please share your valuable comments