தீவக அணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம். 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

தீவக அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

தீவக அணி 

மக்களுக்கு அழகு அணிகலன்கள் அது சேர்ப்பன போன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள். அத்தகைய அணிகளுள் தீவக அணி பற்றி இங்குக் காண்போம். 

  • தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். 

தீவக அணி என்றால் என்ன?

ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

தீவக அணி எத்தனை வகைபடும்?

தீவக அணியின் வகைகள் - இது மூன்று வகைப்படும்.  

இது, 

  1. முதல்நிலைத் தீவகம், 
  2. இடைநிலைத் தீவகம், 
  3. கடைநிலைத் தீவகம் 

என்னும் மூன்று வகையாக வரும். 

தீவக அணி எடுத்துக்காட்டு

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து
திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து 

சேந்தன - சிவந்தன; 

தெவ் - பகைமை: 

சிலை - வில்; 

மிசை  - மேலே; 

புள் - பறவை; 

பாடலின் பொருள் 

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன. 

அணிப் பொருத்தம் 

வேந்தன் கண் சேந்தன
தெவ்வேந்தர் தோள் சேந்தன
குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
அம்பும் சேந்தன
புள் குலம் வீழ்ந்து
மிசைஅனைத்தும் சேந்தன 

இவ்வாறாக முதலில் நிற்கும் 'சேந்தன' (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது. 

அதனால் இது தீவக அணி ஆயிற்று. 

தீவக அணி

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.