சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகிய முல்லைப்பாட்டு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பாட்டு விளக்கம்
முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது;
முல்லைப்பாட்டு அடிகள்
இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1- 17 அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
முல்லைப்பாட்டு பா
முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது;
முல்லைப்பாட்டு ஆசிரியர்
- இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
முல்லைப்பாட்டு பாடல்கள் விளக்கம்
மழைக்காலத்தில் தமிழர்கள் வாழ்வை எதிர்கெர்ள்கிற இயல்பு
இயற்கைச் சூழல் நமக்குள் இனிய உணர்வுகளைத் தூண்டுகிறது. தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர். மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கெர்ள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சங்க இலக்கியம் படம்பிடித்துக் காட்டுகிறது.
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
அடி: 1-17
சொல்லும் பொருளும்
நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
நேமி - சக்கரம்
கோடு - மலை
கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
நறுவீ - நறுமணம் கொண்ட அரும்புகள்
தூஉய் - தூவி
விரிச்சி - நற்சொல்
சுவல் - தோள்
பாடலின் பொருள்
அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.
துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்: அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின்முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைத் கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர. இப்போது வந்துவிடுவர். வருந்தாதே' என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.
நின் தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே. என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.
விரிச்சி
ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
இலக்கணக்குறிப்பு
மூதூர் - பண்புத்தொகை
உறுதுயர் - வினைத்தொகை
கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை
தடக்கை - உரிச்சொல் தொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
பொறித்த - பொறி + த் + த் + அ
பொறி - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
முல்லை அகத்திணைக்குரிய பொருள்கள்
முதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள்
அன்பின் ஐந்திணைகள்
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை
தேர்ந்தெடுக்க
"பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல்
ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
Please share your valuable comments