தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம்.
பாடத்தலைப்புகள்(toc)
காவற்பெண்டு - ஆசிரியர் குறிப்பு
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
புலி தங்கிய குகை - புறநானூறு
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஒரும்புலிசேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே"- காவற்பெண்டு(code-box)
கவிநடை உரை
பொருள்
எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே! அவனிருக்கும் இடம் யானறியேன்; புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது; ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்!
சொல்லும் பொருளும்
சிற்றில் - சிறு வீடு
யாண்டு - எங்கே
கல் அளை - கற்குகை
ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு
பாடலின் பொருள்
(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, 'அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?' என்று கேட்டாள்.)
நூல் வெளி
புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
- ஔவையார்
- ஆதிமந்தி
- ஒக்கூர் மாசாத்தியார்
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- குடபுலவியனார்
- பாரிமகளிர்
- பேயனார்
- பொன்முடியார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. யாண்டு என்னும் சொல்லின் பொருள்
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
2. 'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ?
இ) யா + உளனோ?
ஈ) யாண்டு + உனோ?
3. 'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கலலளை
ஆ) கல்அளை
இ) கல்லளை
ஈ) கல்லுளை
குறுவினா
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
தம் வயிற்றுக்குத் தாய், புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது என்று உவமையாகக் கூறுகிறார்.
சிறுவினா
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகள்
- எம் சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று என் மகன் எங்கே என்று கேட்கும் பெண்ணே.
- அவனிருக்கும் இடம் நான் அறியேன்.
- புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது;
- ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்.

.png)
Hi Please, Do not Spam in Comments