'பாம்பென்றால் படையும் நடுங்கும் ' என்று சொல்வார்கள். பாம்புகளைப் பற்றி பல சுவையான செய்திகளை இங்கே பார்க்கலாம்.
பாடத்தலைப்புகள்(toc)
பாம்பினம்
பாம்புகள் எந்த வகையை சார்ந்தது?
பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்தவை.
பாம்பினம் தோன்றியது எப்போது?
பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
பாம்புகள் முட்டை போடுமா? குட்டி போடுமா?
- பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன.
- சில பாம்புகள் மட்டும் குட்டி போடும்.
பாம்புகள் எத்தனை வகைப்படும்?
பாம்பு வகைகள்
உலகம் முழுக்க ஈராயிரத்து எழுநூற்று ஐம்பது வகைப்பாம்புகள் இருக்கின்றனவாம்.
இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன?
இந்தியாவில் மட்டும் இருநூற்று நாற்பத்து நான்கு வகைப் பாம்புகள் இருக்கின்றனவாம்.
மேலும், பாம்பு வகைகளில் ஐம்பத்திரண்டு வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உண்டாம்.
பாம்பு, பால் குடிக்குமா ? குடிக்காதா?
குடிக்காது.
பாம்பு விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்குப் போதும்.
மாணிக்கக் கற்கள்
நல்ல பாம்பின் தலையில் மாணிக்கக் கற்கள் வைத்திருக்கிறதென்று சொல்வது வெறுங்கட்டுக்கதை.
பாம்புகளின் பற்கள்
பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால் தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை. அப்படியே விழுங்கிவிடுகின்றன.
பாம்பு, தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருப்பது எதற்குத் தெரியுமா?
தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும்தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.
பாம்பு, ஏன் தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டுகிறது?
பாம்பு, தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும். சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்ளவே அவ்வாறு செய்கிறது.
பாம்புக்குக் காது இருக்கிறதா?
பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. காற்றில் வரும் ஓசைகளைப் பாம்பினால் கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
அப்புறம் எப்படி, பாம்பாட்டியின் மகுடி ஓசையைக் கேட்டுப் பாம்பு ஆடுகிறது?
பாம்பு, மகுடி இசைக்கு ஆடவில்லை. மகுடி வாசிக்கிறவரைக் கண்ணால் பார்க்கிறது. மகுடி அசைவதனைப் போலப் பாம்பும் அதனைப் பார்த்து அசைந்தாடுகிறது. அவ்வளவுதான்.
பாம்பு, எப்படி உழவர்களின் நண்பனாக முடியும் ?
பாம்பு, உழவர்களின் நண்பன்.
பாம்புகளால் உழவர்களுக்குப் பெரிய நன்மைகள் இருக்கின்றன.
வயலில் உள்ள பயிர்களை எலிகள் அழிக்கின்றன. எலிகளை அழிப்பதில் பாம்புகளுக்குப் பெரும்பங்கு உண்டு.
தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதனைத் தடுக்க, இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 இன்படி, சட்டம் நிறைவேற்றி உள்ளது
பாம்புக்கடி முதலுதவி
பாம்பு, யாரையும் தேடிப்போய்க் கடிப்பது இல்லை.
மனிதர்களால் தனக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால்தான் கடிக்கும்.
பாம்புக்கடியினால் இறந்தவர்களைவிட, அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இறந்தவர்களே மிகுதி.
பாம்புக்கடிக்கு ஆளானவர்களுக்கு முதலுதவியாக,
- பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
- கடிபட்ட இடத்திற்குமேல் உடனடியாகக் கட்டுப்போட்டுப் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லுதல் வேண்டும்.
- நச்சுமுறிவு மருந்து கொடுத்தல் வேண்டும்.
இதுவே முறையான முதலுதவி.
இதனை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது.
உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு
இந்தியாவில் உள்ள இராஜநாகம்தான் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.
- 15 அடி நீளமுடையது.
- கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு இது.
- இராஜநாகம், மற்றப் பாம்புகளையும்கூட உணவாக்கிக் கொள்ளும்.
நல்லபாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் (Cobrozin) என்னும் வலிநீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது.
இணைப் பாம்பு பழிவாங்குதல்
ஒரு பாம்பைக் கொன்றால், அதன் இணைப் பாம்பு பழிவாங்கும் என்று சொல்வது உண்டு. இஃது உண்மையன்று. கொல்லப்பட்ட பாம்பின் உடம்பில் இருந்து வெளியேறும் ஒருவகை வாசனைப் பொருள், மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவது இல்லை.
நினைவு கூர்க
முதலில் பாம்பைக் கண்டாலே அடித்துக் கொல்லவேண்டும் என நினைக்கவே கூடாது. பாம்பினால் எந்தத் தொல்லையும் நமக்குக் கிடையாது. அதுவும் ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. நல்லபாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் (Cobrozin) என்னும் வலிநீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது.
2. இந்தியாவில் இருநூற்று நாற்பத்து நான்கு வகைப் பாம்புகள் இருக்கின்றன.
3. பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
TNPSC previous year question
1. கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு
இராஜநாகம்
2. இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றிய ஆண்டு
1972
3. நல்லபாம்பின் நஞ்சு, .... என்னும் வலிநீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது.
கோப்ராக்சின் (Cobrozin)
4. இந்தியாவில் ..... வகைப் பாம்புகள் இருக்கின்றன.
இருநூற்று நாற்பத்து நான்கு 244
5. பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் ...... ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
பத்துக்கோடி
6. உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.
இராஜநாகம்
7. பாம்பு குறித்த தவறான இணை கண்டறி
தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும்தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.
பாம்பு, தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்கிறது.
பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை.
பாம்புகள் இரையை மென்று தின்கிறது. ( சரி - விழுங்கிவிடுகின்றன)
8. பாம்பு வகைகளில் ..... வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உண்டு.
ஐம்பத்திரண்டு
9. உலகம் முழுக்க ........ வகைப்பாம்புகள் இருக்கின்றனவாம்.
ஈராயிரத்து எழுநூற்று ஐம்பது
10. எதற்காக பாம்புகள் கொல்லப்படுவதனைத் தடுக்க, இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 இன்படி, சட்டம் நிறைவேற்றி உள்ளது.
தோல்
Please share your valuable comments